ஐரோப்பாவில் அகதிகள்!
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஐரோப்பாவுக்கு மிகப் பெரிய அளவில் மக்கள் அகதிகளாக இடம்பெயரும் நிலை தற்போது உருவாகியுள்ளது.


இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஐரோப்பாவுக்கு மிகப் பெரிய அளவில் மக்கள் அகதிகளாக இடம்பெயரும் நிலை தற்போது உருவாகியுள்ளது. சுமார் 3.5 லட்சம் பேர் ஐரோப்பாவுக்குள் அகதிகளாக நுழைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். மிக முக்கியமாக, சிரியாவில் இஸ்லாமிய தேசம் நடத்தும் உள்நாட்டுப் போர், எரித்ரிய சர்வாதிகார அரசின் கொடுமை, ஆப்கானிஸ்தான், டார்பர், சோமாலியா, நைஜீரியா ஆகிய நாடுகளிலிருந்து பிழைப்புத் தேடுபவர்கள் என அகதிகள் ஐரோப்பாவுக்கு வந்து குவிந்து கொண்டிருக்கிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் இதை எவ்வாறு சமாளிப்பது என்று புரியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. ஜெர்மனி, சுவீடன் ஆகிய இரு நாடுகளும் அகதிகளுக்கு கதவுகளைத் திறந்துவைக்க, ஹங்கேரி தனது எல்லையில் வேலி அமைத்துக் கொண்டிருக்கிறது. கிறிஸ்தவர்களை மட்டும் அனுமதிக்கிறோம் என்று ஸ்லோவேகியா அறிவித்துள்ளது. 24,000 பேரை நாங்கள் பொறுப்பேற்று காப்பாற்றுகிறோம் என்கிறது பிரெஞ்சு அரசு.
பெரும்பாலான அகதிகள் முஸ்லிம்கள் என்பதால், அந்த கிறிஸ்தவ நாடுகள் பயப்படுகின்றன. "இஸ்லாமிய தேசம்' இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அகதிகள் என்கிற பெயரில் நுழைந்து, தங்களது தேசத்தின் அமைதியைக் குலைத்து விடுவார்களோ என்கிற பயம்தான் அதற்குக் காரணம்.
இதனால் மிக அதிகமாகப் பாதிக்கப்படும் நாடுகள் இத்தாலியும், கிரீஸும்தான். அகதிகளில் பெரும்பாலோர் துருக்கி, சிரியா போன்ற நாடுகளிலிருந்து மத்திய தரைக் கடல் வழியாக முதலில் அடைக்கலம் தேடும் நாடுகள் இவை இரண்டும்தான். இரண்டு நாடுகளுமே ஏற்கெனவே மிகப் பெரிய பொருளாதாரச் சிக்கலில் இருக்கின்றன. போதாக்குறைக்கு அகதிகள் வேறு என்றால், அவர்கள் திணறுகிறார்கள்.
இதில் ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் மட்டுமே வெளிப்படையாக அகதிகளுக்கு ஆதரவாகப் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், அங்கேயுள்ள ஏனைய அரசியல் கட்சிகள் அவருக்கு ஆதரவான மனநிலையில் இல்லை. அகதிகள் வருகையால் ஜெர்மனியின் முகம் மாறிவிடும், வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அச்சம் தெரிவிக்கிறார்கள். ஜெர்மனி அரசு அகதிகளுக்காக நிறுவிய இரண்டு தங்குமிடங்கள் தீக்கிரையாகின.
அகதிகள் கடலைக் கடந்து வந்தபோது ஏற்பட்ட விபத்தில், கரையொதுங்கிய குழந்தையின் சடலம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, அகதிகள் பிரச்னையை மிக நுட்பமாகப் பார்க்க வைத்துள்ளது. இதுமட்டுமே அல்லாமல், இடம்பெயரும் அகதிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நாள்தோறும் 10,000 பேர் அகதிகளாக ஐரோப்பாவில் நுழைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் உலக ஊடகங்களின் கவனத்தைப் பெறச் செய்துள்ளது.
அகதிகள் பிரச்னையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்துப் பேசி முடிவு காண, ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 28 நாடுகளின் பிரதிநிதிகளும் செப்டம்பர் 14-ஆம் தேதி பேசவுள்ளனர். இதில், ஒவ்வொரு நாடும் எவ்வளவு அகதிகளை ஏற்க முடியும், இதற்கான கூடுதல் செலவு எவ்வளவு, இதை எவ்வாறு ஈடு செய்வது என்பது குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதனிடையே, அடைக்கலம் தேடி வருவோர் கடலில் மூழ்கி இறப்பதும்கூட ஓர் உயிர் மீதான தாக்குதல்தான் என்று குறிப்பிட்டுள்ள போப்பாண்டவர், ஐரோப்பாவில் உள்ள ஒவ்வொரு கத்தோலிக்க தேவாலயமும் இரண்டு குடும்பங்களை ஏற்றுப் பராமரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவரது தேவாலயத்தில் இரண்டு குடும்பங்களுக்கு இடம் கொடுக்கவும் செய்துள்ளார். ஐரோப்பா முழுவதிலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளன. இத்தாலியில் மட்டுமே சுமார் 25,000 தேவாலயங்கள்!
அகதிகளால் ஏற்படக் கூடிய கூடுதல் செலவு, ஜெர்மனிக்கு ஆண்டொன்றுக்கு 700 கோடி அமெரிக்க டாலர். இதே நிலைதான் ஒவ்வொரு நாட்டுக்கும். இவர்களுக்கான வேலைவாய்ப்பு மிகப் பெரிய இரண்டாவது நெருக்கடி. மூன்றாவது இவர்களது மதச் சுதந்திரம் குறித்தது. இந்த விவகாரங்கள் அகதிகள் வந்து வாழத் தொடங்கிய சில மாதங்களில் உருவெடுக்கும்; உள்நாட்டு மக்களின் வாழ்க்கையில் இவை இடையூறாகப் பார்க்கப்படும். இது உள்நாட்டு அரசியல் மாற்றங்களுக்கு வித்திடும். பல நாடுகளின் தயக்கத்துக்கு இவைதான் காரணங்கள்.
இலங்கை உள்நாட்டுப் போரின்போது இதே சூழலைத் தமிழகம் சந்தித்தது. அன்றைய தினம் சமூக வலைதளங்கள் இல்லை. கட்செவியோ, முகநூலோ கிடையாது. இருந்திருப்பின், இன்று ஐரோப்பா செல்லும் அகதிகளுக்காக உலகம் எழுப்பும் ஆதரவுக் குரல், இலங்கைத் தமிழர்களுக்கும் மிகப் பெரிய அளவில் கிடைத்திருக்கும்.
ஐரோப்பாவும், ஏனைய உலக நாடுகளும் ஒருங்கிணைந்து சிரியாவில் சமாதானம் நிலவ வழிகோல வேண்டும். விவிலிய காலத்து அளவுக்கு அகதிகள் ஐரோப்பாவை நோக்கி அடைக்கலம் தேடக் காரணம் "இஸ்லாமிய தேசம்' என்பதுதான் உண்மை. அவர்கள் முஸ்லிம்கள் என்பதுதான் ஐரோப்பிய நாடுகளின் தயக்கத்துக்குக் காரணம். இவர்களே கிறிஸ்தவர்களாக இருந்திருந்தால் வலிய அழைத்து வந்து ஐரோப்பிய நாடுகள் அடைக்கலம் தந்திருக்கக் கூடும்.
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்று புறநானூறும், "வசுதைவ குடும்பகம்' (அனைவரும் ஒரே குடும்பத்தினர்) என்று உபநிஷதமும் கூறுகின்றன. இன, மத, மனமாச்சரியங்களை மறந்து அனைவரையும் சகோதரர்களாக ஏற்று, எல்லைகளை அகற்றி "எல்லோரும் ஓர் இனம்; அனைவரும் ஓர் குலம்' என்று சொல்லும் காலம் வரும்வரையில் இதுபோன்ற அகதிகள் பிரச்னைக்குத் தீர்வு இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...