காமன்வெல்த் மனித உரிமை முனைப்பு என்கிற அமைப்பு காவல் துறையில் பணியாற்றும் பெண்களின் நிலைமை பற்றி இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் 2014-15இல் ஓர் ஆய்வை நடத்தியது. மாலத்தீவில் மொத்தக் காவல் துறை பணியினரில் 7.4% பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 6.1%, வங்கதேசத்தில் 4.6% பெண்கள் காவல் துறையில் பணியாற்றுகிறார்கள் என்றால், பாகிஸ்தானில் காவல் துறையில் பணியாற்றுபவர்களில் பெண்கள் வெறும் 0.9% மட்டுமே.
இந்தியாவில் மூன்றே மூன்று மாநிலங்களில் மட்டும்தான் காவல் துறையில் பெண்களின் பங்கு இரண்டு இலக்க விழுக்காட்டை எட்டியிருக்கிறது. அதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம். காவல் துறையில் தமிழகத்தில் 12.42%, இமாசலப் பிரதேசத்தில் 11%, மகாராஷ்டிரத்தில் 10.48% பெண்கள் பணியாற்றுகிறார்கள். யூனியன் பிரதேசங்களை எடுத்துக் கொண்டால், சண்டீகரில் 14.16% பெண்கள் பணியாற்றுகிறார்கள். அஸ்ஸôம் மாநிலத்தில் பெண் காவலர்களின் எண்ணிக்கை ஒரு விழுக்காட்டுக்கும் கீழே என்கிறது இந்த அறிக்கை.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் காவல் துறைப் பணியில் அதிக அளவு பெண்களை நியமிக்க வலியுறுத்தி சுற்றறிக்கை அனுப்பியது. குறைந்தது 33% காவல் துறைப் பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், பெண்களுக்கு எதிரான மனோபாவம் அரசு தளத்திலும், காவல் துறை உயரதிகாரிகள் மத்தியிலும் நிலவுவதால், மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலை யாரும் பொருள்படுத்துவதாகவே தெரியவில்லை.
தொன்றுதொட்டு ராணுவமும், காவல் துறையும் ஆண்களுக்கு மட்டுமேயான பணிகளாகக் கருதப்பட்டு வந்திருப்பதால், மாறிவிட்ட சூழலிலும்கூட பெண்களை ஏற்றுக் கொள்ள முடியாத மனத்தடை காணப்படுகிறது. காவல் துறையைப் பொருத்தவரை, இன்னும் ஜமீன்தாரிய மனப்பான்மையும், காலனிய கால நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. "ஆடர்லி' என்கிற பெயரில் காவல் துறைப் பணியாளர்கள் உயரதிகாரிகளின் பூட்ஸýக்கு பாலீஷ் போடவும், வீட்டு வேலைகளைச் செய்யவும் பயன்படுத்தப்படுவது இன்னமும்கூடத் தொடர்கின்றன என்பதுதான் வேதனையான உண்மை.
மிகக் குறைந்த அளவிலேயே பெண்கள் காவல் துறையில் பணியாற்றுகிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதிலும்கூட சரியான வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பது சந்தேகமே. பல மாநிலங்களில் காவல் துறையில் பணியாற்றுவதற்குத் தேவையான உடல் வலுவோ, உடலமைப்போ இல்லாதவர்கள், பலதரப்பட்ட பரிந்துரைகளின் பேரில் தேர்வு செய்யப்படும் அவலமும் காணப்படுகிறது.
காவல் துறையில் பணியாற்றும் பெண்கள் உரிய முறையில் நடத்தப்படுகிறார்களா என்றால் அதுவும் இல்லை என்பதுதான் வெளியில் சொல்லப்படாத உண்மை. பெண் விசாரணைக் கைதிகளைக் கண்காணிப்பது, அவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வது, பொதுப் பாதுகாப்புக்கு சாலையில் நிறுத்துவது போன்ற பணிகளுக்கு மட்டுமே பெரும்பாலும் அவர்களைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் மென்மையானவர்கள், வேலையில் ஈடுபாடு இல்லாதவர்கள் என்று காவல் துறை மேலதிகாரிகளும், சக ஆண் காவலர்களும் அவர்களாகவே தீர்மானித்து ஒதுக்கி விடுகிறார்கள்.
காவல் துறை எந்த அளவுக்கு ஆணாதிக்கம் மிகுந்ததாகக் காணப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு, பெரும்பாலான காவல் நிலையங்களில் பெண்களுக்குத் தனியான கழிப்பறைகள் இல்லாமல் இருப்பது. இந்த விஷயத்தில் மகளிர் காவல் நிலையங்கள் ஏற்படுத்தி, பெண் காவலர்களின் தேவைக்கேற்ற கட்டமைப்புகளை உருவாக்கிக் கொடுத்திருப்பதற்காக தமிழகம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஏனைய பல மாநிலங்களில் எந்தவிதமான வசதிகளும் கிடையாது.
பெண் காவலர்களை அதிகரிப்பதன் மூலம், காவல் துறையினர் முரட்டுத்தனமானவர்கள், கொடூரமானவர்கள் என்கிற களங்கம் துடைக்கப்பட்டு மனிதாபிமானத்துடன் செயல்படும் துறை என்கிற தோற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. உலகளாவிய அளவில், காவல் துறை பற்றிய கண்ணோட்டம் மாறி வருகிறது. அதிக அளவில் பெண்கள் ஈடுபடுத்தப்படுவதன் மூலம், காவல் துறை அத்துமீறல்கள், காவல் நிலைய வன்முறைத் தாக்குதல்கள் ஆகியவை குறைவதுடன், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் துணிந்து காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதும் அதிகரிக்கக் கூடும்.
காவல் துறையில் பெண்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் அதேநேரத்தில், காவல் துறை உயர் பதவிகளிலும் பெண்களின் எண்ணிக்கையைக் கணிசமாக அதிகரித்தாக வேண்டும். இல்லையென்றால், ஆணாதிக்க சரித்திரம் உள்ள காவல் துறையில், பெண் காவலர்கள் கேவலமாக நடத்தப்படும் சூழல் ஏற்படக்கூடும். பெண் காவலர்கள் வெறும் காட்சி பொம்மைகளாக பயன்படுத்தப்படாமல், ஆண் காவலர்களுக்கு நிகராகக் குற்றப் புலன் விசாரணை உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலும் ஈடுபடுத்தப்படும் சூழல் ஏற்பட வேண்டும்.
காவல் துறையில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, காவல் துறை பற்றிய மக்களின் கண்ணோட்டத்திலும் மாற்றம் ஏற்படும். இதற்கு, பணித் தேர்வு, பதவி உயர்வு ஆகியவற்றிலும், பணிச் சூழலிலும் மாற்றங்கள் ஏற்படுத்தி, பெண்கள் காவல் துறைப் பணியையும் ஆசிரியர், செவிலியர், வங்கி ஊழியர் போன்ற பணிகளைப்போல விரும்பி ஏற்கும் துறையாக மாற்ற வேண்டும்!