புவி வெப்பம் உயர்வதற்கு அடிப்படைக் காரணிகளில் ஒன்றான கரியமில வாயுவை காற்றுமண்டலத்தில் எல்லா நாடுகளும் கலக்கவிடுகின்றன. இதில் இந்தியாவின் பங்கு மிகக் குறைவு. ஆனாலும்கூட, இந்தியா தனது கரியமில வாயுவை 2030-ஆம் ஆண்டின்போது, 2005-ஆம் ஆண்டில் இருந்த அளவில் 35% குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதுமட்டுமல்ல. அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் நிலக்கரி சாரா மின்உற்பத்தியை 40% உயர்த்துதல், பசுமைப் பரப்பை அதிகரிப்பதன் மூலம் மூன்று மில்லியன் டன் கரியமில வாயுவை காடுகளால் உறிஞ்சச் செய்தல் ஆகியனவும் இந்த இலக்குகளில் இன்றியமையாதவை.
உலகம் முழுவதும் வெளியிடும் கரியமில வாயுவின் அளவு 34.5 பில்லியன் டன். இதில் சீனா 9.86 பில்லியன் டன் (28.6%), அமெரிக்கா 5.19 பில்லியன் டன் (15%), ஐரோப்பிய ஒன்றியம் 3.74 பில்லியன் டன் (10.9%), இந்தியா 1.97 பில்லியன் டன் (5.7%) கரியமில வாயுவை வெளிப்படுத்துகின்றன. புவிவெப்பம் அதிகரிக்க இந்தியாவின் பங்கு மிகமிகக் குறைவு.
ஐ.நா. சபையில், புவிவெப்ப மாறுதலுக்கான இந்தியாவின் பங்களிப்பு இலக்கு குறித்த உரையில், இந்தியாவின் விழைவுகள் குறித்து இந்திய அரசு விளக்கும்போதே, "புவிவெப்பம் அதிகமானதற்கு இந்தியாவின் பங்கு ஏதுமில்லை என்றாலும், இப்பிரச்னையில் தீர்வு காண்பதில் பங்கு கொள்ள விரும்புகிறது' என்றே குறிப்பிட்டுள்ளது. ஆனாலும், இந்தியா மிக உயரிய, சொல்லப்போனால் சக்திக்கு மீறிய இலக்கை நிர்ணயித்துள்ளது எனலாம்.
அடுத்த பதினைந்து ஆண்டுகளில் இந்தியாவில் நிகழப்போகும் மாற்றங்கள் கற்பனைக்கு எட்டாதவை. இந்தியாவை வல்லரசாக்கும் முனைப்புடன் உலக நாடுகள் அனைத்தையும் இந்தியாவில் முதலீடு செய்ய அழைக்கின்றோம். மக்கள்தொகை மிக அதிகமாகும். மின்தேவை அதிகமாகும். ஒரு செல்லிடப்பேசி மின்னூட்டம் (சார்ஜர்) மிகக் குறைவான மின்சாரம் என்றாலும் ஓர் ஆண்டு முழுவதும் ஆகும் அளவு சுமார் ஐந்து யூனிட். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நபரும் செல்லிடப்பேசி வைத்துள்ளனர். இதுதவிர, மடிக்கணினியும் சேர்ந்துகொள்கிறது. அனைத்து வீடுகளிலும் குளிரூட்டு வசதி இல்லாமல் அறைகள் அமைக்கப்படுவதில்லை. இப்படியாக மின்தேவை, குளிரூட்டு அறைகள், குளிர்பதனப் பெட்டி ஆகியன எல்லா வீடுகளிலும் கட்டாயமாக மாறும்போது, மின்தேவை ஒருபுறம் பல மடங்கு அதிகரிக்கும். கரியமில வாயுவும் ஒரு பக்கம் அதிகரித்துக்கொண்டே போகும்.
அமெரிக்காவில் மக்கள்தொகை குறைவு. அங்கே ஒரு நபர் ஒரு ஆண்டுக்கு 16.4 டன் கரியமில வாயு வெளியேற்றத்துக்குக் காரணமாகிறார். இந்தியாவில் மக்கள்தொகை மிகமிக அதிகம். உலக மக்கள்தொகையில் 17.5% இந்திய மக்கள்தொகை. ஆனாலும் 2012-ஆம் ஆண்டு கணக்கின்படி, ஓர் இந்தியர் மூலம் 1.6 டன் கரியமில வாயுதான் வெளிப்படுகிறது. இதற்கு அடிப்படைக் காரணம் தற்போது 20% இந்தியர்கள் முறையான வீடுகள் இல்லாமல் இருக்கிறார்கள். 25% இந்திய வீடுகளில் மின்சாரம் இல்லை.
இவர்கள் அத்தனைபேரும் வசிப்பதற்கு வீடுகளைப் பெற்றாலும், அனைத்து வீடுகளும் மின் இணைப்பு பெற்றாலும், உலக நாடுகள் இங்கே தொழில் தொடங்கினாலும்கூட கரியமில வாயுவைக் கட்டுப்படுத்த முடியும் என்று இந்திய அரசு நம்புவது மூன்று காரணங்களால். 1. இந்தியர்கள் இயற்கையான, இயல்பான வாழ்க்கை முறைக்கு மாறுவது எளிது. 2. இந்தியா முழுவதும் குறைவறக் கிடைக்கும் சூரிய ஒளியை மின்சாரமாக்க முடியும். 3. பசுமைப் பரப்பை 30%-ஆக உயர்த்துதல் ஆகியவற்றின் மூலம் இலக்கை எட்டிவிட முடியும் என்று இந்தியா நம்புகிறது.
இந்தியாவில் மறுசுழற்சி ஆற்றல் மூலம் மின்உற்பத்தி அளவை 2022-ஆம் ஆண்டில் 1.75 லட்சம் மெகாவாட் அளவுக்கு உயர்த்துவது என்று அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் ஒரு லட்சம் மெகாவாட் சூரியஒளி மூலமும், 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை காற்றாலைகள் மூலமும் உற்பத்தி செய்ய உள்ளனர். இந்த இலக்கு எட்டப்படுமேயானால், ஆண்டுக்கு 32 லட்சம் டன் கரியமில வாயு வெளிப்பாடு தவிர்க்கப்படும். அனல் மின்நிலையங்களின் மின்உற்பத்தியைக் குறைத்து, கரியமில வாயு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்திவிட முடியும்.
ஒவ்வொரு வீடும் தனக்கான மின்தேவையின் 50%-ஐ சூரியஒளியால் பெறும் அளவுக்கு கூரைகளில் சூரியத்தகடுகள் பொருத்துவதும், தெருவிளக்குகள் அனைத்தும் சூரிய ஆற்றலால் எரியும்படி செய்வதும் மிகப்பெரும் மின்சேமிப்பை ஏற்படுத்தும். அனல் மின்நிலையங்களின் மின்உற்பத்தி நேரடியாக தொழிற்கூடங்களுக்கு மட்டுமே போய்ச்சேர வகைசெய்யும்.
காடுவளர்ப்பு நிதி மற்றும் பராமரிப்புத் திட்ட ஆணையத்தின் மூலம் ஆறு பில்லியன் அமெரிக்க டாலர் அளவு நிதியானது இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. பசுமை நெடுஞ்சாலைக் கொள்கையின் படி 1.4 லட்சம் கி.மீ. தொலைவுக்கு இருமருங்கிலும் மரம் நடப்படவுள்ளது.
இந்திய மக்களால் புவிவெப்பம் அதிகரிக்கவில்லை என்பது உண்மையே. எல்லா வீடுகளிலும் நவீன பயன்பாட்டுப் பொருள்கள் நடைமுறைக்கு வந்தாலும்கூட, புவி மண்டலத்தில் நமது கரியமில வாயு பங்கு மிகக் குறைவாகத்தான் இருக்கும். அரசு ஒருபுறம் அதன் பணிகளைச் செய்தாலும், ஒவ்வொருவரும் குளிரூட்டு இயந்திரப் பயன்பாட்டை சற்று குறைத்தல், பகலிலும் மின்விளக்கு, மின்விசிறி தேவைப்படாத பசுமை வீடுகளை பாரம்பரியமுறையில் வடிவமைத்தல், வாகனப் புகையைக் கட்டுப்படுத்துதல், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மரம் வளர்த்தல் ஆகியவற்றின் மூலம் இந்தியா தனது இலக்கினை எட்ட உதவ முடியும்.
உலகம் இருந்தால்தான் நாம் வாழ முடியும். அதனால் நமக்கும் புவி வெப்பமாதலைத் தடுப்பதில் பங்கு உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
எம்.பி.க்கள் விலகல்! பாஜகவில் சில நாள்கள் மட்டுமே அமைச்சர், பின்னர் சாதாரண பணியாளர்தான்: ஹர்பல் சிங்

சின்ன மருமகள் தொடரில் இணைந்த சுஜிதா!

உ.பி.: மாணவனைத் தாக்கிய பள்ளித் தலைமை ஆசிரியர் கைது
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

