நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

காலத்துக்கேற்ற மாற்றம்!

இனி மசோதாக்கள், பட்ஜெட் உரைகள், பல்வேறு துறைகளின் ஆண்டறிக்கைகள், அன்றாடம் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகள் மற்றும் அதற்கு துறை சார்ந்த அமைச்சர்கள் அளிக்கும் பதில்கள் என எல்லாமும், நாடாளுமன்ற அவைகளில் வைக்கப்பட்ட அடுத்த வினாடியே, இணையத்தின் மூலம் அதன் உறுப்பினர்களுக்கும் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் ஊடகங்களுக்கும் கிடைக்கும்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:39 am

ஆசிரியர்

நவம்பர் 26-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அம்சமாக, "தாள்கள் இல்லா அலுவல்' (பேப்பர்லெஸ் ஆஃபிஸ்) முழு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
 இனி மசோதாக்கள், பட்ஜெட் உரைகள், பல்வேறு துறைகளின் ஆண்டறிக்கைகள், அன்றாடம் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகள் மற்றும் அதற்கு துறை சார்ந்த அமைச்சர்கள் அளிக்கும் பதில்கள் என எல்லாமும், நாடாளுமன்ற அவைகளில் வைக்கப்பட்ட அடுத்த வினாடியே, இணையத்தின் மூலம் அதன் உறுப்பினர்களுக்கும் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் ஊடகங்களுக்கும் கிடைக்கும்.
 வழக்கமாக எப்போதும் நாடாளுமன்ற வளாகத்தில், உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய பட்ஜெட் உரைகள், வரைவு மசோதாக்கள் என எல்லாமும் கட்டுக்கட்டாக கொண்டு வந்து இறக்கி, அதனை வெடிகுண்டு நிபுணர்கள் சோதித்து உள்ளே அனுப்பி, ஒவ்வொரு உறுப்பினரும் அதைத் தூக்கிக்கொண்டு போகும் நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
 அவ்வப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் சிறுகுறிப்புகள் கூட, அனைத்து உறுப்பினர்களுக்கும் இணைய குறுந்தகவல் வசதி மூலம் அனுப்பப்படும். இதற்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 4ஜி தொழில்நுட்பத்துக்கான வை-ஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை இணைய மேடைகளும் புதிய நடைமுறைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
 இதற்கான நடைமுறைகள் 2011-ஆம் ஆண்டிலேயே தொடங்கின. அப்போதைய மக்களவைத் தலைவர் மீரா குமார் உத்தரவின்பேரில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆப்பிள் ஐ-பாட்2 அல்லது சாம்சங் காலக்ஸி டேப் 7.1 ஆகிய ஏதேனும் ஒன்றை வாங்கிக்கொள்ளலாம், அதற்கான பணத்தை ஈட்டுறுதி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. மெல்ல மெல்ல சிறுசிறு மாற்றங்கள் செய்யப்பட்டு, தற்போது நாடாளுமன்ற நடைமுறைகள் அனைத்தும் தாள்கள் இல்லா அலுவலாக மாற்றப்பட்டுவிட்டன.
 2011-இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், நாடாளுமன்றம் நடைபெறும் நாளில் ஓர் உறுப்பினருக்கு சராசரியாக 200 தாள்கள் கொண்ட பல்வேறு அறிவிக்கை, ஆண்டறிக்கை வழங்கப்படுவது தெரியவந்தது. மக்களவையில் 525 உறுப்பினர்களுக்கும் ஒரு நாளைக்கு 1,05,000 தாள்கள் தினமும் அளிக்கப்பட்டன. இவற்றை பல உறுப்பினர்கள் திருப்பிக்கூட பார்ப்பதில்லை. இதே நிலைமைதான் மாநிலங்களவையிலும். இந்த அறிவிக்கை மற்றும் மசோதாக்களை அச்சிடுதல், கம்பி அணைத்தல், கட்டுதல் போன்றவற்றுக்கு ஆகும் செலவுகளோ பல கோடி ரூபாய்.
 அப்போதைய திட்டக் குழு ஒரு தகவல் அளித்திருந்தது. அதில், திட்டக் குழு ஆண்டறிக்கை சுமார் 200 பக்க அளவில், ஆங்கிலத்தில் 1500 பிரதிகளும், இந்தியில் 800 பிரதிகளும் அச்சிடப்படுவதாகவும், இதில் பாதிக்கும் மேற்பட்ட பிரதிகள் பயன்பாடு இல்லாமல், பெறுவார் யாருமின்றி கிடங்குக்கு அனுப்பப்படுவதாகவும் தெரிவித்திருந்தது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இந்த நிலைதான் எல்லா அமைச்சகத்தின், துறைகளின் அறிக்கைகளுக்கும் நேர்ந்துகொண்டிருந்தன.
 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கேள்வி - பதில்கள் போல அர்த்தமற்ற நடைமுறை வேறு எதுவுமே இல்லை. ஓர் உறுப்பினர் தனது கேள்வி இடம்பெற்றுள்ளதா, என்ன பதில் என்கிற அந்த பகுதியைத் தவிர மற்ற எதையும் படிக்க விருப்பமில்லாதவராக இருக்கிறார். இந்நிலையில் இதனை அச்சிட்டு வழங்குவது அர்த்தமில்லாத, பொருள்செலவுகூடிய நடைமுறை என்று நாடாளுமன்ற அலுவலர்களும் குறை கூறிக்கொண்டிருந்தனர்.
 சில மசோதாக்களை பிழை திருத்தி, அச்சிட்டு வழங்க ஓரிரு வாரங்கள் ஆகும். ஆனால், தற்போது உடனடியாக இணையத்தில் அளிக்க முடியும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் தாங்கள் பேசிய பேச்சின் நகல் வேண்டும் என்று கேட்டுக் காத்திருக்கத் தேவையில்லை. இணையத்தின் மூலமே கேட்டால் போதும், இணையத்தின் மூலம் உடனடியாக அவரது உரை வந்து சேரும். அதை அவர் தான் விரும்பும் உள்ளூர் ஊடகங்களுக்கு அப்படியே மடைமாற்றினால் (ஃபார்வர்டு) போதும்.
 அரசு அறிவிப்பாணைகள் (கெசட்) அனைத்தும் இனி அச்சிட்டு வழங்க வேண்டிய அவசியமில்லை. அவற்றை இணையத்தின் மூலமே அளிக்கலாம் என்கிற நடைமுறையை அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தியிருக்கிறார் மத்திய நகர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு. இதன் மூலம் ஆண்டுக்கு 90 டன் தாள் மிச்சமாகும். ரூ.40 கோடி வரை அரசுக்கு செலவு குறையும் என்று தெரிவித்துள்ளார்.
 எல்லா அரசுத் துறை இணையதளங்களிலும் இந்த அறிவிப்பாணைகளை உடனுக்குடன் வெளியிடவும், விருப்பமுள்ளவர்களும் அச்சில் வேண்டும் என்பவர்களும் தனிப்பட்ட முறையில் கணினியில் அச்சிட்டுக்கொள்ள வகை செய்யுங்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அண்மையில், உச்சநீதிமன்றமும்கூட, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்களை குறுந்தகட்டில் பதிவு செய்து வழங்கலாம் என்று அனுமதித்துள்ளது. இத்தகைய மாற்றங்களால் அச்சுச் செலவு குறையும், ஆயிரக்கணக்கான மரங்கள் தப்பிப் பிழைக்கும்.
 தற்போது நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள நடைமுறையை தமிழக சட்டப்பேரவையும் கொண்டுவரலாம். முழு நடவடிக்கைகளையும் இணையத்தின் வழியாக நடத்தலாம். இன்றைய சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் நவீன செல்லிடப் பேசிகள் வைத்துள்ளனர். அதை முழுமையாகப் பயன்படுத்தவும் தெரிந்திருக்கிறார்கள். ஆகவே, இத்தகைய நடைமுறையை அனைவரும் வரவேற்பார்கள்.
 தொழில்நுட்ப பயன்பாடு என்பது அரசின் நிர்வாகச் செலவை கணிசமாகக் குறைக்க உதவும். இணையவழி ஏலம், அனுமதி போன்றவை ஊழலையும், முறைகேடுகளையும்கூடக் கட்டுப்படுத்தும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.