பா.ஜ.க. அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி முன்வைத்த பல குற்றச்சாட்டுகளில் மிகக் கடுமையானது இதுவாகத்தான் இருக்க முடியும்: "அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், அதன் உருவாக்கத்தில் பங்கு வகிக்காதவர்கள் இன்று அதன் மீது உறுதிமொழி ஏற்கிறார்கள், அதற்கு உரிமை கொண்டாடுகிறார்கள்'
1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி இந்திய அரசியல்சாசனம் ஏற்கப்பட்டதை நினைவுகூரும் விதமாகவும், அரசியல்சாசனத்தை வடிவமைத்த சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 125-ஆம் ஆண்டை நினைவுகூரும் வகையிலும், நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல்நாள் சிறப்பு நிகழ்வில் சோனியா காந்தி முன்வைத்திருக்கும் ஆதங்கம் இது.
அண்மைக்கால சம்பவங்களால் இந்திய அரசியல்சாசனத்தின் நோக்கங்களும் லட்சியங்களும் கேள்விக்குறியாகியுள்ளன என்று சோனியா காந்தி விவாதிப்பதில் எந்தத் தவறும் இருக்க முடியாது. அது அவருடைய அரசியல் விமர்சனப் பார்வை. அதைச் சொல்ல அவருக்கு உரிமை உள்ளது.
ஆனால், நாடு விடுதலை பெற்று 68 ஆண்டுகள் கடந்த பின்னர், ஒரு நாட்டின் அரசியல்சாசனத்தின் உருவாக்கத்தில் பங்கு பெறாதவர்கள் மட்டுமே ஆட்சியாளர்களாக இருப்பார்கள் என்கிற அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல், உருவாக்கத்தில் பங்கு பெறாதவர்கள் என்பதால் அரசியல்சாசனத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் உறுதிமொழி ஏற்கிறார்கள் என்று குற்றம் சொன்னால், அது பா.ஜ.க.வினரை மட்டுமல்ல, அனைத்துக் கட்சியின் உறுப்பினர்கள் மீதான தாக்குதலாகவும் அமையும்.
இப்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக முன்வைக்கும் கருத்து, "சகிப்புத்தன்மையின்மை' என்பதுதான். அரசியல்சாசனத்தின் முன்னுரையில் இடம்பெறுகிற "மதச்சார்பற்ற', "சோஷலிச' என்கிற சொற்களில், "மதச்சார்பற்ற' என்ற சொல்லின் நோக்கத்தை அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது என்பதுதான் இந்த "சகிப்புத்தன்மையின்மை' குற்றச்சாட்டின் பின்புலம்.
இந்த "மதச்சார்பற்ற', "சோஷலிச' என்ற சொற்கள் பாபாசாகேப் அம்பேத்கர் தாக்கல் செய்த அரசியல்சாசனத்தில் கிடையாது என்பது சோனியா காந்திக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அவசரநிலைச் சட்டம் நடைமுறையில் இருந்த 1976-ஆம் ஆண்டு 42-ஆவது அரசியல்சாசனத் திருத்தத்தின் மூலம் பிரதமர் இந்திரா காந்தி அரசால் அரசியல்சாசன முன்னுரையில் சேர்க்கப்பட்டவைதான் இந்த இரண்டு வார்த்தைகளும்.
அரசியல்சாசன முன்னுரையில் "சோஷலிச', "மதச்சார்பற்ற', கூட்டாட்சி என்ற சொற்களைச் சேர்க்க வேண்டும் என்று 1946-ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய சபையில் கே.டி. ஷா என்பவர் திருத்தம் கொண்டுவந்தபோது, அதற்குப் பதில் அளித்த டாக்டர் அம்பேத்கர் அதை எதிர்த்தார். "மதச்சார்பற்ற', "சோஷலிச' என்ற வார்த்தைகளைச் சேர்த்தால் அது ஜனநாயகத் தன்மைக்கு எதிராக அமைந்துவிடும். மக்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை அரசியல்சாசனம் தீர்மானிக்கக் கூடாது என்பது அவரது கருத்தாக இருந்தது. "இந்த அரசியல்சாசனத்திலேயே இதற்கான கூறுகள், மக்களுக்கான அடிப்படை உரிமைகளில் அடங்கியுள்ளன. இந்தச் சொற்களை சேர்ப்பதென்பது தேவையற்றது' என்று விளக்கிப் பேசினார். உறுப்பினர்களால் அந்த மாற்றம் வலியுறுத்தப்படவில்லை.
காலத்துக்கேற்ப அரசியல்சாசனத்தில் திருத்தம் கொண்டுவருவது தேவைதான். ஆனால், அது மக்களின் தேவையாக, ஒருமித்த கருத்தாக இல்லாமல், தனிப்பட்ட அரசியல் விழைவுகளுக்காகவும் நன்மைகளுக்காகவும் இருக்குமெனில், அதன் பாதிப்புகள் எப்படியிருக்கும் என்பதற்கு 1976-இல் அன்றைய இந்திரா காந்தி தலைமையிலான அடக்குமுறை அரசின் அரசியல்சாசன முன்னுரைத் திருத்தமே சான்று.
"மதச்சார்பற்ற' என்ற சொல் அரசியல்சாசன முன்னுரையில் சேர்க்கப்பட்ட பிறகுதான் இந்திய அரசியல், மதச்சாயம் கொள்ளத் தொடங்கியது. மதம் கொண்டவர்கள் மதத்தைக் கையில் எடுத்தார்கள். மதத்தின் மீது நம்பிக்கை இல்லாத பொதுவுடைமைவாதிகளும் மதச்சார்பற்று மதத்துக்குத் துணை நிற்கிறார்கள். ஓர் எதிர்வினைச் சொல், இந்தியாவுக்கு செய்வினையாக மாறிவிட்டது.
அரசியல்சாசன உருவாக்கத்தில் பங்கு பெற்ற கட்சிகள் காங்கிரஸ், முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சி, ஐக்கியக் கட்சி மற்றும் பட்டியல் வகுப்பினர் கூட்டமைப்பு ஆகியவை மட்டுமே. இதில் 63% உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். அனைவருக்கும் வாக்குரிமை முறையில் அமைந்ததல்ல அரசியல் நிர்ணய சபை. பிராந்திய சட்டப்பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்தான் அங்கத்தினர். இப்போதைய மாநிலங்கள் அவைபோல.
அரசியல்சாசன உருவாக்கத்தில் பங்கு வகிக்காத சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க., பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட, காங்கிரûஸயும் இடதுசாரிகளையும், முஸ்லிம் லீகையும் தவிர அநேகமாக அனைத்துக் கட்சிகளும் அரசியல்சாசனத்தின்மீது உறுதிமொழி எடுத்துக் கொள்ளவோ ஆட்சியில் அமரவோ கூடாது என்று சொல்கிறாரா சோனியா காந்தி? சோனியா காந்தியின் கூற்று பா.ஜ.க. மீது மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்துக் கட்சியினரையும், நாடாளுமன்ற அனைத்து உறுப்பினர்களையும்கூட அவமதிப்பதுபோல இருக்கிறது.
அரசியல் காழ்ப்புணர்வு இருந்துபோகட்டும். அரசியல்சாசனத்தை முன்வைத்துக் காழ்ப்புணர்வைக் காட்டுவது முறையல்ல. அது இருதலைக்கொள்ளி, எடுத்தவரையும் சுடும்!