மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

தேவையற்ற சுமை!

மத்திய அரசில் பணிபுரியும் 47 லட்சம் அரசு ஊழியர்கள், 52 லட்சம் ஓய்வூதியர்கள் எதிர்பார்த்தபடியே, ஏழாவது ஊதியக் குழு தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சில நாள்களுக்கு முன்பு வழங்கியது. 23.55% ஊதிய உயர்வும், ஓய்வூதியர்களுக்கு 24% உயர்த்தி வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:36 am

ஆசிரியர்

மத்திய அரசில் பணிபுரியும் 47 லட்சம் அரசு ஊழியர்கள், 52 லட்சம் ஓய்வூதியர்கள் எதிர்பார்த்தபடியே, ஏழாவது ஊதியக் குழு தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சில நாள்களுக்கு முன்பு வழங்கியது. 23.55% ஊதிய உயர்வும், ஓய்வூதியர்களுக்கு 24% உயர்த்தி வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த பரிந்துரைகளால் மத்திய அரசுக்கு மாதத்துக்கு ரூபாய் ஒரு லட்சம் கோடி கூடுதல் செலவு ஏற்படும். ஆனாலும் இதை மத்திய அரசு எந்த மாற்றமும் இன்றி அப்படியே அமல்படுத்தவுள்ளது. இந்தப் புதிய ஊதிய, ஓய்வூதியச் செலவினங்கள் அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை (ஜி.டி.பி.) 0.7% வரை அதிகரிப்பதாக இருக்கும்.
 மத்திய அரசில் இனி குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18,000-மும் அதிகபட்ச ஊதியமாக, அமைச்சரவைச் செயலர் பதவி உள்ளிட்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ரூ.2.25 லட்சம் வரையும் மாத ஊதியம் கிடைக்கும். ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையில் குறிப்பிடத்தக்க மாற்றம் என்னவென்றால், காலத்துக்குப் பொருந்தாத 52 படிகள் (அலவன்ஸ்) நீக்கப்பட்டிருப்பதுதான். அதேபோன்று, ஊழியர் விடுப்புகளில் சில புதிய மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது.
 இந்தக் குழுவினர் இரண்டு செயல்பாடுகளுக்கு அழுத்தம் தந்திருக்கிறார்கள். முதலாவது, தகவல் தொழில்நுட்பத்தால் உழைப்பின் பளு கணிசமாக குறைந்துள்ளது என்பதால், கொடுக்கப்படும் சம்பளத்துக்கு ஏற்ப வேலைப் பளுவை மாற்றி, இன்றைய காலத்துக்கு ஏற்பவும், பெறுகின்ற சம்பளத்துக்கு ஏற்பவும் உற்பத்தி சார்ந்ததாக மாற்ற வேண்டும்; பணியாளர்களை நியமிப்பதில் தகுதி வழிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஆலோசனை செய்துள்ளனர். ஆள்குறைப்பு செய்துவிடக் கூடாது என்பதை கவனத்தில் கொண்டு வேலை செய்யும் நிலையே அரசுப் பணியாளர்களிடையே உள்ளது. அரசாங்கம் மிகவும் கடின முயற்சிகளால் புதிய வேலைப் பளுவை மெல்ல மெல்ல, கெஞ்சி கெஞ்சி உயர்த்த வேண்டியிருக்கிறது.
 ஊதியம் அதிகரித்தால் திறனுறு ஊழியர்கள் அரசுப் பணிக்கு வருவார்கள் என்பது ஊதியக் குழுவின் மற்றொரு ஆலோசனை. இந்தியாவில் அரசு ஊழியராக சேர்ந்துவிட்டால் அதன் பிறகு கடைசி மூச்சு உள்ளவரையில், பாதுகாப்பான வாழ்க்கை உறுதி என்பதும், ஊழல் செய்யும் அதிகாரிகள், ஊழியர்களை தண்டிப்பது சிரமம் என்பதும், திறமையில்லாவிட்டால் ஓரம்கட்டுவார்களே தவிர, வேலைநீக்கம் செய்யமாட்டார்கள் என்ற உத்தரவாதமும்தான் அரசு வேலைக்கான கனவை விதைக்கிறது. ஊதியம் அதிகரிக்கப்படுவதால் திறமை அதிகரிக்கும் என்றோ, ஊழல் குறைந்துவிடும் என்றோ, கையூட்டுப் பெறுவதை நிறுத்தி விடுவார்கள் என்றோ நினைத்தால் அது ஏமாற்றத்தில்தான் முடியும்.
 உலக வங்கியின் புள்ளிவிவரப்படி, பெரும்பாலான நாடுகளில் அரசு ஊழியர்களின் ஊதியம் குடிமகனின் சராசரி வருமானத்தைவிட அதிகபட்சம் இரண்டு மடங்கு மட்டுமே. ஆனால் இந்தியாவில், அவர்கள் இந்தியக் குடிமகனின் சராசரி வருமானத்தைவிடப் பத்து மடங்குக்கு அதிகமாகச் சம்பளம் பெறுகிறார்கள். எல்லா அரசு ஊழியர்களும் கையூட்டுப் பெறுபவர்கள் அல்லதான். ஆனால் பெங்களூரு இந்திய நிர்வாகவியல் நிறுவனம் செய்த ஆய்வுப்படி, அரசு ஊழியர்கள் கையூட்டாகப் பெறும் தொகை ஆண்டொன்றுக்கு ரூ.1,53,000 கோடி. இது அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தைவிட நான்கு மடங்கு!
 ஊதியக் குழு அளித்துள்ள ஊதிய உயர்வில் அரசு ஊழியர் சங்கங்களுக்கு முழு திருப்தி இல்லை. ஒவ்வொரு சங்கமும் ஒரு குறையை முன்வைக்கிறது. ஊழியர் சங்கங்கள் சொல்லும் குறைபாடுகள் அனைத்தையும் ஊதியக் குழுவே விவாதித்து, தற்போதைய முடிவைக் காரணங்களுடன் நிறுவியுள்ளது. சில இனங்களில், 50% அகவிலைப் படியை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கும்போது, ஊதியம் மற்றும் சலுகையில் 25% மாற்றம் செய்யவும் ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது. அத்தனை எளிதாக, போகிறப் போக்கில் மாத்தூர் தலைமையிலான ஊதியக் குழுவின் பரிந்துரைகளைக் குறை சொல்லிவிட முடியாது.
 மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதிய உயர்வு பல தேவையற்ற சுமைகளையும், பிரச்னைகளையும் அரசுக்கு ஏற்படுத்தக் கூடியது. மத்திய அரசைத் தொடர்ந்து மாநில அரசுகளும் ஊதிய உயர்வை அறிவித்தாக வேண்டும். இதனால் பல மாநில அரசுகள் திவாலாகப் போகின்றன. விலைவாசி அதிகரிக்கப் போகிறது.
 5-ஆவது ஊதியக் குழு அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை அடுத்த 10 ஆண்டுகளில் 30% குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. அப்படிச் செய்திருந்தால், அதிகப் பணிச்சுமை என்கிற காரணத்தால் இந்த ஊதிய உயர்வை ஏற்றுக் கொள்ளலாம்.
 தனியார் துறைக்கு நிகரான ஊதியம் அரசு ஊழியர்களுக்கும் வேண்டும் என்கிற கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக் கொள்பவர்கள், திறமையற்ற ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதன் நியாயத்தை ஏற்றுக் கொள்வார்களா? மக்களின் வரிப்பணத்தில் பெரும் பகுதி அரசு ஊழியர்களுக்கு ஊதியமாகத் தரப்படும்போது, வளர்ச்சிப் பணிகளுக்கு அரசிடம் பணம் ஏது?
 ஆறாவது ஊதியக் குழு 2006 அக்டோபர் மாதம்தான் ஏற்படுத்தப்பட்டது என்பதால், நியாயமாக இந்த ஏழாவது ஊதியக் குழு அடுத்த ஆண்டுதான் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் முந்தைய மன்மோகன் சிங் அரசு, தில்லி சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டும், மத்திய அரசு ஊழியர்களின் வாக்கு வங்கியைக் குறிவைத்தும், 2014-இல் ஊதியக் குழுவை அறிவித்தது. எந்தவிதக் காலவரம்பும் ஊதியக் குழு அமைக்கத் தேவையில்லை என்று 11-வது நிதிக் குழு தெளிவாக அறிவித்தும்கூட, அரசியல் ஆதாயத்திற்காகப் பொருளாதாரத்தை பாதிக்கும் முடிவுகளை ஆட்சியாளர்கள் எடுக்கிறார்கள். இந்த நேரத்தில் இந்த ஊதிய உயர்வு அனாவசியம்!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.