கரும்பு விவசாயிகளுக்கு உற்பத்தியுடன் இணைந்த மானியமாக குவிண்டாலுக்கு ரூ.4.50 வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நிதித் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ள சர்க்கரை ஆலைகளுக்கு உதவும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2015-16ஆம் ஆண்டின் சர்க்கரை அரைவைக் காலத்திற்கு இத்திட்டம் பொருந்தும். இதனால், அரசுக்கு ரூ.1,147 கோடி கூடுதல் செலவாகும்.
ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 700 குவிண்டால் கரும்பு உற்பத்தி செய்ய முடியும் என்பதால், மத்திய அரசின் இந்த அறிவிப்பின் மூலம் கரும்பு விவசாயி ஒருவர் சராசரியாக ரூ.2,000 மானியமாகப் பெறுவார் என கணிக்கப்படுகிறது. இந்த மானியம் நேரடியாக அவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடைபெறும் என்றால், இனி அனைத்து மானியங்களும் விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துவது அமலுக்கு வந்துவிடும்.
விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய, அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச நியாய விலை குவிண்டாலுக்கு ரூ.230 வழங்கப்படும்போது, இந்த மானியத்தை ஆலைகள் குறைத்துக்கொண்டு வழங்கும்.
தற்போது மத்திய அரசு நேரடியாக வழங்கியுள்ள ரூ.4.50 மானியத்தைப் போலவே, மாநில அரசுகள் வழங்கும் ஊக்கத் தொகையையும் நேரடியாக கரும்பு விவசாயிகளின் கணக்கில் சேர்க்கும் நடைமுறை வருமேயானால், விவசாயிகள் மேலும் நன்மை பெறுவர்.
நிதிப் பற்றாக்குறையில் இருக்கும் சர்க்கரை ஆலைகளுக்கு உதவும் எண்ணத்துடன் இத்திட்டம் அறிவிக்கப்பட்டாலும்கூட, அரசு ஒவ்வொரு சர்க்கரை ஆலைக்கும் நிர்ணயித்துள்ள சர்க்கரை ஏற்றுமதி அளவில் 80%-ஐ பூர்த்தி செய்த, எத்தனால் கடப்பாட்டில் 80% பூர்த்தி செய்த ஆலைகளின் விவசாயிகளுக்கு மட்டுமே இந்த மானியம் வழங்கப்படும்.
2015-16 சர்க்கரை அரைவை காலத்தில் 40 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. சர்க்கரை ஆலைகளின் கடந்த மூன்று ஆண்டு செயல்பாட்டில் சராசரி அளவை அவர்களது ஏற்றுமதி இலக்காக நிர்ணயித்துள்ளனர்.
சர்க்கரை ஏற்றுமதிக்கு கடந்த காலங்களில் மத்திய அரசு ஆலைகளுக்கு வழங்கிய மானியத்தொகை கடந்த இரு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுவிட்டது. உலக வர்த்தக நிறுவனம் (டபிள்யு.டி.ஓ) இவ்வாறு ஏற்றுமதிக்கு மானியம் வழங்கி விலை மாறுபாட்டை சமாளிப்பது உலகச் சந்தையில் நியாயமான விலைப் போட்டிக்கு எதிரானது என்று எதிர்ப்பு தெரிவித்ததால், அத்தகைய மானியம் நிறுத்தப்பட்டுவிட்டது.
இருப்பினும், 40 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்தால் மட்டுமே, உள்நாட்டில் சர்க்கரை விலை வீழ்ச்சி அடையாமல் தடுக்க முடியும். வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதும் இயலாமல், உள்நாட்டிலும் விலை வீழ்ச்சி ஏற்பட்டால், சர்க்கரை ஆலைகளுக்கு பெரும் நட்டம் ஏற்படும்.
அமைச்சரவையின் பொருளாதார விவகாரக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்ட பின்னர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், ரூ.6,500 கோடி வரை கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் தரவேண்டிய தொகை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அரசின் இந்த முடிவு சிறு ஆறுதலாக அமையும் என்றார். இந்த அளவுக்கு இன்னமும் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் நிலுவை வைத்திருக்கும் நிலையில், உலகச் சந்தையிலும் நல்ல விலை இல்லாத நிலையில், ஏன் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக 260 லட்சம் டன் சர்க்கரையை தேவைக்கும் அதிகமாக உற்பத்தி செய்து வருகிறோம் என்கிற கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை.
சர்க்கரைக்கு உரிய விலை வெளிநாட்டுச் சந்தையில் கிடைக்காத போதும், நாம் மிகையாக சர்க்கரையை உற்பத்தி செய்து, சர்க்கரை ஆலைகளின் உற்பத்திச் செலவுக்கும் விற்பனை விலைக்கும் இடைவெளி குறுகிப்போய், நட்டம் ஏற்படும் என்றால், ஏன் கரும்பு சாகுபடிப் பரப்பைக் குறைத்துக்கொள்ளக் கூடாது? ஒரு ஆண்டு, இரண்டாண்டல்ல ஆறு ஆண்டுகளாக நிலைமை மாறும், உலகச் சந்தையில் விலை உயரும் என்று எதிர்பார்த்து சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது என்கிற பதில், புத்திசாலித்தனமானதாக இல்லை.
பருப்பு உள்ளிட்ட சிறு தானியங்களிலும், நெற்பயிரிலும் கிடைப்பதைவிட அதிக வருவாய் கிடைக்கிறது என்பதற்காகத்தான் விவசாயிகள் கரும்பு சாகுபடிக்கு மாறினார்கள். விதைக் கரும்பை ஆலைகளே தரும், தொழில்நுட்பம் அவர்களே சொல்லித் தருவார்கள், அறுவடை செய்து ஆலைக்குக் கொண்டு செல்ல லாரி வாடகை அவர்களே தருவார்கள், அதிகப் பணமும் கிடைக்கும் என்பதால் கரும்பு ஒரு பணப்பயிர் என்றே அழைக்கப்படுகிறது. ஆனால், பின்னாளில் மெல்ல மெல்லக் கரும்பு விவசாயிகளுக்கு உரிய தொகை முழுமையாகத் தரப்படாமல் நிலுவையில் வைக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இப்படியொரு நிலைமையில் ஏன் கரும்பு சாகுபடிப் பரப்பை சற்று குறைத்துக்கொண்டு, வேறு பயிர்களுக்கு ஊக்கம் தரக்கூடாது?
சந்தை நிலவரம் மற்றும் தற்போதுள்ள சர்க்கரை இருப்பு ஆகியவற்றின் அளவை மதிப்பீடு செய்து, சர்க்கரை ஆலைகள் எவ்வாறு குறிப்பிட்ட அளவு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று கடப்பாடு விதிக்கப்படுகிறதோ, அதேபோன்று சர்க்கரை ஆலைகள் தங்களிடம் உள்ள விவசாயிகளிடம் கரும்பு சாகுபடி பரப்பைக் குறைக்கவும், ஒரு பகுதியைப் பருப்பு, நெல் சாகுபடி செய்யவும் ஊக்குவிப்பதுடன், அதையும் கொள்முதல் செய்வது அல்லது வெளிச்சந்தையில் விற்க விவசாயிகளுக்கு உதவுவது ஆகியவற்றில் ஈடுபடலாம். சர்க்கரைக்கு நல்ல விலை கிடைக்கும்போது, அதே விவசாயிகளிடம் கூடுதலாகக் கரும்பு சாகுபடி செய்ய ஊக்குவிக்கலாம்.
இன்றைய நிலைமை இப்படியே தொடரக் கூடாது. அது ஆலை அதிபர்களுக்கும் நல்லதல்ல, விவசாயிகளுக்கும் நல்லதல்ல, நாட்டுக்கும் நல்லதல்ல!