அவ்வப்போது உலக வரலாற்றில் மாற்றத்தை உருவாக்கும் ஜனநாயக வெற்றிகள் ஏற்படுவதுண்டு. காராகிரகத்திலிருந்து வெளியே வந்து, தேர்தலை எதிர்கொண்ட தென் ஆப்பிரிக்காவின் அதிபரான நெல்சன் மண்டேலா, 2003-இல் ஏழை எளியவர்களின் பிரதிநிதியாக பிரேசில் நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட லூயி இனாசியோ லூலா டா சில்வா, இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 2008-இல் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரக் ஒபாமா வரிசையில் இப்போது நீண்ட நெடுங்கால சிறைவாசத்தைக் கடந்து மியான்மரில் மிகப்பெரிய ஜனநாயக வெற்றியை அடைந்திருக்கும் ஆங் சான் சூகி சேர்கிறார்.
மியான்மரில், ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற போதிலும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம்தான் புதிய அரசு அமையும். அந்த அரசிலும்கூட, ஆங் சான் சூகி மியான்மரின் அதிபர் பதவியில் அமர முடியாது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு மியான்மரில் தேர்தல் நடந்திருக்கிறது. ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட்டதும், பிரச்னை இல்லாமல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றிருப்பதும் மிகப்பெரிய சாதனை. இதற்கு முன்னால் தேர்தலைப் பற்றியே தெரியாத, வாக்களித்திராத பல கிராமங்கள் தேர்தலில் கலந்துகொண்டன என்பது தேர்தல் ஆணையத்தின் முனைப்புக்கும், சமூக ஆர்வலர்களின் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி. 664 இடங்களைக் கொண்ட மியான்மர் நாடாளுமன்றத்துக்கு 6000-த்துக்கும் அதிகமான வேட்பாளர்கள், 90 கட்சிகளின் சார்பில் போட்டியிட்டார்கள்.
70 வயதான ஆங் சான் சூகி, 21 ஆண்டுகள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டவர். கணவர் இங்கிலாந்து நாட்டவர் என்பதால் அவரை ஆங் சான் சூகியைச் சந்திக்கக்கூட அனுமதி கொடுக்கவில்லை ராணுவம். தந்தையால் வளர்க்கப்பட்ட ஆங் சான் சூகியின் இரு மகன்களும்கூட வெகுநாளைக்குப் பிறகுதான் அவரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும், மியான்மரில் ஜனநாயகம் மலர வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து, வித்து முளைக்கும் தன்மையைப் போல, மனம் தளராமல் வீட்டுச் சிறையில் கழித்துத் தனது விடாமுயற்சியால் இந்த உயரத்தை எட்டியிருக்கிறார் ஆங் சான் சூகி.
அதிபராகப் பதவி ஏற்க முடியாது என்றாலும் அதிபருக்கும் மேலான பொறுப்பை ஏற்று வழிநடத்துவேன் என்று ஆங் சான் சூகி கூறியிருக்கிறார். இருப்பினும்கூட, புதிய அரசு அமைந்தவுடன் தற்போதைய விதிமுறைகளில் திருத்தம் செய்து அவரை அதிபர் பதவியில் அமர்த்தும் நடவடிக்கைகள் தொடங்கும் என உலக அரசியல் பார்வையாளர்கள் நம்புகிறார்கள்.
குழந்தைகள் வேற்றுநாட்டு குடிமக்களாக இருந்தால் அதிபர் பதவியை வகிக்க முடியாது என்பது அவருக்காகவே ராணுவத்தால் உருவாக்கப்பட்ட சட்ட விதிமுறை. இந்த சட்ட விதிமுறையை நீக்குவதைக் காட்டிலும் இன்னொரு திருத்தம் மிகமிக அவசியமானது. அதாவது நாடாளுமன்றத்தில் மேலவை, கீழமை அவைகளில் 25% ராணுவத்தினரை நியமிக்கும் உறுப்பினர் முறை நீக்கப்பட வேண்டும். இரு அவைகளும் முழுக்க, முழுக்க மக்களால் தேர்வு செய்யப்படும் நிலை வந்தால்தான் ஜனநாயகம் முழுமையாக மலரும். அத்தகைய மாற்றத்தை 2016-இல் பதவி ஏற்கப்போகும் அரசினால் செய்துவிட முடியாது.
மேலவை, கீழவை இரண்டுக்குமான மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 664 என்ற போதிலும், இதில் ராணுவத்தின் நிரந்தர 25% உறுப்பினர்கள் 166 பேரும், தற்போது ராணுவத்துக்கு ஆதரவான கட்சிகளின் வேட்பாளர்கள் 134 பேருமாக, மொத்தம் 300 பேரும் சேர்ந்து புது அரசுக்குப் பிரச்னைகளைக் கொடுப்பார்கள். புதிய சட்டத் திருத்தங்களுக்கு வாய்ப்பே கிடைக்காது என்ற ஒரு கருத்து இருக்கிறது. அதை மறுப்பதற்கில்லை.
மேலும், தேசீய ஜனநாயக லீக் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி, உறுப்பினர்களை விலைக்கு வாங்கிவிடவும், குதிரை பேரம் நடத்துவதில் ராணுவ ஆட்சியில் பயனடைந்தோர் இறங்கக்கூடும் என்றும் ஓர் எதிர்பார்ப்பு இருக்கிறது. அத்தகைய எதிர்பார்ப்பை பொய்யாக்கும் விதத்தில் அதிபர் தேய்ன் செய்ன், இந்த தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவிக்கையில், 1990-ஆம் ஆண்டில் நடந்த அதே தவறுகள் மீண்டும் நடக்காது, அதிகார மாற்றத்தை மிக இலகுவாக நடத்துவோம் என்று உறுதிகூறியுள்ளார்.
வெற்றிபெற்றவுடன் ஆங் சான் சூகி தனது வாழ்த்துகளுடன் தன் ஆதரவாளருக்கு விடுத்த முதல் கோரிக்கை: தோற்றவர்கள் கோபப்படும்படி செய்யாதீர்கள் என்பதுதான். அதுமட்டுமல்ல; நாம் தேசிய சமரச ஆட்சி நடத்துவோம் வாருங்கள் என்று அதிபருக்கும், நாடாளுமன்ற அவைத் தலைவருக்கும் அழைப்பு விடுக்கவும் செய்துள்ளார். ஆகவே,அவர் மீண்டும் தேய்ன் செய்ன் தொடர்ந்து அதிபராக சில காலம் பதவியில் இருக்கும்படி செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற கருத்து மியான்மரில் வலுவாக இருக்கிறது. ஆங் சான் சூகி இதுவரை யாரையும் அதிபராக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் தேய்ன் செய்ன் இல்லாமல் வேறு யாராகிலும் அதிபர் பதவியில் இருந்திருந்தால், ஆங் சான் சூகி நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியிருப்பது கடினம், இந்தத் தேர்தலில் இந்த அளவுக்கு அவர் பிரசாரம் செய்து, வெற்றி கண்டிருப்பதும் கடினமாக இருந்திருக்கும். ஆகவே, அதிபர் தேய்ன் செய்ன் மீது அவருக்கு நம்பிக்கை உண்டு என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. ராணுவப் பின்னணி கொண்ட ஒரு நபரை அதிபராக நியமிப்பதன் மூலம்தான் படிப்படியாக ஜனநாயகத்தை நிலை நிறுத்த முடியும் என்று ஆங் சான் சூகி கருதுவதாகத் தெரிகிறது.
நம்பிக்கை விடிவெள்ளியாய்த் துளிர்த்திருக்கிறது. ஆங் சான் சூகியின் தியாகத்துக்கு நன்றி!