நேரிடையாக வரி வரம்பைக் குறைக்கவில்லையே தவிர, சமூகப் பாதுகாப்பு தொடர்பாகப் பல சலுகைகளையும், கழிவுகளையும் நிதியமைச்சர் அனுமதித்திருப்பது பாராட்டுக்குரியது. மருத்துவக் காப்பீட்டுக்கான கட்டணத் தொகையைத் தனி நபருக்கு ரூ.15,000-த்திலிருந்து ரூ.25,000-மாக உயர்த்தி இருப்பதும், மூத்த குடிமக்களுக்கு ரூ.20,000-த்திலிருந்து ரூ.30,000-மாக உயர்த்தி இருப்பதும், 80 வயதுக்கு அதிகமானவர்களை முதிர்ந்த குடிமக்கள் என்று வகைப்படுத்தி, அவர்களது மருத்துவக் காப்பீட்டுக்கு சிறப்புச் சலுகை அளித்திருப்பதும் வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்புகள். மூத்த குடிமக்களின் நலனுக்கு வருமான வரிச் சட்டத்தின் மூலம் மருத்துவ வசதிகளையும், ஏனைய நன்மைகளையும் செய்ய முற்பட்டிருப்பது புதிய அணுகுமுறை.