நரசிம்ம ராவ் அரசில் தொடங்கி மன்மோகன் சிங் அரசு வரை, தொழில்வளம் பெருக வேண்டும், அதன்மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும் என்று கூறிவந்தார்களே தவிர, அவர்கள் கவனிக்காமல் விட்டுவிட்ட துறை, எந்தவித ஆதரவும் இல்லாமல் இந்தியா முழுவதும் இயங்கி வரும் சிறு தொழில்கள். தள்ளுவண்டிக் கடை, இஸ்திரி வண்டி, பெட்டிக் கடை, திண்ணையில் நடத்தப்படும் பலசரக்கு, காய்கறிக் கடை, செருப்பு தைப்பது, எலக்ட்ரீஷியன், பிளம்பர் வேலைகள், சைக்கிள் கடை, மோட்டார் மெக்கானிக்குகள், தெருவோர தேநீர்க் கடை, இளநீர் விற்பவர்கள் என்று இந்தியா முழுவதும் சிறிய அளவில் சுயதொழில் செய்து பிழைப்பு நடத்துபவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 6 கோடிக்கும் அதிகம். ஏறத்தாழ 13 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பாகவும், வாழ்வாதாரமாகவும் இந்தச் சுயதொழில்கள் அமைந்திருக்கின்றன.