சில ஆண்டுகளாக ரயில் பெட்டிகளில் தீ விபத்து நடப்பதும், ரயில் பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து தடம் புரளுவதுமான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்துக்கும் ரயில்வே அதிகாரிகள் கூறும் காரணம், ரயில் பெட்டிகள் சரிவரப் பராமரிக்கப்படவில்லை என்பதுதான்.
சரிவரப் பராமரிக்காத ஊழியர்கள் மீது என்ன நடவடிக்கை என்ற கேள்வி எழும் முன்பாகவே, ரயில்வே தொழிற்சங்கங்கள் முந்திக் கொண்டு போதுமான ஆள்கள் இல்லை என்றும், குறுகிய காலத்தில் பெட்டிகளைச் சரிசெய்து தரச் சொல்கிறார்கள் என்றும் தொழிலாளர் வர்க்க நியாயங்களை படபடவென அடுக்கத் தொடங்குகின்றன. யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுத்துவிடக் கூடாது என்பதில் ரயில்வே ஊழியர் சங்கங்கள் காட்டும் முனைப்பை, தவறு நடந்துவிடக் கூடாது, தரம் குறைந்துவிடக் கூடாது என்பதில் காட்டுவதில்லை என்பதை நாம் மறுப்பதற்கில்லை.
இத்தகைய சூழ்நிலையில், இந்திய ரயில்வே துறையில் முதல்முறையாக, "ரயில் பெட்டிகளைத் தயாரித்துத் தரும் நிறுவனமே அடுத்த 7 ஆண்டுகளுக்குப் பெட்டிகளின் பராமரிப்பையும் ஏற்க வேண்டும்' என்கிற நிபந்தனையுடன் உலக அளவிலான ஒப்பந்தப்புள்ளி விளம்பரம் வெளிவந்திருப்பது, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதாக இருக்கும்.
15 புறநகர் மின்தொடர் வண்டிகளுக்காக 315 ரயில் பெட்டிகள் தயாரித்துத் தருவதற்காக உலக அளவிலான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில்தான் இந்தப் புதிய நிபந்தனை முதல்முறையாகப் புகுத்தப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர் சங்கங்களிடையே இந்த நிபந்தனை ரத்தக் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. என்றாலும், இத்தகைய நிபந்தனைக்கு ரயில்வே நிர்வாகம் தள்ளப்பட்டது என்பதுதான் உண்மை.
தற்போது ரயில் பெட்டிகளைத் தூய்மைப்படுத்தும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களைத் தூய்மைப்படுத்தும் பணியும் தனியாரிடம்தான் உள்ளது. ரயில் பெட்டியில் உள்ள மின் சாதனம், குளிரூட்டு சாதனங்கள் ஆகியவற்றின் பராமரிப்பு, பெட்டிகளில் உள்ள படுக்கைகளில் குறைபாடுகளைச் சரி செய்தல், பெட்டியின் அடியில் சக்கரம் உள்ளிட்ட இயந்திரங்களைச் சரி செய்தல் ஆகிய பணிகள் ரயில்வே ஊழியர்கள் மூலமே நடைபெற்று வருகின்றன. ஆனால், இவை நிறைவாக நடைபெறவில்லை என்பதும், விபத்துக் காலங்களில் யாரும் தண்டிக்கப்படாத வகையில் பொறுப்புகள் தட்டிக் கழிக்கப்படுவதாலும் இந்த நிபந்தனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இனிவரும் காலங்களில், புதிதாக வாங்கப்படும் அனைத்து ரயில் பெட்டிகளுக்கும் இந்த நிபந்தனை விதிக்கப்படும் என்பதை எதிர்பார்க்கலாம்.
ரயில்வே ஊழியர் சங்கங்களின் எதிர்ப்புக் குரலுக்குப் பதில் கூறியுள்ள ரயில்வே நிர்வாகம், இந்தப் பராமரிப்பு நிபந்தனை 7 ஆண்டுகளுக்கு மட்டும்தான். அதன் பிறகு, ரயில்வே ஊழியர்கள்தான் பராமரித்து ஆக வேண்டும் என்று கூறியிருக்கிறது. ஒரு பெட்டியின் ஆயுள் காலம் குறைந்தது 30 ஆண்டுகள் என்பதால், மீதமுள்ள 23 ஆண்டுகளுக்கான பராமரிப்புகளை ரயில்வே ஊழியர்கள்தானே பார்க்க வேண்டியிருக்கும் எனத் தோன்றினாலும், அடுத்த பத்து ஆண்டுகளில் எத்தனை ரயில் பெட்டிகள் புதிதாக மாறியிருக்கும் என்பது தெரியாது. மேலும், 7 ஆண்டுகள் இலவசமாகப் பராமரித்தவர்கள், அதன் பிறகான ஆண்டுகளுக்குக் கட்டணத்துடன் பராமரிக்க அனுமதிக்கப்படும் வாய்ப்பை மறுப்பதற்கில்லை.
தற்போது 15 புறநகர் மின்தொடர் வண்டிகளுக்கான ஒப்பந்தம் பெறும் நிறுவனம், 2 ரயில்களை தனது சொந்த இடத்திலும், மற்ற 13 ரயில்களுக்கான பெட்டிகளை இந்தியாவிலும் செய்தாக வேண்டும். இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் இந்த உலக அளவிலான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு உலக அளவிலான ஒப்பந்தம் கோரும்போது, கபுர்தலாவில் உள்ள ஆர்.சி.எஃப், சென்னையில் உள்ள ஐ.சி.எஃப். ஆகியவற்றின் நிலை என்னவாகும்? இவர்களும் மற்றவர்களோடு இணைந்து ஒப்பந்தப்புள்ளி கோரும் நிலை உருவாகலாம். தற்போது பெல் போன்ற நிறுவனங்கள் அனல்மின் உற்பத்தி நிலையங்களுக்குக் கொதிகலன் தயாரித்து வழங்கும்போது, அந்த நிறுவனம் இந்தியாவில் இருந்தாலும் உலக அளவிலான ஒப்பந்தப்புள்ளியில் பங்கு பெற்று பணி ஆணை பெறுவதைப் போன்றே, ஐ.சி.எஃப்., ஆர்.சி.எஃப். ஆகியனவும் செயல்பட வேண்டியிருக்கும்.
இந்தத் தனியார் நிறுவனங்கள் ரயில் பெட்டிகளை சிறப்பாகப் பராமரிப்பார்கள் என்பது உறுதியில்லை. இவர்களிடம் பணியாற்றும் ஊழியர்களும் அலட்சியமாகச் செயல்படலாம். அல்லது குறைந்த கூலிக்கு நியமிக்கப்படும் அனுபவமில்லாத, திறமையில்லாத ஊழியர்களால் சரியான முறையில் பராமரிப்பின்றி ரயில் பெட்டிகள் அனுப்பப்பட்டு, விபத்துகள் நடக்கவும் கூடும். ஆனால், ரயில்வே நிர்வாகம் அந்த நிறுவனத்தின் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யவும், பொறுப்பேற்கச் செய்து இழப்பை வசூலிக்கவும் தடை இருக்காது.
தவறு செய்த ஊழியரைப் பொறுப்பாக்கி, தண்டனைக்கு உள்படுத்தினால் அமைப்பு வலுவிழந்துவிடும் என்பதால், ஊழியர் சங்கங்கள் யாரையும் பொறுப்பாக்க விடாமல் தயங்குகின்றன. பொதுத் துறை நிறுவனங்கள் படிப்படியாகத் தனியார்மயத்தை நோக்கி நகர்வதற்குக் காரணம் இதுதான். மக்கள் வரிப் பணமா, தொழிலாளர் பாதுகாப்பா என்று கேட்டால், மக்கள் நலன்தானே முன்னுரிமை பெறுவதாக இருக்க முடியும்? தொழிற்சங்கங்கள் பலவீனப்படுவதன் காரணம் இதைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான்.
தனியார்மயமாகிவிட்டால் மட்டும் சிறப்பான சேவை உறுதிப்படுமா என்று கேட்பதில் அர்த்தமில்லை. மக்கள் வரிப் பணம் வீணாகாது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் இரவு நேர போக்குவரத்துக்குத் தடை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

