வளர்ச்சி அடையும் நாடுகள் தங்களது கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உலக வங்கியையும், பன்னாட்டு நிதியத்தையும் (ஐ.எம்.எஃப்.) மட்டுமே இதுவரை எதிர்நோக்கி வந்தன. இந்த சர்வதேச நிறுவனங்கள் கடனுதவி வழங்குவதற்கு பல நிபந்தனைகளை வகுத்தன என்பது மட்டுமல்லாமல், கடன் பெறும் நாடுகள் அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளின் வெளியுறவுக் கொள்கைகளை ஆதரிக்க வேண்டும் என்றும் எதிர்பார்த்தன.
இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், பன்னாட்டு நிதியத்துக்கும், உலக வங்கிக்கும் மாற்றாக இல்லாவிட்டாலும் போட்டியாக ஒரு பன்னாட்டு நிதியுதவி வங்கி தொடங்கப்பட வேண்டும் என்பதும் வளர்ச்சி அடையும் நாடுகளின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்தது. ஆசிய வளர்ச்சி வங்கி ஓரளவுக்கு இந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தது என்றாலும், பெரிய அளவில் முதலீடு இல்லாததால் வளர்ச்சி அடையும் நாடுகளின் தேவைக்கு ஏற்ப கடனுதவி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கியால் இயலவில்லை.
இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்கிற குறிக்கோளுடன்தான் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான "பிரிக்ஸ்', வங்கி தொடங்குவது என்று முடிவெடுத்தது.
கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதற்காகவே வங்கி ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்கிற கருத்தைக் கடந்த அக்டோபர் 2013-இல் சீன அதிபர் ஜீ ஜின்பிங் முன்மொழிந்தார்.
இப்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 10,000 கோடி டாலர் முதலீட்டுடன் ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி (ஆசியன் இன்பிராஸ்டிரக்சர் இன்வெஸ்ட்மென்ட் பேங்க் - ஏ.ஐ.ஐ.பி.) உருவாகி இருக்கிறது. உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போல ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியும் இனிமேல் செயல்பட இருக்கிறது. சீனா, ஆஸ்திரேலியா, இந்தியா, ரஷியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இதன் பங்குதாரர்களாக இருப்பார்கள்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 50 நாடுகளின் தலைவர்கள் இந்த மாதத் துவக்கத்தில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கூடி, ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியைத் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்கள். இதன் உறுப்பினர்களான 57 நாடுகளில், 50 நாடுகள் இப்போது நிறுவன உறுப்பினர்களாக இணைந்திருக்கின்றன. இன்னும் 7 நாடுகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் இணைவதற்கு இசைந்திருக்கின்றன.
ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் மிக அதிகமான பங்குதாரராக சீனா 30.34% முதலீட்டுடன் இணைகிறது. அடுத்தபடியாக 8.52% முதலீட்டுடன் இந்தியாவும், 6.66% முதலீட்டுடன் ரஷியாவும் பங்குதாரர்களாகின்றன. உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதற்குக் கடனுதவி அளிக்கும் ஏ.ஐ.ஐ.பி. வங்கியை மேலே குறிப்பிட்ட சீனா, இந்தியா, ரசியா ஆகிய நாடுகள் வழிநடத்த இருக்கின்றன.
சீனாவால் முன்மொழியப்பட்டது என்கிற காரணத்தால், ஆசியாவில் சக்தி வாய்ந்த பொருளாதார வல்லரசான ஜப்பான் இந்த முயற்சியில் தன்னை இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. அதேபோல, தென்சீனக் கடலில் சீனாவுடன் எல்லைப் பிரச்னைகள் இருப்பதால், பிலிப்பின்ஸýம் இந்த வங்கியில் பங்குதாரராக மறுத்து விட்டிருக்கிறது. அதேபோல, இந்த வங்கியின் தலைமையகம் தனது நாட்டுத் தலைநகரான ஜகார்த்தாவில் நிறுவப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை இந்தோனேஷியா முன்மொழிந்திருக்கிறது.
இதுபோன்ற சில தடங்கல்களும், குறைபாடுகளும் இருந்தாலும்கூட, இந்த வங்கியின் நோக்கம் மிகவும் தெளிவானது. இப்போதைய சர்வதேசக் கடனுதவி நிறுவனங்கள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் வழிகாட்டுதலின்படி நடக்கின்றன என்கிற குறைபாடுதான், இப்படியொரு நிதியுதவி வங்கியை உருவாக்குவதற்கு அடிப்படைக் காரணம். வளர்ச்சி அடையும் நாடுகளுக்கு எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் தங்கள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ளக் கடனுதவி அளிப்பது என்பதுதான் இந்த வங்கியை உருவாக்குவதன் முக்கியமான நோக்கம்.
ஏ.ஐ.ஐ.பி. என்பது, சீனாவைப் பொருத்தவரை, தன்னிடம் உள்ள உபரி முதலீட்டை ஆசியாவிலுள்ள தனது அண்டை நாடுகளில் முதலீடு செய்வதற்கான வழி என்பதை மறுப்பதற்கில்லை. கட்டமைப்பு வசதிகளில் மிகவும் பின் தங்கி இருக்கும் அண்டை நாடுகளில் முதலீடு செய்வதன் மூலம் தனது செல்வாக்கை சீனா நிச்சயமாக அதிகரித்துக் கொள்ளும்.
சீனாவைப் பொருத்தவரை, அண்டை நாடுகளில் செயல்படுத்தப்படும் கட்டமைப்பு மேம்பாட்டு வளர்ச்சிப் பணிகளில் தனது நாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்க வழிகோல முடியும். சீனாவில் ஓரளவுக்கு கட்டமைப்பு வேலைகள் முடிந்துவிட்ட நிலையில், அவர்களுக்கும் புதிய வேலைகள் கிடைக்க இந்த வங்கி உதவக் கூடும்.
அண்டை நாடுகளில் முதலீடு செய்யவும், கட்டமைப்பு மேம்பாட்டு வேலைகளைத் தனது நாட்டு நிறுவனங்களுக்குப் பெற்றுத் தரவும், தனது செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளவும் சீனா உருவாக்குகின்ற ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இந்தியா ஏன் இடம் பெற வேண்டும்? இதனால், இந்தியாவுக்கு என்ன லாபம்?
இந்த வங்கியில் சீனாவுக்கு அடுத்தபடியாக பங்குதாரராக இருப்பதன் மூலம், பன்னாட்டு நிதியம், உலக வங்கி போன்றவற்றின் கடுமையான கட்டுப்பாடுகளையும், அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளையும் தளர்த்த முடியும். ஏ.ஐ.ஐ.பி. மிகப் பெரிய அளவில் வளர்ந்து விடாமல் இருப்பதில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கவனமாக இருக்கும். இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொள்வதில்தான் இந்தியாவின் வெற்றியும், புத்திசாலித்தனமும் அடங்கி இருக்கிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?

ஏஜிஎஸ் தயாரிப்பில் அர்ஜுன் நடிக்கும் ப்ளாஸ்ட்!

அந்த தனி நபரின் விருப்பம்! - பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்பிகளுக்கு அண்ணா ஹசாரே ஆதரவு!

பெண் ரயில் ஓட்டுநருக்கு பாலியல் தொல்லை! மூத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

