எது அவசரத் தேவை?
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முன்னிலையில் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தான ஒப்பந்தங்களில், அலகாபாத், ஆஜ்மீர், விசாகப்பட்டினம் ஆகிய மூன்று இடங்களில் நவீன நகரங்களை


பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முன்னிலையில் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தான ஒப்பந்தங்களில், அலகாபாத், ஆஜ்மீர், விசாகப்பட்டினம் ஆகிய மூன்று இடங்களில் நவீன நகரங்களை (ஸ்மார்ட் சிட்டிஸ்) அமைக்கும் திட்டமும் அடங்கும்.
அமெரிக்காவின் மிகப்பெரும் கட்டுமான நிறுவனம் ஒன்று, மின் தூக்கியில் உலகப்புகழ் பெற்ற ஒரு நிறுவனம், தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஐ.பி.எம். எனப் பல்வேறு நிறுவனங்கள் கூட்டாக இந்த ஒப்பந்தத்தின் மூலம் பயன்பெறவுள்ளன. அவர்கள்தான் இந்த நவீன நகரை உருவாக்குவதிலும், சேவை வசதிகளை அளிப்பதிலும் முதன்மைப் பங்கேற்பாளர்களாக இருப்பார்கள்.
இந்தியாவில் 100 நவீன நகரங்களை உருவாக்க வேண்டும் என்பது மத்திய அரசின் குறிக்கோள். இதற்கான அறிவிப்பு, கடந்த நிதிநிலை அறிக்கையில் வெளியானது. இதற்காக 7,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இது மிகவும் குறைவான ஒதுக்கீடுதான். ஆரம்பக் கட்ட செலவுக்குத்தான் இது போதுமானதாக இருக்கும். திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மேலும் பல லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும்.
தற்போது, தொழிற்சாலைகளுக்காக கையகப்படுத்தத் தேவைப்படுவதைவிட, பல நூறு மடங்கு அதிகமான நிலங்கள் 100 நவீன நகரங்கள் அமைக்கத் தேவைப்படுகின்றன.
அண்மையில் "நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுகுடியமர்த்துதல் அவசரச் சட்டம்' கொண்டு வரப்பட்டதே இதற்காகத்தான்.
அண்மையில் நகரங்களை நிர்வகித்தல் தொடர்பான ஒரு கருத்தரங்கில் பேசிய மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, "தகுதியின் அடிப்படையிலேயே நவீன நகரங்கள் அமைவிடம் தேர்வு செய்யப்படும்' என்று குறிப்பிட்டார்.
நவீன நகரம் என்பது விரிவான சாலைகள் அழகான கட்டடங்கள் என்பதோடு, அதிமுக்கியமாக தகவல் தொழில்நுட்ப வசதிகள் அனைத்தும் அனைத்து இடங்களிலும் கிடைக்கச் செய்தல், நகர் நிர்வாகத்தை தகவல் தொழில்நுட்ப உதவியாலேயே நடத்துதல், தடையற்ற மின்சாரம், தட்டுப்பாடில்லா குடிநீர், கழிவுநீர் மேலாண்மை, நகரத் தூய்மை இவைதான் மிகமிக முக்கியமானவை.
இந்த நவீன நகரங்கள் யாருக்கானவை? இவ்வளவு சிறப்பான முறையில், "வானம் மண்ணில் வந்தது' என்று கூறும்படியாக அமைக்கப்படவிருக்கும் இந்த நகரங்களில் குடியேறப் போகிறவர் யார்? இதன் விலை நிச்சயம் மிகமிக அதிகமாக இருக்கும். பெரும் அதிகாரிகள், அரசியல்வாதிகள், அவர்தம் பினாமி உறவுகள், உறவுப் பினாமிகள்,
பெரு வணிகர்கள் இவர்களால் மட்டுமே இந்த நவீன நகரில் இடம் வாங்க இயலும். நிச்சயமாக இங்கே நடுத்தர மக்களுக்கு இடமில்லை. ஏழைகளுக்கோ நடைபாதையில் கூட இடம் கிடைக்காது என்பது நிச்சயம்.
சென்னையில் எவ்வாறு மக்கள் நெரிசல் அதிகரித்தபோதெல்லாம், தியாகராய நகர், அண்ணா நகர், கலைஞர் கருணாநிதி நகர், பெசன்ட் நகர் போன்ற நகர்களெல்லாம் வசதி படைத்தவர்கள் நகர்ந்து வந்த நகரங்களாக மாறினவோ அவ்வாறே, தற்போது 100 நவீன நகரங்களும் மிகப்பெரும் வசதி படைத்தவர்களுக்காக மட்டுமே என்றாகும்.
இதுதான் நிலைமை என்றால், இதற்காக, மக்களுடைய வரிப்பணத்தை அரசு செலவிடுவானேன்? பெருவசதி படைத்தவர்களை இப்போதே இத்திட்டத்தில் சேர்த்துக் கொண்டு, அவர்களுக்கான பொன்னுலகை அவர்களே, ஆனால் அரசு காணும் கனவின்படி, நிர்மாணிக்க விட்டுவிட்டால் என்ன? எப்படியும் நவீன நகர் செல்வ நகராகத்தானே இருக்கப் போகிறது. இந்த நவீன நகரங்களால் பயன்படப்போவது அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளுமாகத்தான் இருக்குமே தவிர, சாமானிய, நடுத்தர, கீழ்த்தட்டு மக்களாக இருக்கப் போவதில்லை.
100 நவீன நகரங்களை உருவாக்கும் அதே வேளையில், 500 நகரங்களின் தரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம்தான் உண்மையில் நகரங்களில் வாழும் நடுத்தர மக்களுக்கு பயன் தரக்கூடியது. இதைத்தான் அரசு மக்களின் வரிப்பணத்தைச் செலவிட்டு உறுதிப்படுத்த வேண்டும்.
ஏனென்றால், இந்த 500 நகரங்களில் ஒன்றில்கூட சராசரி தனிநபர் குடிநீர்த் தேவையான 150 லிட்டர் என்பது சாத்தியப்படவில்லை. பல நகரங்களில் 50 விழுக்காடு வீடுகளில் மட்டுமே குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரே சொல்லியிருக்கிறார். 40 விழுக்காடு வீடுகளில்தான் கழிப்பறை வசதிகள் உள்ளன. 16 விழுக்காடு கழிவுநீர் மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது. கழிவுநீர் மறுசுழற்சி என்பது இல்லை என்று சொல்லும் நிலைதான் உள்ளது.
இந்தச் சூழலில் நவீன நகர் உருவானால், பெரும் பணக்காரர்களும், அதிகாரிகளும் நவீன நகருக்குக் குடிபெயர்வார்கள். இந்த வசதிகள் குறைந்து போகும் நகரம் கவனம் பெறாது. நிலைமை மேலும் மோசமாகும்.
சர்வதேசத் தரத்திலான நவீன நகரங்கள் அவசியம் தேவை. ஆனால், அதன் கட்டமைப்பில் விருப்பமுள்ள பெரும் பணக்காரர்களையும் அமெரிக்க நிறுவனங்களையும் இணைத்து அவை நிர்வகிக்கப்பட வேண்டும். அரசு நிதியைக் குறைவாக ஒதுக்கீடு செய்தாலும், இந்த நவீன நகரம் தானே மேலெழும்.அதே நேரத்தில், தரம் மேம்படுத்தப்படவுள்ள 500 நகரங்களை அரசே எடுத்து சீரமைக்கட்டும். தற்போது தேவைப்படும் வசதிகளை நிறைவு செய்யும் பணிகளை விரைவுபடுத்தவும், அதற்காக நிதியைச் செலவிடவும் முன்வரட்டும். இருக்கும் நகரங்களை மேம்படுத்தி, வாழத் தகுந்த இடமாக மாற்றுவதுதான் இன்றைய அவசிய, அவசரத் தேவை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...