முதலீடும் முட்டுக்கட்டையும்...
அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக மாநிலங்கள் போட்டி போட்டுக் கொண்டு முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தத் தொடங்கி இருக்கின்றன. சமீபத்தில் குஜராத்தில் நடந்து முடிந்த இந்த மாநாட்டிற்கு உலகின்


அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக மாநிலங்கள் போட்டி போட்டுக் கொண்டு முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தத் தொடங்கி இருக்கின்றன. சமீபத்தில் குஜராத்தில் நடந்து முடிந்த இந்த மாநாட்டிற்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் முதலீட்டாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். மேற்கு வங்க அரசும் பத்து நாள்களுக்கு முன்னர் இதேபோல முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றை நடத்தியது.
நிதியமைச்சர் அருண் ஜேட்லி குஜராத்தில் நடந்த மாநாட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது, இதுபோன்ற மாநாடுகள், மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டிக்கு வழிவகுத்து, இந்தியாவை உலகின் உற்பத்திக் கேந்திரமாக மாற்றுவதற்குப் பேருதவியாக இருக்கும் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
எல்லா மாநிலங்களும் அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் முனைப்புக் காட்டுகின்றன என்பதேகூட ஆரோக்கியமான அறிகுறிதான்.வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் தொழில் தொடங்கப்பட்டாக வேண்டும் என்கிற நிலைமை எல்லா மாநிலங்களிலும் காணப்படுகிறது. உள்நாட்டு முதலீட்டை மட்டுமே நம்பித் தொழில் வளத்தைப் பெருக்க முடியாது என்பதால் மாநிலங்கள் அன்னிய முதலீட்டைக் குறிவைக்கத் தொடங்கி இருக்கின்றன. மாநில அரசு என்னவெல்லாம்
சலுகைகளை முதலீட்டாளர்களுக்கு வழங்கத் தயாராக இருக்கிறது, முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பது போன்ற பிரச்னைகள் இதுபோன்ற மாநாடுகளில் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுகின்றன.
குஜராத்தில் சமீபத்தில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டின் விளைவாக 21,000 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டிருக்கின்றன. இதன்மூலம், ரூ.20 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடு குஜராத் மாநிலத்திற்கு அடுத்த சில ஆண்டுகளில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு வங்க மாநாட்டின் விளைவாக ரூ.2.4 லட்சம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டிருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்னால் நடந்த மத்தியப் பிரதேச, உத்தரப் பிரதேச மாநிலங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையொப்பமிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மதிப்பு ரூ.3.8 லட்சம் கோடியும், ரூ.57,000 கோடியும் ஆகும்.
இதுபோன்ற மாநாடுகளுக்குத் தங்களது செயல்திட்டத்துடனும், அதன் நடைமுறைச் சாத்தியங்கள், உற்பத்தித் திட்டம், ஏற்றுமதி வாய்ப்பு ஆகியவை பற்றிய ஆய்வு அறிக்கையுடனும் முதலீட்டாளர்கள் வருகிறார்கள். மாநாட்டின்போது அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் அவர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார்கள்.
அன்னிய முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு, அவர்கள் தங்களது தொழிற்சாலையை நிறுவுவதற்குப் பூர்வாங்க வேலைகளைத் தொடங்கும்போதே தகர்ந்து விடுகிறது. உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறுவதில் தொடங்கி, இடம், மின்சாரம், தண்ணீர் போன்ற வசதிகளைப் பெறுவதற்குள் அவர்களது முதலீட்டில் கணிசமான தொகையைக் கையூட்டாகத் தரவேண்டி வரும் என்றால் எந்த முதலீட்டாளர்தான் தொழில் தொடங்க முன்வருவார்கள்?
அதனால், பெரும்பாலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகிதத்துடன் முடிந்து விடுகின்றன என்பதுதான் யதார்த்த நிலை.
அன்னிய முதலீடும் தொழில் வளர்ச்சியும் என்கிற கொள்கையில் இன்னொரு ஆபத்தும் இருக்கிறது. "மெக்கின்சே' என்கிற பொருளாதார ஆய்வு நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டிருக்கும் ஆய்வுப்படி, அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) பாதிக்கு மேல் எட்டு மாநிலங்களின் பங்காக இருக்கும். அதுமட்டுமல்ல, இந்தியாவின் மேற்கு, தெற்கு பகுதிகளைச் சேர்ந்த 183 மாவட்டங்களில் உள்ள 49 நகரங்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 77% பங்களிப்பாக நல்கியிருக்கும் என்கிறது அந்த அறிக்கை. அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட சில மாநிலங்களைத்தான் முதலீட்டுக்குப் பாதுகாப்பான மாநிலங்களாகக் கருதுகிறார்கள் என்பதே இதன் பொருள்.
இதில் என்ன தவறு காண முடியும்? முதலீட்டாளர்கள் தங்களுக்குச் சாதகமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் மாநிலங்களைத் தேர்ந்தெடுத்து தொழில் தொடங்குவது என்பதுதானே இயல்பு என்று கேட்கலாம். அப்படி சில மாநிலங்கள் மட்டுமே அன்னிய முதலீட்டைக் கவர்ந்து இழுப்பவையாக இருந்தால், ஏனைய மாநிலங்களின் தொழில் வளம் முற்றிலுமாகக் குன்றிவிடும் வாய்ப்பு ஏற்படும். அது சமச்சீரான வளர்ச்சிக்கு வழிகோலாது.
ஏற்கெனவே, பயங்கரவாதம் கொழுந்துவிட்டு எரியும் பல மாவட்டங்கள் இந்தியாவில் இருக்கின்றன. விவசாயம், நதிநீர்ப்பாசனம் தாராளமாக உள்ள பஞ்சாப், ஹரியாணா,
உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், தொழில் வளம் மேற்கு, தெற்கு இந்திய மாநிலங்களிலும் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகோலும்போது, ஏனைய மாநிலங்களில் வேலையில்லாத் திண்டாட்டமும், பொருளாதார வளர்ச்சியின்மையும் அதிகரித்தால் அது பயங்கரவாதத்திற்கும் அதன் தொடர்ச்சியாகப் பிரிவினைவாதத்திற்கும் வழிகோலக்கூடும்.
அன்னிய முதலீடு நிச்சயமாகத் தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அப்படி இந்தியாவுக்கு வரும் முதலீடு சமச்சீரான வளர்ச்சிக்கு வழிகோலும் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதேபோல, அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை முதலீட்டாளர்களை கையூட்டுக் கேட்டு மிரட்டும் நிலைமை மாறாதவரை, இந்தியாவை உலக உற்பத்திக் கேந்திரமாக மாற்ற நினைப்பது கனவாகத்தான் இருக்குமே தவிர நடைமுறைச் சாத்தியமாகாது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...