அவசரத்திற்கு என்ன தேவை?
முந்தைய மன்மோகன் சிங் அரசால், கடந்த ஆண்டு மிகுந்த வற்புறுத்தலுக்கும், அரசுத் தரப்பு தயக்கத்திற்கும் பிறகு நிறைவேற்றப்பட்டதுதான் "நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மாற்றிடம் வழங்கல் உறுதிப்படுத்தும் சட்டம் 2014'.


முந்தைய மன்மோகன் சிங் அரசால், கடந்த ஆண்டு மிகுந்த வற்புறுத்தலுக்கும், அரசுத் தரப்பு தயக்கத்திற்கும் பிறகு நிறைவேற்றப்பட்டதுதான் "நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மாற்றிடம் வழங்கல் உறுதிப்படுத்தும் சட்டம் 2014'. பிரிட்டிஷ் காலனிய அரசால் கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 1894-இல் ரத்து செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. இப்போது அந்தச் சட்டத்திலும் சில திருத்தங்கள் செய்யப்பட்டு "நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மாற்றிடம் வழங்கல் (திருத்த) அவசரச் சட்டம்' குடியரசுத் தலைவரால் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
அவசரச் சட்டம் கொண்டு வரப்படுவது என்பது ஒன்றும் புதிதல்ல. அரசியல் சாசனச் சட்டப் பிரிவு 123-இன் கீழ் நரேந்திர மோடி அரசு கடந்த ஏழு மாதங்களில் கொண்டு வந்திருக்கும் ஒன்பதாவது சட்டத் திருத்தம் இது என்றால், 1952-ஆம் ஆண்டு முதல் இதுநாள்வரை ஆட்சியில் இருந்த அரசுகள் கொண்டு வந்திருக்கும் அவசரச் சட்டங்களின் எண்ணிக்கை 646. அவசரச் சட்டம் கொண்டு வருவதைக் கடுமையாக விமர்சித்த பலரும், ஆட்சியில் அமர்ந்ததும், அவசரச் சட்டங்களைப் பிறப்பித்து ஆட்சி நடத்திய விசித்திரங்கள் எண்ணிலடங்காது.
சுதந்திரப் போராட்டக் காலத்தில், 1861 முதல் பிரிட்டிஷ் காலனிய அரசு அவசரச் சட்டம் அறிவித்தபோதெல்லாம், அதை அதிகாரத்தின், ஆணவத்தின் அடையாளம் என்று வர்ணித்த ஜவாஹர்லால் நேரு, அரசியல் நிர்ணயசபை விவாதத்தின் போது தனது சட்ட அமைச்சர் "பாபாசாகேப்' பி.ஆர். அம்பேத்கருடன் இணைந்து அவசரச் சட்டத்தை இயற்ற வழிகோலும் 123-ஆவது சட்டப் பிரிவை அரசியல் சாசனத்தில் இடம்பெறச் செய்தார். அதுமட்டுமல்ல, 1952 முதல் 1964 வரையிலான பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் ஆட்சிக் காலத்தில் மட்டும் 66 முறை அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன.
முந்தைய மன்மோகன் சிங் ஆட்சியில் 61 தடவை குடியரசுத் தலைவரால் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அப்போது எதிர்கட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி, மன்மோகன் சிங் அரசை "அவசரச் சட்ட அரசு' என்று கேலி பேசியது என்பதும், இப்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, "சட்டப் பிரிவு 123-ஐ பயன்படுத்தி அவசரச் சட்டம் பிறப்பிப்பது நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைப் பறிக்கும் செயல்' என்று கண்டனக் குரல் எழுப்பியதும் அவர்களுக்கே மறந்துவிட்டது என்று தோன்றுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக ஒன்றன் பின் ஒன்றாக அவசரச் சட்டத்தைப் பிறப்பிப்பதும், அதை நியாயப்படுத்துவதும் அதே அருண் ஜேட்லி என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.
கடந்த மன்மோகன் சிங் அரசின் போது, நாடாளுமன்றத்திலும், வெளியிலும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு, பலதரப்பட்ட கலந்தாலோசனைகளுக்குப் பிறகு "நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மாற்றிடம் வழங்கல் உறுதிப்படுத்துதல் சட்டம் 2014' நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டம் இயற்றப்பட்டு ஓராண்டுகூட நிறைவடையாத நிலையில், இப்போது அவசரச் சட்டத்தின் மூலம் அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது நரேந்திர மோடி அரசு.
சட்டம் நிறைவேற்றப்பட்டு அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, அதில் குறைகள், தவறுகள் இருந்தால் அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதில் தவறில்லை. ஆனால், ஓராண்டுக்குள் திருத்தம் கொண்டுவர வேண்டிய அவசரத்திற்குக் காரணமென்ன என்பது தெளிவாக இல்லை.
மேற்குவங்க மாநிலத்திலுள்ள சிங்கூரில் டாடா நிறுவனத்திற்கு விளைநிலம் கையகப்படுத்தப்படுவதில் ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து, தேசிய அளவில் விவாதிக்கப்பட்ட பிரச்னைதான் நிலம் கையகப்படுத்துதல். விளைநிலங்களை வளர்ச்சிப் பணிகளுக்காகவும், தொழிற்சாலை நிறுவுவதற்காகவும், குடியிருப்புகள் கட்டுவதற்காகவும் கையகப்படுத்தும்போது, அந்த நிலத்தின் உரிமையாளர்களுக்கு எந்த அளவுக்கு இழப்பீடு அளிக்கப்பட வேண்டும் என்பதற்கு சட்டப்படியான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையின் விளைவுதான் இந்தச் சட்டம்.
இப்போது ராணுவம், கிராமப்புறக் கட்டமைப்பு, குறைந்த விலையிலான குடியிருப்பு, தொழில் நகரங்கள் அமைப்பது, கட்டமைப்புப் பணிகள் என்று பல காரணங்களுக்காக நிபந்தனைகளில் தளர்வு ஏற்படுத்த முற்பட்டிருக்கிறது இந்தச் சட்டத் திருத்தம். இந்தச் சட்டத் திருத்தத்திற்குப் பிறகு, 2014-இல் இயற்றப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டத்திற்கு முன்னர் இருந்த நிலைமை திரும்பப் போகிறது. கிராமப்புற வளர்ச்சி, குறைந்த விலையிலான குடியிருப்பு போன்ற காரணங்களைக் கூறி நிலம் கையகப்படுத்தப்படும்போது, பெருவாரியான நில உரிமையாளர்களின் சம்மதம் பெற வேண்டும் என்கிற நிபந்தனை தளர்த்தப்பட்டிருக்கிறது.
இப்போது அரசு கொண்டு வந்திருக்கும் சட்டத் திருத்தம், இழப்பீடு தொடர்பான விதிமுறைகளில் பெரிய மாற்றம் கொண்டுவந்துவிடவில்லை. இதற்கு முன்னால் விதிவிலக்கு வழங்கப்பட்டிருந்த பல சட்டங்களையும் இப்போது இணைத்திருக்கிறது, அவ்வளவே. ஆனால், பெருவாரியானவர்களின் சம்மதம் வேண்டும் என்கிற விதி தளர்த்தப்படும்போது, தனியார் குடியிருப்புக்காகக்கூட வலுக்கட்டாயமாக நிலம் கையகப்படுத்தப்படலாம். அதிகாரிகள் வைத்ததே சட்டமாகிவிடும் அபாயத்திற்கு இது வழிகோலும்.
அரசின் நோக்கம் சரியாக இருக்கலாம். ஆனால், ஒரு வருடத்திற்குள் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன? அப்படியே தேவை இருக்குமானால், நாடாளுமன்றத்தின் விவாதத்திற்குப் பிறகு கொண்டு வந்திருக்கலாமே, எதற்காக இந்த அவசரச் சட்டம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...