மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

காலக்கட்டாயம்!

நரேந்திர மோடி அரசின் புத்தாண்டுப் பரிசு "நீதி ஆயோக்' எனப்படும் மத்திய கொள்கைக் குழு. கடந்த 60 ஆண்டுகளாக இருந்து வந்த திட்டக் குழுவுக்கு மூடுவிழா நடத்தப்பட்டிருக்கிறது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:22 am

ஆசிரியர்

நரேந்திர மோடி அரசின் புத்தாண்டுப் பரிசு "நீதி ஆயோக்' எனப்படும் மத்திய கொள்கைக் குழு. கடந்த 60 ஆண்டுகளாக இருந்து வந்த திட்டக் குழுவுக்கு மூடுவிழா நடத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவை மாற்றியமைக்கும் தேசிய அமைப்பு (என்.ஐ.டி.ஐ) என்கிற "நீதி ஆயோக்' இனிமேல் திட்டக் குழுவின் பணிகளை ஏற்று நடத்தும். திட்டக் குழு, "நீதி ஆயோக்' அல்லது மத்திய கொள்கைக் குழு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறதா அல்லது முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்துடன் செயல்படப் போகிறதா என்பது போகப்போகத்தான் தெரியும்.

ஐந்தாண்டுத் திட்டம் தீட்டி தேசத்தின் பொருளாதாரத்தை வழிநடத்துவது என்பது முந்தைய சோவியத் யூனியனின் கண்டுபிடிப்பு. சீனாவும் இதுபோல திட்டக் குழு அமைத்து செயல்பட்டது. அந்த இரண்டு நாடுகளையும் பார்த்து சுதந்திர இந்தியாவிலும் அந்த வழிமுறையைப் பின்பற்ற முடிவெடுத்தார் பண்டித ஜவாஹர்லால் நேரு. 1951-இல் திட்டக் குழுவின் தலைமையில் முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

சோவியத் யூனியன் உடைந்தபோது அதோடு திட்டக் குழு முறையும் முடிவுக்கு வந்தது. சீனாவும் திட்டக் குழுவுக்கு விடையளித்து விட்டது. ஆனால், இந்தியாவில் மட்டும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக திட்டக் குழு தொடர்ந்து வந்தது. இப்போது திட்டக் குழுவுக்கு மூடுவிழா நடத்தப்பட்டிருப்பதும், அதற்குப் பதிலாக மத்தியக் கொள்கைக் குழு என்கிற அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதும் காலக்கட்டாயம் என்றுதான் கருதப்பட வேண்டுமே தவிர, இதற்கு அரசியல் முலாம் பூச முற்படுவது சரியல்ல.

இந்தியா சுதந்திரம் அடைந்திருந்த நிலையில் திட்டக் குழுவுக்கான அவசியம் இருந்தது. அதுவரை தனித்தனியாக இயங்கி வந்த பல சமஸ்தானங்களையும், பிரிட்டிஷ் ஆளுநர்களால் நிர்வகிக்கப்பட்ட பகுதிகளையும் ஒருங்கிணைத்து இந்தியா என்கிற நாடு உருவாகி இருந்த காலகட்டம் அது. இந்தச் சூழலில் சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்தால் மட்டுமே, ஒருங்கிணைந்த இந்தியாவை ஒற்றுமை குலையாமல் காப்பாற்ற முடியும் என்கிற நிலைமை.

விவசாயம் சார்ந்த தேசமான இந்தியாவில் நீர்ப்பாசன வசதிகளோ, நீர்ப்பாசனத்தை உறுதி செய்யும் நீர்ப்பாசனத் திட்டங்களோ அப்போது கிடையாது. அதேபோல, தொழிற்சாலைகள் என்று எடுத்துக் கொண்டால் நூற்பாலைகள் மட்டும்தான். அதுவும் இந்தியாவின் ஒரு சில நகரங்களில் மட்டுமே காணப்பட்டன. கனரக தொழிற்சாலைகளை நிறுவுவதற்கான முதலீடு தனியார் துறையிடம் இல்லாமல் இருந்த நிலைமை.

அப்படிப்பட்ட சூழலில், இந்தியாவின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளவும், சமச்சீரான வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கவும், நீர்ப்பாசன, நீர்மின் நிலையத் திட்டங்களை நிறுவுவதற்கும் அரசால் மட்டுமே முதலீட்டைக் கொணர முடியும் என்கிற சூழலில் திட்டக் குழுவுக்கு முக்கியப் பங்கு இருந்தது. வெளிநாடுகளிலிருந்து அரசு கடனுதவி பெற்று, கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கவும், கனரகத் தொழிற்சாலைகளை சமச்சீராக பல்வேறு மாநிலங்களில் நிறுவவும் திட்டமிடல் தேவைப்பட்டது.

1991-இல் பொருளாதார சீர்திருத்தமும், தனியார்மயமும் வந்தபோது, திட்டக் குழுவின் அவசியம் குறைந்துவிட்டது. காலப்போக்கில் திட்டக் குழு என்பது தேசத்தின் நிதி வருவாயை, மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்கும் அமைப்பாகவும், மாநிலங்கள் அந்த நிதி ஒதுக்கீட்டை எப்படி செலவு செய்கின்றன என்பதைக் கண்காணிக்கும் அமைப்பாகவும் மாறிவிட்டது.

மத்திய அரசின் ஆட்சியில் இருக்கும் கட்சியின் கைப்பாவையாக கடந்த 20 ஆண்டுகளாகத் திட்டக் குழு செயல்பட்டு வந்தது. தங்களுக்குச் சாதகமாக உள்ள மாநில அரசுகளுக்கு அதிக ஒதுக்கீடும், எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுக்கு பாரபட்சமான ஒதுக்கீடும் திட்டக் குழுவால் செய்யப்பட்ட சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கின.

இப்போது அரசு மூலதனம் என்பது குறைந்துவிட்டது. தனியார் முதலீடு கணிசமாக இருப்பதால், அரசின் பங்களிப்பு என்பது பிரச்னைகள் இல்லாமல் தொழில் துறை செயல்படுவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் நின்று விடுகிறது. மேலும், மாநிலங்கள் தங்களது தேவைக்கு ஏற்றபடி வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், நிதி ஒதுக்கீட்டை செலவு செய்யவும் உரிமை கோருவதிலும் நியாயம் இருக்கிறது.

முதல்முறையாக, மாநில முதல்வராக இருந்த ஒருவர் பிரதமராகி இருப்பதால் நரேந்திர மோடி மாநிலங்களின் நலன் பேணும் விதத்திலான திட்டமிடலுக்கு வழிகோல முற்பட்டிருப்பது அனுபவம் சார்ந்த முடிவு என்றுதான் சொல்ல வேண்டும். மேலிருந்து திட்டமிட்டு செயல்படுத்தியது போய் இனிமேல் அடிமட்டத்திலிருந்து திட்டமிடலும் செயல்படுத்துதலும் நடத்தப்படுவது என்பது காலத்திற்கேற்ற மாற்றம்.

பிரதமர், முதல்வர்கள் அடங்கிய தேசியக் குழு என்பது சரி. ஆனால், மாநிலங்கள் முன்வைக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப் போவது யார், அந்த ஒதுக்கீடு முறையாகச் செய்யப்படுகிறதா என்று கண்காணிக்கப் போவது யார் என்கிற கேள்விகள் எழுகின்றன. இந்த வேலையை நிதியமைச்சகம் செய்ய முடியாது. மத்திய கொள்கைக் குழு என்கிற புதிய அமைப்பில் இப்படி பல விடை தெரியாத கேள்விகள் எழுகின்றன. செயல்பாடுகள்தான் இதுபோன்ற ஐயப்பாடுகளுக்கு விடையளிக்க வேண்டும்.

மாநிலங்களுக்கு பொருளாதாரப் பிரச்னைகளில் ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவாகவும், தனியார்மயத்தால் தேசத்தின் பொருளாதாரமும், சாமானியர்களின் நலனும் பாதித்துவிடாமல் கண்காணிக்கும் அமைப்பாகவும் மத்திய கொள்கைக் குழு செயல்படுவது அவசியம். கூட்டாட்சித் தத்துவத்துக்கு வலு சேர்க்க முற்பட்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. பாராட்டுகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.