பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் கட்டுப்படுத்தி இருப்பதாக அமெரிக்கா நற்சான்று அளித்து, இந்த ஆண்டிற்கான 53.20 கோடி டாலர் நிதியுதவியை பாகிஸ்தானுக்கு வழங்க அமெரிக்க அரசு உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படும் செய்தியின் உண்மை நிலை இன்னும் தெரியவில்லை. நிதியுதவி அளிப்பதற்காக அப்படியொரு நற்சான்றிதழ் தேவையில்லை என்றும், 2013 முதல் இதுவரை எந்த நிதியுதவியும் வழங்கப்படவில்லையென்றும் அமெரிக்க உள்துறை தெரிவித்திருக்கிறது. எது எப்படியானாலும் பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் அமெரிக்க நிதியுதவி என்பது இந்திய-அமெரிக்க உறவில் ஒரு நெருஞ்சி முள்.
மும்பைத் தாக்குதலுக்கு உதவிய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய நபர் ஜாகீர் ரஹ்மான் லக்வி பிணையில் விடுவிக்கப்பட்டு, உலக அளவில் எழுந்த கடும் விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகளால் வேறு வழியில்லாமல், மற்றொரு வழக்கில் சிறையில் தொடர்ந்து "தங்கும்' நிலை ஏற்பட்டிருக்கிறது. மற்றொரு பயங்கரவாத சார்பு இயக்கமான ஜமாத்-உத் தவா தலைவர் ஹபீஸ் சயீத் டிசம்பர் 4-ஆம் தேதி பாகிஸ்தானில் பெரும் ஊர்வலம் நடத்தி, தனது வலிமையை நிரூபித்திருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு, நடுக்கடலில் சுற்றி வளைக்கப்பட்டவுடன் வெடித்துச் சிதறிய படகு, வெடி பொருள்களுடன் இந்தியாவை நோக்கி வந்திருப்பது உறுதியாகியிருக்கிறது. தொடர்ந்து பயங்கரவாதிகள் பாகிஸ்தான் மண்ணிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிக் கொண்டே இருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது, பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் கட்டுப்படுத்தி இருக்கிறதா என்பதை சொல்லியா தெரிய வேண்டும்?
1947-ஆம் ஆண்டு பாகிஸ்தான் உருவானது முதலாகவே அந்த நாட்டுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதியுதவி செய்து வருகிறது. காஷ்மீர் விவகாரத்திலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறது. 1947 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா 6,700 கோடி டாலர் நிதியுதவி செய்துள்ளது.
பாகிஸ்தானின் நடவடிக்கை எதுவுமே திருப்தி அளிக்காத நிலையில், 1990-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரை, அமெரிக்க நிதிநல்கை சொற்பத்தொகையாக, சற்றொப்ப 20 கோடி டாலராகக் குறைந்தது. ஆனால், 2002-இல் நியூயார்க்கில் அல்}காய்தா நடத்திய இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, உடனடியாக 200 கோடி டாலராக நிதிநல்கை உயர்ந்தது.
2009-ஆம் ஆண்டில் "பாகிஸ்தானுடன் மேம்பட்ட நல்லுறவுச் சட்ட'த்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற ஒப்புதல் பெற்று, 2010 முதல் 2014 வரையிலான 5 ஆண்டுகளுக்கு மொத்தம் 750 கோடி டாலர் நிதிநல்கை வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது. பாகிஸ்தானில் தங்கியிருந்த அல்}காய்தா தலைவர் ஒசாமா பின்
லேடன், மே 2, 2011-இல், பாகிஸ்தான் அரசுக்கே தெரியாமல் நுழைந்த அமெரிக்க அதிரடிப் படையால் கொல்லப்பட்டார். அமெரிக்கா பாகிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைவதற்குக் கொடுத்த விலைதான் 750 கோடி அமெரிக்க டாலர்.
அமெரிக்கா வழங்கும் நிதியில் 60 விழுக்காட்டை மக்கள் வாழ்வாதார மேம்பாட்டுப் பணிகளுக்காகவும், 40 விழுக்காட்டை பாதுகாப்பு பணிகளுக்காகவும் (ராணுவத்துக்காக) பாகிஸ்தான் பயன்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த நிதியுதவி பயங்கரவாத அமைப்புகளை வளர்ப்பதற்குதான் உதவுகிறது என்பதுதான் நிஜம்.
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மட்டுமல்ல, பல்வேறு நாடுகளும்கூட நிதியுதவி செய்கின்றன. ஐக்கிய அரபு நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் சுமார் 10 கோடி டாலர் அளவுக்கு நிதியுதவி செய்கின்றன. உலக வங்கியும், ஆசிய வளர்ச்சி வங்கியும் கோடிகோடியாய் கடன் அளிக்கின்றன. சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்.) பாகிஸ்தானுக்குக் கடனாகக் கொடுத்த 500 கோடி டாலர் மீளவே இல்லை. உறவு முறிந்தது. தற்போது நவாஸ் ஷெரீப் பிரதமரான பிறகுதான் மீண்டும் ஐ.எம்.எப். கடனுதவி அளிக்க முன்வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்கும் நாடுகளில் ஒன்றாக சீனாவும் சேர்ந்துள்ளது. இவ்வளவு பணம் கிடைத்தும் பாகிஸ்தானில் வறுமையும் தீரவில்லை. வாழ்வாதாரமும் மேம்படவில்லை. பயங்கரவாதம் தொடர்வதுதான் மிச்சம்.
அமெரிக்கா தொடர்ந்து பாகிஸ்தானுக்கு உதவி செய்வதில் இந்தியாவுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. அமெரிக்க மக்களின் வரிப் பணத்தை அந்த நாட்டு அரசு எப்படிச் செலவு செய்கிறது என்பதைப் பற்றி நாம் கருத்துத் தெரிவிக்க முடியாது. ஆனால், பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கட்டுப்படுத்தியுள்ளதாக சான்று அளிப்பது என்பது ஏற்புடையதாக இல்லை.
நாம் அமெரிக்காவுடன் நட்பு பாராட்டியாக வேண்டும். ஏனென்றால், பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்கள் பற்றி முக்கியத் தகவல்கள் அமெரிக்க உளவுத் துறை மூலமாகத்தான் நமக்கு தரப்படுகிறது.
மேலும், ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் பயங்கரவாதம் தலைதூக்காமல் இருக்க வேண்டுமானால், அமெரிக்காவுக்கு பாகிஸ்தானின் உதவி தேவைப்படுகிறது.
அமெரிக்காவின் இந்தத் தேவையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது பாகிஸ்தான். அதுமட்டுமல்லாமல், தனது மேற்குப் பகுதியில் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதுபோல வேடம் போடும் பாகிஸ்தான், கிழக்குப் பகுதியில் இந்தியாவுக்குள் பயங்கரவாதத்தை வளர்ப்பதற்கு அமெரிக்கா தரும் நிதியுதவியைப் பயன்படுத்துகிறது. இதை அமெரிக்கா புரிந்து செயல்படுவது நல்லது. அமெரிக்காவின் "பூனைக்கும் காவல், பாலுக்கும் தோழன்' என்கிற இந்த நிலைப்பாடு பயங்கரவாதத்தை வளர்க்கத்தான் உதவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தலைவர்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

