நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

இப்படியே எத்தனை காலம்...?

அண்மையில், பொருளாதாரக் கருத்தரங்கு ஒன்றில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், வேளாண் கடன் தள்ளுபடியால் விவசாயிகள் எந்த அளவுக்குப்

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:21 am

ஆசிரியர்

அண்மையில், பொருளாதாரக் கருத்தரங்கு ஒன்றில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், வேளாண் கடன் தள்ளுபடியால் விவசாயிகள் எந்த அளவுக்குப் பயன் அடைந்துள்ளனர் என்ற கேள்வியை எழுப்பினார். இந்தக் கேள்விக்கு இதுநாள் வரை எந்த அர

சியல் கட்சியும் பதில் சொல்லவில்லை. விவாதத்தில் இறங்கவும் தயாராக இல்லை.

இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில், இத்தகைய கேள்வியை எழுப்பியுள்ள ராஜன், விவசாயிகளின் தற்கொலைச் சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்தாலும், வேளாண் கடன் தள்ளுபடி தற்கொலையைத் தடுக்க உதவிகரமாக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து இப்போது அவர் பேசக் காரணம், ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியும், தெலங்கானா மாநிலத்தில் தெலங்கானா ராஷ்ட்ர சமிதியும் போட்டி போட்டுக் கொண்டு வேளாண் கடன் தள்ளுபடியை அறிவித்தன. தேர்தல் வெற்றிக்கு இது உதவியது. ஆனால், இரண்டு மாநிலங்களிலும் இதற்கான நிதியாதாரம் இல்லை.

வேளாண் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வது என்றால், தெலங்கானா மாநிலத்துக்கு ரூ.40,000 கோடியும், ஆந்திர மாநிலத்துக்கு ரூ.54,000 கோடியும் தேவை. இந்த மாநிலங்கள் இத்தொகையில் 25 சதவீதத்தை முதல் தவணையாக வங்கிகளுக்கு ரொக்கமாகச் செலுத்த வேண்டும். மீதித் தொகையை விற்கத்தக்க பத்திரங்களாக வழங்க வேண்டும். ஆனால், இரண்டு மாநிலங்களிடமும் தற்போது நிதியாதாரம் இல்லை. ஆகவே, அவை ஏற்கெனவே அறிவித்த வேளாண் கடன் தள்ளுபடியில் முதல் கட்டமாக குறைந்த அளவு கடன் (ரூ.50,000 வரை) பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்வது என்று தீர்மானித்துள்ளன. இதற்கும்கூட குறைந்தபட்சம் ரூ.20,000 கோடி தேவை. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த விவசாயிகளில் பாதிக்கும் மேற்பட்டோரின் விளைநிலங்களில், கடன் தள்ளுபடி செய்யும் அளவுக்கு புயலால் பயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை.

2008-ஆம் ஆண்டு, அன்றைய மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் ரூ.52,000 கோடி வேளாண் கடன் தள்ளுபடியை அறிவித்தார். இதன் மூலம் 3.69 கோடி விவசாயிகள் பயன் அடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், பொதுக் கணக்கு தணிக்கைக் குழு அறிக்கையில், 25 மாநிலங்களில் சுமார் ஒரு லட்சம் வேளாண் கடன் கணக்குகளைப் பரிசோதித்ததில், வேளாண் கடன் தள்ளுபடியில் 22 சதவீதம் முறையற்றதாகவும், தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தங்க நகைகளின் பேரில் குறைந்த வட்டிக்கு வேளாண் கடன் வழங்கப்படுகிறது. ஆனால், இந்தக் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி, அந்தப் பணத்தை அதிக வட்டிக்கு வெளியில் கொடுக்கும் பெருவிவசாயிகள் அதிகமானோர். வங்கி அதிகாரிகளிடம் செல்வாக்கு இருந்தால், விவசாயம் செய்யாதவர்களும்கூட தங்க நகையின் பேரில் வேளாண் கடன் பெற முடிகிறது. நிலைமை இப்படி இருக்க, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது அறிவிப்பில் வேளாண் கடன் மட்டுமன்றி, தங்க நகையின் பேரில் வேளாண் கடன் பெற்றவர்களுக்கும் இந்தக் கடன் தள்ளுபடி பொருந்தும் என்று அறிவித்திருக்கிறார்.

வங்கிகளில் கடன் பெறுவோர் ஓரளவுக்கு வசதியுள்ளவர்களாகவும் சொந்தமாக நிலம் வைத்திருப்போராகவும் இருக்கின்றனர். ஆனால், வங்கி சாராமல், தனியாரிடமும் உர விற்பனை மற்றும் கொள்முதல் செய்வோரிடமும் கடன் வாங்கி விவசாயம் செய்வோர்தான் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். தற்கொலை செய்துகொள்ளும் அவலத்துக்கு ஆளாகிறவர்களில் இவர்கள்தான் அதிகம். ஆனால், அரசுகள் அறிவிக்கும் வேளாண் கடன் தள்ளுபடி இந்த விவசாயிகளுக்கு எந்தப் பயனையும் தருவதில்லை. இந்த வேளாண் வங்கிக் கடன் தள்ளுபடியால் அரசியல் லாபம் மட்டுமே சாத்தியமாகிறது என்பதுதான் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் கருத்து.

இதுமட்டுமன்றி, விவசாயிகளுக்கு தவறான சமிக்ஞையாக இத்தகைய கடன் தள்ளுபடி அமைந்துவிடுகிறது. தள்ளுபடி செய்துவிடுவார்கள் என்று கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் விவசாயிகளின் எண்ணிக்கையை உயர்த்திவிடுகின்றன இத்தகைய கடன் தள்ளுபடி அறிவிப்புகள்.

கோடிகோடியாய் கடன் வாங்கி, அந்தப் பணத்தை பொய்க் கணக்கு எழுதி, நட்டக் கணக்குக் காட்டும் தொழிலதிபர்களின் வாராக்கடன்களை ரத்து செய்யும் வங்கிகள், விவசாயிகளுக்கான கடன்களையும் தள்ளுபடி செய்தால் என்ன என்பது இத்தகைய தருணங்களில் முன்வைக்கப்படும் வாதம். கொள்ளையடிப்பவரைக் கைது செய்ய முடியாத காவல் துறை, பிக்பாக்கெட்டுகாரர்களைக் கைது செய்யக்கூடாது என்பதைப் போன்ற விதண்டாவாதம் இது.

தொழில் துறையில் தகுதியில்லாதவர்களுக்கு வழங்கப்படும் கடன் தள்ளுபடி, வாராக்கடன் ரத்து இரண்டுமே தவறுதான். கடன் தள்ளுபடி என்பது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க உதவுவதாக இருக்க வேண்டும். வாக்கு வங்கியை பெறுவதற்காக இருத்தல் கூடாது. அரசியல் ஆதாயத்திற்காக கடன் தள்ளுபடி செய்வது, வாராக்கடன் ரத்து, வரி ஏய்ப்புக்கு மன்னிப்பு வழங்குவது போன்ற நடவடிக்கைகள் இலவசம் வழங்குவதைப்போல எதிர்பார்ப்பை ஏற்படுத்துமே தவிர, பிரச்னைகளுக்குத் தீர்வாகாது.

விவசாயிகள் கடன் சுமையால் அவதிப்படக் கூடாது. அதேசமயம், வசதி படைத்த பெருவிவசாயிகள் மட்டுமே இந்தப் பலனைப் பெறுவோராகவும் இருக்கக்கூடாது. இதற்கான ஒரு புதிய திட்டத்தை, நடைமுறை சாத்தியமான திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும். ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் கருத்தை நாம் வழிமொழிகிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.