பிரதமர் நரேந்திர மோடி தனது சுற்றுப்பயணத்தின் திடீர் நிகழ்வாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்தது உலக அளவில் அனைவராலும் பாராட்டப்படும் சந்திப்பாக, இந்தியா - பாகிஸ்தான் உறவின் புதிய தொடக்கத்துக்கான அறிகுறியாகத் தென்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையும், சீனாவும், அமெரிக்காவும் இந்த சந்திப்பைப் பாராட்டியுள்ளன. காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்கள்கூட இதை வரவேற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி மட்டும்தான் இந்த சந்திப்பைக் குறை கூறியுள்ளது.
"அசட்டுத் துணிச்சல்' என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி குறிப்பிட, இந்த சந்திப்பில் தேச நலன் ஏதுமில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி எதைச் செய்தாலும் குறை சொல்வது என்கிற மனநிலையில் காங்கிரஸ் கட்சி இருப்பதால், இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
அதேநேரத்தில், பா.ஜ.க. மத்திய அமைச்சர்களும், பா.ஜ.க. கட்சியினரும் இந்த சந்திப்பை மேலதிகமாகப் புகழ்வது, இந்தச் சந்திப்பினால் ஏற்பட இருக்கும் பயனைக் குலைத்துவிடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது. பா.ஜ.க. தலைவர்கள் இந்த சந்திப்பை பெரிய சாதனையாக வர்ணிக்காமல் இருப்பதுதான் இரு நாடுகளின் பிரதமர் சந்திப்பின் பயனை முன்னெடுத்துச் செல்லவும், இரு நாடுகளும் இணக்கமான பல்வேறு செயல்திட்டங்களில் இறங்கவும் வழிகோலும். மோடி சிறந்த ராஜதந்திரி என்று பா.ஜ.க. தலைவர்கள் புகழ்வதன் மூலம், அதற்கு எதிர்வினை புரிய வேண்டும் என்கிற தேவையற்ற பிடிவாதத்தால் எதிர்க்கட்சிகள் பலவாறாகப் பேசி தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்தக் கூடும்.
காங்கிரஸ் கட்சியினர் இப்போதே இந்த சந்திப்புக்கு எதிர்வினையாகப் பேசத் தொடங்கிவிட்டனர். "இதே சந்திப்பை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் செய்திருந்தால், பா.ஜ.க. கடுமையாக விமர்சித்திருக்கும். தேசநலன் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக சாடியிருக்கும். இப்போது பிரதமர் மோடி இந்த சந்திப்பை நிகழ்த்தியிருப்பதால் பாராட்டுகிறார்கள்' என்று பேசத் தொடங்கியுள்ளனர்.
2007-ஆம் ஆண்டு, அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், அமிர்தசரஸில் காலை உணவு முடித்து, லாகூரில் மதிய உணவு சாப்பிட்டு, இரவு உணவை காபூலில் உண்ண வேண்டும் என்பது என் கனவு என்று தெரிவித்திருந்தார். இப்போது அதைத்தான் நரேந்திர மோடி செய்திருக்கிறார். தலைகீழாக! காபூலில் இந்திய அரசு நிதியுதவியில் கட்டப்பட்ட ஆப்கன் நாடாளுமன்றத்தைத் திறந்துவைத்துவிட்டு, மதியம் லாகூரில் பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டுக்குச் சென்று, அவரைச் சந்தித்து இரவு தில்லிக்குத் திரும்பிவிட்டார் நரேந்திர மோடி. மன்மோகன் கண்ட கனவை பிரதமர் மோடி நனவாக்கியிருப்பதை காங்கிரஸால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
தற்போதைய லாகூர் சந்திப்பில் பேச்சுவார்த்தை ஏதும் நடந்துவிடவில்லை. நட்பு ரீதியில் இரு தலைவர்கள் வாழ்த்திக் கொள்வதும், ஒருவரது இல்லத் திருமண நிகழ்வுக்கு முன்பாக அந்த குடும்ப நிகழ்வில் பங்கு பெறுவதும் மிக இயல்பான, அரசியலுக்கு அப்பாற்பட்ட சந்திப்பு. இத்தகைய எளிய, அரசியலுக்கு அப்பாற்பட்ட நெருக்கமான நட்புறவு அரசியல் சார்ந்த முடிவுகளில் தாக்கம் ஏற்படுத்தக்கூடும் என்பதால்தான் இந்த சந்திப்பை உலக நாடுகள் முழுவதும் பாராட்டுகின்றன.
பிரதமர் மோடி தனது பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்கள் அனைவரையும் வரவேற்றதும், அதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்துகொண்டதும் மிக நல்ல தொடக்கமாக இருந்தது. அதைக் குலைக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவின் எல்லைப் பகுதி மீது ராணுவத் தாக்குதல்கள் படுதீவிரமாக்கப்பட்டன. பயங்கரவாதிகள் எல்லைகடந்து வருவதும் அதிகரித்தது. அன்றாடம் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதற்கு அடிப்படைக் காரணம், இந்தியா - பாகிஸ்தான் இடையே நல்லுறவு ஏற்பட்டுவிட்டால் நம் பிழைப்பில் மண் விழுந்துவிடும் என்று பயங்கரவாதிகள் கருதியதுதான்!
பிரதமர் மோடியின் இந்தத் திடீர் சந்திப்பையும் பயங்கரவாதிகள் சகித்துக்கொள்ள மாட்டார்கள். எல்லையில் தொல்லை தருவார்கள். அப்படிப்பட்ட சூழலில் இந்தியா எவ்வாறு செயல்படும், இந்த எல்லை தாண்டியப் பிரச்னைகள் தொடர்பானபேச்சுவார்த்தையை எவ்வாறு முன்னெடுத்துச் செல்லும் என்பதில்தான் மோடியின் உண்மையான ராஜதந்திரம் வெளிப்படும்.
இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் இந்திய எதிர்க்கட்சிகள் அதீத எதிர்வினைகள் புரியாமல் இருந்தால், அதுவே இந்த நட்புறவு மலர உதவியாக அமையும். பாரீஸ் புவிவெப்ப மாநாட்டில் மோடியும், நவாஸ் ஷெரீப்பும் சந்தித்துக் கொண்டதன் தொடர்நிகழ்வாக, தாய்லாந்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்துப் பேசியதை சில கட்சிகள் கண்டித்தன. நாடாளுமன்றத்துக்கே தெரியாமல் ஒரு பேச்சுவார்த்தையா? என்று அறிக்கைகள் வெளியிட்டன. நாடாளுமன்றத்தில் சுஷ்மா ஸ்வராஜ் தனது தாய்லாந்து சந்திப்பு குறித்து விளக்கம் அளிக்க நேரிட்டது.
இந்தியா - பாகிஸ்தான் உறவு மேம்படக் கூடாது என்று பயங்கரவாதிகள் வன்முறையைத் தூண்டிவிட்டால் அதை அரசு எதிர்கொள்ளவும், தடுக்கவும் முடியும். ஆனால், எதிர்க்கட்சிகள் அரசியல் ரீதியாக தடைச்சுவராக மாறினால், அதை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளும்போது, தேவையற்ற காலதாமதம்தான் ஏற்படும். இது இந்தியா - பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்குமே நல்லதல்ல.