கடந்த வாரம் முழுவதும் நேஷனல் ஹெரால்டு விவகாரமும் நாடாளுமன்ற அமளியும் பல செய்திகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன. அவற்றில் ஒன்று, "அரசியலில் பணப் பயன்பாடும் மக்கள் பிரதிநிதித்துவத்தில் அதன் தாக்கமும்' என்ற தலைப்பில் தில்லியில், தேர்தல் ஆணையமும், மக்களாட்சி மற்றும் தேர்தல் நடைமுறைகளுக்கான "இன்டர்நேஷனல் ஐடியா' அமைப்பும் சேர்ந்து நடத்திய தெற்காசிய மண்டல மாநாடு.
டிசம்பர் 16, 17 தேதிகளில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆசிய நாடுகள் பலவற்றின் தேர்தல் பிரிவு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி, முந்தைய தலைமைத் தேர்தல் ஆணையர்கள் குரேஷி, வி.எஸ். சம்பத், நவீன் சாவ்லா, எச்.எஸ். பிரம்மா, "இன்டர்நேஷனல் ஐடியா'வின் மண்டல இயக்குநர் ரீனா ரிக்கிலா தமங், இந்திய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாடு, உரிய கவனம் பெறாமலேயே முடிந்துபோனது வேதனைக்குரியது.
இந்த மாநாட்டின் தீர்மானத்தில், தேர்தலில் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிப்பதற்கான ஒன்பது அம்சங்கள், தேர்தலை ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் அமலாக்க நெறிகளின் ஒன்பது அம்சங்களையும் விவரித்திருக்கிறார்கள். இவற்றில், தேர்தல் செலவை தீர்மானித்தல், அரசியல் கட்சிகளுக்கான செலவை அரசு ஏற்றுக்கொள்வது, அரசியல் கட்சிகளுக்கு தரப்படுகின்ற நன்கொடை ஆகியன குறித்து இத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் உடனடியாகப் பரிசீலிக்கப்பட்டு அமல்படுத்தப்பட வேண்டியவை.
தேர்தல் செலவை ஒழுங்குபடுத்தல், அமல்படுத்தல் நெறிமுறைகளை விவரிக்கும்போது, தேர்தல் செலவை எல்லா தொகுதிகளுக்கும் ஒரே அளவு நிர்ணயித்தல் சரியல்ல என்று தெரிவித்திருக்கின்றனர். ஒரு தொகுதியில் பதிவான வாக்காளர் எண்ணிக்கை, அந்தத் தொகுதியின் தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தொகுதி வாரியாக வேட்பாளரின் அதிகபட்ச தேர்தல் செலவை தீர்மானிக்க வேண்டும் என்கிறார்கள். சென்னை போன்ற மாநகரப் பகுதியா அல்லது அதிக கிராமங்களைக் கொண்ட பகுதியா என்பதைப் பொருத்து அதன் தன்மை மாறும்.
தேர்தல் பிரசாரச் செலவுகள் என்பதை வேட்பாளருக்கு மட்டுமே அளவு நிர்ணயிக்காமல், அவர் சார்ந்த கட்சி அதிகபட்சம் எவ்வளவு செலவிடலாம், ஒரு வேட்பாளருக்காக மூன்றாவது நபர் எவ்வளவு செலவிடலாம் என்பதையும் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
வேட்பாளரின் பெயரைக் குறிப்பிட்டால் அது அவரது செலவுக் கணக்கில் சேரும் என்பதால், பெரிய அரசியல் கட்சிகள் பல விளம்பர உத்திகளைக் கடைப்பிடிக்கின்றன. கட்சியின் தேர்தல் சின்னத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி தொலைக்காட்சிகளிலும், அச்சு ஊடகங்களிலும் பெரிய அரசியல் கட்சிகளின் விளம்பரத்தால் ஆக்கிரமிப்பு செய்வது, சாதாரண வேட்பாளரின் சின்னத்தை மக்கள் மனதில் பதியவிடாமல் செய்துவிடுகிறது. வேட்பாளரின் பெயர் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒரு கட்சி தனது சின்னத்தை மட்டுமே வைத்து தேர்தல் பிரசாரம் செய்தாலும் அந்தச் செலவும் அரசியல் கட்சிகளுக்கு அத்தொகுதியில் நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறக்கூடாது என்பதை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
கட்சிக்கு வழங்கப்படும் நிதி அல்லது பொருள் எதுவாக இருந்தாலும் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகபட்ச நன்கொடை அளவு நிர்ணயிக்கப்பட வேண்டும். வெளிநாடு வாழ்வோர் அல்லது அமைப்புகளிடமிருந்து கட்சிகளுக்கு நிதி வருவது தடை செய்யப்பட வேண்டும். பெயர் தெரியாத நபர்களிடமிருந்து பெறப்படும் நன்கொடை எந்த அளவுக்கு இருக்கலாம் என்பதையும் நிர்ணயிக்க வேண்டும். இவையெல்லாம்கூட இந்த மாநாட்டுத் தீர்மானத்தில் காணப்படுகின்றன.
தேர்தல் நிதி பொதுக்கூட்டம் நடத்தி, பல கோடி ரூபாய் கட்சித் தலைவரிடம் வழங்கும் நடைமுறை நடந்துகொண்டிருக்கிறது. பெயர் இல்லாதவர்களிடம் பெறப்படும் நிதிக்கு அளவு நிர்ணயிக்க வேண்டும் என்று சொல்வதைப்போல, அனைத்து நன்கொடைகளும், தனிநபர் நன்கொடையாக இருந்தாலும்கூட, வங்கிக் கணக்கில் இருந்து அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட வேண்டும் என்கிறது தீர்மானம். ஆட்சியிலிருக்கும்போது ஊழல் செய்து ஒதுக்கிய பணத்தை தேர்தல் நிதி என்கிற பெயரில் குப்பன் சுப்பன் என்ற பெயர் எழுதி, கணக்கில் வரவு வைக்கும் முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிறது தீர்மானம்.
வேட்பாளருக்காக அரசு வழங்கும் சலுகைகள் அர்த்தமுள்ளவையாக மாற்றப்பட வேண்டும். அரசியல் கட்சிகள், அச்சு ஊடகம் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக செய்யும் விளம்பரங்கள் மட்டுமன்றி, சமூக வலைத்தளங்கள் மூலம் நடத்தப்படும் பிரசாரங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்கிறது ஒரு தீர்மானம். கடந்த மக்களவைத் தேர்தலில், வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதும்கூட முகநூல், கட்செவி அஞ்சலில் தனிநபர் என்ற போர்வையில் அரசியல்வாதிகளின் பிரசாரம் நடந்துகொண்டே இருந்தது. சமூக வலைத்தளங்கள் தேர்தலில் ஏற்படுத்தும் தாக்கத்தை தேர்தல் ஆணையம் சட்டை செய்யவே இல்லை.
மாறிவரும் காலத்துக்கேற்ப தேர்தல் நெறிமுறைகள், கட்டுப்பாடுகள் மாற்றப்பட வேண்டும், தேர்தல் மேலும் சுதந்திரமானதாக, சமவாய்ப்பு வழங்குவதாக மாற வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும். ஆனால், இந்த மாநாடே மக்களுக்குத் தெரியாமல் நடந்து முடிந்திருக்கும்போது, இந்த அமலாக்க நெறிகள் குறித்த பரிந்துரையைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

