சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

தத்தெடுங்கள்!

இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களில் சுமார் 50,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால், ஆண்டுக்கு சுமார் 1,000 குழந்தைகள் மட்டுமே தத்தெடுக்கப்படுகிறார்கள்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:29 am

ஆசிரியர்

இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களில் சுமார் 50,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால், ஆண்டுக்கு சுமார் 1,000 குழந்தைகள் மட்டுமே தத்தெடுக்கப்படுகிறார்கள். இதற்குக் காரணம், காலத்துக்குப் பொருந்தாத சட்ட விதிமுறைகளும், குழந்தைகள் தத்தெடுப்பு ஆணையத்தின் மெத்தனப் போக்கும்தான்.
 ஆதரவற்றோர் இல்லங்களின் நிர்வாகிகள் பங்கு கொண்ட கூட்டத்தில் பேசிய மத்திய பெண்கள், குழந்தைகள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கடும் கோபத்தில், இத்தகைய சூழலை "அவமானகரமானது' என்று குறிப்பிட்டார். "ஏன் மூன்று ஆண்டுகள் வரை இழுத்தடிக்கிறீர்கள்? ஏன் வெளிநாட்டவருக்கு மட்டுமே முன்னுரிமை தருகிறீர்கள்?' என்று பொரிந்து தள்ளினார்.
 சட்டப்படியாகத் தத்தெடுக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 1,000 என்பதாக இருப்பினும், இந்தியா முழுவதிலும் திருடுபோகும் பச்சிளம் குழந்தைகள் எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு. குழந்தையின்றி வாடும் தம்பதிகள், குழந்தைகளை சில லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கத் தயாராக இருப்பதால்தான் இத்தகைய திருட்டுகள் நடைபெறுகின்றன.
 தற்போதைய நவீன மருத்துவத்தில் செயற்கைக் கருவூட்டல் முறையில் குழந்தைகள் பெறுவதும், வாடகைத் தாய் மூலம் குழந்தைகள் பெறுவதும் எளிதாகவும், தங்கள் வருமானத்துக்கு உள்பட்டதாகவும் மாறி வருவதால், பச்சிளம் குழந்தைகள் திருடப்படுவது சற்றுக் குறைந்துள்ளதே தவிர முற்றிலுமாக இல்லாதொழியவில்லை. திருடப்படும் அந்தக் குழந்தைகள் பெரும்பாலும் தத்துக் கொடுக்கத்தான் திருடப்படுகின்றன அல்லது விற்கப்படுகின்றன என்றாலும் பிச்சை எடுக்கவும், பாலியல் தொழிலுக்கு விற்கப்படுவதும்கூட நடைபெறுகிறது.
 குழந்தை தத்தெடுப்புக்கான விதிமுறைகள் 4 மாதங்களுக்குள் நிறைவடைந்து, தத்தெடுக்கும் பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைக்கும் வகையில் நடைமுறை எளிமையாக்கப்பட்டால், ஆண்டுக்கு சுமார் 10,000 முதல் 15,000 குழந்தைகள் தத்து கொடுக்கப்படும் நிலை உருவாகும் என்ற கருத்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
 அதனடிப்படையில், மத்திய அரசு தத்தெடுப்பு சட்ட விதிமுறைகளை எளிமையாக்கி அண்மையில் அறிவித்துள்ளது. இதன் முக்கியமான அம்சம், தத்தெடுக்க விரும்புவோர், தத்தெடுக்கப்படக் கூடிய குழந்தைகள் குறித்த அனைத்துத் தகவல்களும், அதாவது இந்தியா முழுவதிலும் பெற்றோர் இல்லாத அல்லது கைவிடப்பட்ட அல்லது தத்துக் கொடுப்பதற்காக பெற்றோரால் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் அனைவருடைய தகவல்களும் ஒரே இணைய முகவரியில் பதிவு செய்யப்படும். இதற்காக, மத்திய தத்தெடுப்புக்கான ஆதாரத் தகவல்களை நெறிபடுத்துவதற்காக "கேரிங்ஸ்' (CARINGS) என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. மாநிலத்துக்கு உள்பட்ட, மாநிலங்களுக்கு இடையிலான தத்தெடுப்புகளும் இதன் மூலம் எளிதில் சாத்தியமாகிறது.
 தத்தெடுக்க விரும்புவோர் தங்கள் பெயர், ஆவணங்களை இணையத்திலேயே பதிவு செய்யலாம். தத்தெடுப்போரின் இருப்பிட ஆய்வு அறிக்கையை எந்த மையம் மேற்கொள்ளலாம் என்ற தேர்வும்கூட தத்தெடுப்போருக்கு அளிக்கப்படுகிறது. மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் நியமிக்கும் நபர் இந்த ஆய்வை விரைந்து முடித்து அறிக்கையை சமர்ப்பிப்பார். வேறு மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைகளைத் தத்தெடுக்கத் தங்களது மாநிலத் தத்தெடுப்பு ஆதார மையத்தின் அனுமதி பெறத் தேவையில்லை என்கிறது புதிய வழிகாட்டு நெறிமுறை. அதேபோன்று, குழந்தைக்கும் தத்தெடுக்கும் பெற்றோருக்குமான வயது இடைவெளி 25 இருந்தால் போதும் என்றும் குறைக்கப்பட்டுள்ளது.
 முந்தைய காலங்களில், குழந்தைகளைத் தத்தெடுப்போர் உண்மையாகவே குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொள்வார்களா அல்லது வீட்டு வேலைக்கு ஓர் ஆளாக மாற்றிவிடுவார்களா என்ற அச்சத்தின் காரணமாகவும், தத்து கொடுக்கப்பட்ட குழந்தைகள், தத்தெடுத்த பெற்றோரையும் தொடர் கண்காணிப்பில் வைப்பதும் கடினமாக இருந்ததால், தத்தெடுப்பு விதிமுறைகள் மிகவும் கடுமையாக இருந்தன. இப்போது வருமான வரித் துறையின் பான் அட்டை இருந்தாலே போதும். அவருடைய வங்கிக் கணக்கு விவரம், அவர் பயன்படுத்தும் ஏ.டி.எம். மையம் உள்பட எல்லாத் தகவல்களும் கிடைக்கும். இவர்களைத் தேடுவதும், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளை எவ்வாறு பராமரிக்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பதும் மிக எளிது.
 தத்து கொடுக்கப்பட்ட குழந்தைகள் ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்டால் அந்தக் குழந்தைகளின் நலனை விலகி நின்று பார்த்து அறிக்கை தாக்கல் செய்வதும் எளிது. குழந்தைகள் நலனில் ஆர்வமும், அர்ப்பணிப்பும் உள்ள ஓர் அமைப்பினால், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளைத் தொடர் கண்காணிப்பு செய்வது இன்றைய நவீன தகவல் தொழில்நுட்பத்தில் மிகவும் எளிது. ஆகவே, விதிமுறைகள் தளர்த்தப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
 தத்தெடுப்பு விதிமுறைகளைத் தளர்த்தியதைப் போலவே, வளர்த்தெடுப்பு முறையையும் மத்திய அரசு அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன்படி, குழந்தைகளைத் தங்கள் வீட்டில் தங்கள் குழந்தையுடன் மற்றொரு குழந்தையாக வளர்க்க விரும்புவோர், ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள குழந்தைகளைத் தேர்வு செய்து வீட்டிலேயே வளர்க்கலாம். அவர்களது உணவு, இதர தேவைகளுக்கான நிதியை அவர்தம் வங்கிக் கணக்கில் அரசு மாதம்தோறும் சேர்த்துவிடும்.
 குழந்தைகளை சரியாகப் பராமரிக்கிறார்களா, வளர்க்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு உண்டு. நமக்கும்கூட அந்தக் கடமை உண்டு!
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.