சுதந்திர தின உரை என்பது, அரசின் ஓராண்டு சாதனைகளையும், எதிர்கொள்ள இருக்கும் சவால்களையும், வருங்காலத்துக்கான திட்டமிடுதலையும், புதிய திட்டங்களையும், முடிவுகளையும் மக்கள் மன்றத்திடம் எடுத்துரைக்கப் பிரதமருக்குக் கிடைக்கும் வாய்ப்பு. நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரை, நிதிநிலை அறிக்கை ஆகியவை போலவே பிரதமர்களின் சுதந்திர தின உரையும் மிகவும் முக்கியமானது, கூர்ந்து கவனிக்கத்தக்கது.
கடந்த ஆண்டைப் போலவே, அரசியல் மேடையாக்கி விடாமல், மிகவும் பொறுப்புடனும், நிதானத்துடனும் தனது இரண்டாவது சுதந்திர தின உரையையும் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்தினார் என்பதை மறுப்பதற்கில்லை. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், அரசின் வளர்ச்சித் திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளும், மக்களுக்கு நம்பிக்கையூட்டும் திட்டங்களும் பிரதமரால் அறிவிக்கப்பட்டதுடன், யாரையும் புண்படுத்தாததும், விவாதத்துக்குரிய எந்தப் பிரச்னையையும் தனது உரையில் தவறியும் குறிப்பிடாததும், பதவியின் கெüரவம் பிரதமரைப் பண்படுத்தி இருப்பதைக் காட்டுகிறது.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, ஜாதிக் கலவரங்களை வன்மையாகக் கண்டித்துப் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருப்பது, அவரை மதவாதியாகச் சித்திரிப்பவர்களையும், மத, ஜாதியவாத சிந்தனையாளர்களையும் நிச்சயமாக யோசிக்க வைத்திருக்கும். இந்தியாவின் வளர்ச்சி என்பது அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துக் கொண்டு செல்வதில்தான் இருக்கிறது என்பதைப் பிரதமர் உணர்ந்திருப்பதை இது வெளிப்படுத்துகிறது.
"தூய்மை இந்தியா' திட்டத்தின் வெற்றி பற்றிய அவரது பெருமிதத்துக்குக் காரணம் இருக்கிறது. குப்பைக் கூளங்கள் அகன்றுவிட்ட தெருக்கள் சாத்தியமாகவில்லை என்றாலும், 2,62,000 பள்ளிக்கூடங்களில் 4,25,000 கழிப்பறைகள் கட்டப்பட்டிருக்கின்றன என்கிற உண்மை பாராட்டுக்குரியது. இதனுடைய தொடர் விளைவாகப் பெண் குழந்தைகள் அதிக அளவில் பள்ளிகளில் சேரவும், படிப்பைப் பாதியில் நிறுத்திவிடாமல் தடுக்கவும் வழிகோலும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
அடுத்த 1,000 நாள்களில் 18,500 கிராமங்களுக்கு மின்சார இணைப்பு வழங்குவது என்பது கிராமப்புற வளர்ச்சியில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பலாம். இந்த ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமரின் இரண்டு வரவேற்புக்குரிய அறிவிப்புகள், ஆதிவாசிகள் வசிக்கும் பகுதிகளின் முன்னேற்றத்துக்காக ஆண்டுக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடும், கடைநிலை ஊழியர்கள் நியமனத்தில் நேர்முகத் தேர்வுகளை அகற்றி இருப்பதும்தான்.
நிலம் கையகப்படுத்தும் மசோதாவானது தனது அரசு விவசாயிகளுக்கு எதிரானது என்கிற தோற்றத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்கிற நோக்கத்தில்தான், சுதந்திர தின உரையில் விவசாயம், விவசாயிகள் பற்றி மிகவும் அக்கறையுடன் பிரதமர் பேசியிருக்க வேண்டும். இனிமேல் வேளாண் அமைச்சகம் என்பது வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல்வாழ்வு அமைச்சகம் என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என்று பிரதமர் அறிவித்திருக்கிறார். அறிவிப்பால் மட்டுமே எதுவும் நிகழ்ந்து விடாது என்பது வேறு விஷயம்.
எதிர்க்கட்சிகள் பற்றியும், வேண்டுமென்றே எந்தவித சமாதானத்துக்கும் உடன்படாமல் நாடாளுமன்றத்தையும், அரசையும் செயல்படவிடாமல் தடுக்கிறார்கள் என்பது பற்றியும் பிரதமர் குறிப்பிடாதது அவரது பெருந்தன்மை. அதற்கு அவரைப் பாராட்டும் வேளையில், பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையில் மூன்று உறுத்தல்கள் காணப்படுகின்றன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
கடந்த ஓராண்டில் பிரதமர் நரேந்திர மோடி பல வெற்றிகரமான வெளிநாட்டுப் பயணங்களை நிகழ்த்தி இருக்கிறார். அநேகமாக எல்லா வல்லரசுகளுடனும் அவர் சுமுகமான உறவை ஏற்படுத்தி இருக்கிறார். அப்படி இருந்தும் சுதந்திர தின உரையில் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையின் வெற்றி பற்றி எதுவுமே பேசவில்லையே, ஏன்? பேசுவதற்கு, பகிர்ந்து கொள்வதற்கு எதுவுமே இல்லையா? புதிராக இருக்கிறது.
கருப்புப் பணம் இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளத்தையே கரையானாக அரித்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார் பிரதமர். ஆனால், கருப்புப் பணத்தை வெளிக்கொணர அரசு எடுத்த முயற்சியின் பயனால் கிடைத்திருப்பது வெறும் ரூ.6,500 கோடி மட்டுமே. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தைக் கொண்டு வருவது இருக்கட்டும். ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் கடிவாளம் போடுவதற்கு ஏன் அரசு இன்னும் "லோக்பால்' மசோதாவை நிறைவேற்றி, அதற்குப் போதிய அதிகாரங்களை அளிப்பதில் தயக்கம் காட்டுகிறது?
பிரதமர் மோடி, தனது தேர்தல் பிரசாரத்திலும் சரி, கடந்த ஆண்டு சுதந்திர தின உரையிலும் சரி, அரசின் வெளிப்படைத்தன்மை பற்றி வலியுறுத்தியது அவருக்கு மறந்திருக்காது. உண்மையிலேயே வெளிப்படையான அரசு நிர்வாகம் செயல்படுவதற்கு சமூக வலைதளங்களில் அரசின், அமைச்சர்களின் செயல்பாடுகளைப் பொதுமக்களின் பார்வைக்கு வைப்பது மட்டும் போதாது. அரசு தகவல் தொழில்நுட்பச் சட்டத்திலும், மானநஷ்டச் சட்டப் பிரிவிலும் கட்டுப்பாடு விதிக்க முற்படாமல் கருத்துச் சுதந்திரத்துக்கு வழிகோலுவதுதானே சரியாக இருக்கும்? இதுபற்றிப் பிரதமர் ஏன் பேசவில்லை?
இந்தக் குறைகளையும் மீறி, இந்திரா காந்திக்குப் பிறகு ஒரு பிரதமரின் சுதந்திர தின உரை சாமானியனையும் கூர்ந்து கவனிக்கவும், எதிர்பார்ப்புடன் கேட்கவும் வைத்திருக்கிறது என்றால் அது பிரதமர் நரேந்திர மோடியுடையதுதான்!