திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

தரமான வரிசைப்படுத்துதல் அல்ல!

தூய்மை இந்தியா திட்டத்தில் நாடு முழுவதும் 467 நகரங்களைத் தரவரிசைப்படுத்தியதில் திருச்சி நகருக்கு இரண்டாம் இடம் என்று அறிவிப்பு வெளியானபோது, ஒரு பக்கம் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், மற்றொரு பக்கம் துயரப் புன்னகையும் விரியவே செய்கிறது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:25 am

ஆசிரியர்

தூய்மை இந்தியா திட்டத்தில் நாடு முழுவதும் 467 நகரங்களைத் தரவரிசைப்படுத்தியதில் திருச்சி நகருக்கு இரண்டாம் இடம் என்று அறிவிப்பு வெளியானபோது, ஒரு பக்கம் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், மற்றொரு பக்கம் துயரப் புன்னகையும் விரியவே செய்கிறது.
 இது தமிழ்நாட்டுக்குக் கிடைத்த பெருமை என்று ஒருபுறம் மகிழ்ச்சி. ஆனால், இந்தத் தரவரிசைப் பட்டியலில் சென்னை 61-ஆவது இடத்திலும், கோவை 169-ஆவது இடத்திலும் இருப்பதைப் பார்க்கும்போது, ஏதோ தவறு நடந்துவிட்டிருப்பது போலத் தோன்றுகிறது. திருச்சிக்கு இரண்டாம் இடம் என்று அறிவித்ததன் மூலம் இந்தத் தரவரிசைப்படுத்துதலின் நம்பகத் தன்மையே முற்றிலுமாக ஐயப்பாட்டுக்கு உள்ளாகிவிடுகிறது.
 மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ள இந்த மதிப்பீடு வெறும் புத்தகக் கணக்கு. கணினியின் பதிவேட்டில் புள்ளிவிவரங்களைத் தந்து, அதிலிருந்து கிடைக்கும் முடிவுகள். அவ்வளவே. இந்தப் புள்ளிவிவரங்களுக்கும், உண்மைக்கும் உள்ள இடைவெளி மிக அதிகம். முறையான ஆய்வின் மூலம் எட்டப்பட்ட முடிவாக இது தெரியவில்லை.
 "தூய்மை இந்தியா' திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் அக்டோபர் 2014-இல் அறிவிக்கப்பட்டது. இதற்குள் தூய்மை இந்தியாவுக்கான திட்டங்களை அமல்படுத்துவது, நிதி ஒதுக்கீடுகூட சாத்தியமில்லாதது. இந்நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் நகரங்களைத் தரவரிசைப்படுத்துவதும் சாத்தியமில்லாதது.
 இவ்வாறு திருச்சி, மதுரை ஆகியன தூய்மை நகரங்களெனப் பாராட்டு பெறுவதும், சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்கள் புகழ்பட வாழாமல் போனதும் எதனால் என்று பார்க்கும்போது, இந்த நகரங்களில் திறந்தவெளியில் மலம் கழிப்பது இல்லாத நிலை எத்தனை விழுக்காடு, குடிசைப் பகுதிகளில் எத்தனை கழிப்பறைகள் அல்லது பொதுக் கழிப்பறைகள் உள்ளன, திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்ற புள்ளிவிவரங்களை மட்டுமே வைத்து தூய்மை நகரங்களை தரவரிசைப்படுத்தி இருக்கிறார்கள் என்று ஊகிக்க முடிகிறது. இது பிரதமரின் நோக்கத்தையே சிதைப்பதாகவும், தூய்மை என்பதன் பொருளைக் கேலிக்குரியதாக மாற்றுவதாகவும் உள்ளது.
 இந்தியாவில் நகர்ப்புற வளர்ச்சி, பல்வேறு திட்டங்களுக்காகப் பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்யும் உலக வங்கி, இத்தகைய நகர்ப்புற புள்ளி விவரங்களை அரசு அதிகாரிகளிடம் பெற்று இவ்வாறான தரவரிசைப் பட்டியலைத் தயாரிக்கும். அத்தகைய தரவரிசையில், திருச்சி சென்ற முறை 5-ஆவது இடத்தில் இருந்தது. அதற்காக திருச்சி தூய்மை நகரம் என்று திருச்சி மக்களே சொல்ல மாட்டார்கள்.
 தூய்மைக்கு முன்னுதாரணமான சிங்கப்பூர் தனது 50-ஆவது ஆண்டு விடுதலை விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்நாளில், நாம் கேட்க வேண்டிய கேள்வி தூய்மை நகரம் என்றால் என்ன?
 சாலைகளில் சிறு குப்பையும் காணப்படாத நிலை; அரை மணி நேரம் பலத்த மழைக்குப் பிறகு நகரில் மழை வெள்ளம் தேங்காமல் வடிந்திருக்கும் நிலைமை; சாலையில் நடந்து செல்வோருக்கு அகலமான, பயன்பாட்டில் உள்ள நடைபாதை; ஒழுங்குபடுத்தப்பட்ட, ஒரே அளவிலான, அரசு அனுமதிக்கும் இடங்களில் மட்டுமே உள்ள சாலையோர சிறு கடைகள்; ஆங்காங்கே சிறுநீர் கழிப்பதற்கான தூய்மையான கழிப்பறை வசதிகள்; காற்றுத் தூய்மையை மையப்படுத்திய போக்குவரத்து முறைகள்; நகரின் வசிப்பிடம், வணிக வளாகங்கள் வெளியேற்றும் சாக்கடை முழுவதையும் புதை சாக்கடைத் திட்டத்தின் மூலம் ஊருக்கு வெளியே எடுத்துச் சென்று அவற்றை சுத்திகரிப்பு செய்து, அவற்றைப் பயிர் வளர்ப்புக்குப் பயன்படுத்தவும், பயன்படுத்த முடியாத கழிவுகளை வெளியேற்றுவதுமான நடைமுறை; அந்த நகரில் ஆறு, ஏரிகள் இருப்பின் அவற்றில் சாக்கடை கலக்காமல் அதன் தூய்மையைக் காக்கும் நடைமுறைகள் - இவ்வளவும் சேர்ந்ததுதான் ஒரு நகரின் தூய்மையாக இருக்க முடியும்.
 ஆனால், மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், வெறும் புள்ளிவிவரங்களை எடுத்துக் கொண்டு நகரங்களைத் தரவரிசைப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நகரத்திலும் எத்தனை கழிப்பறைகள் உள்ளன? நடமாடும் மக்களுக்காக சாலையோரம் எத்தனை கழிப்பறைகள் உள்ளன? எத்தனை குடிசைப் பகுதிகளில் எத்தனை கழிப்பறைகள் உள்ளன? எடுப்புக் கழிப்பறைகள் உள்ளனவா என்பன போன்ற கேள்விகளுக்கு ஒவ்வொரு நகராட்சி அல்லது மாநகராட்சி அதிகாரிகள் தரும் புள்ளிவிவரங்களை அப்படியே கணினியில் பதிவேற்றினால், அது தரவரிசைப்படுத்திவிடுகிறது.
 ஆனால், இந்தப் புள்ளிவிவரங்கள் உண்மையா? புதை சாக்கடைத் திட்டம் எந்த அளவுக்கு ஒரு நகரில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது? திடக்கழிவு மேலாண்மை என்பது இவர்கள் சொல்லும் அளவுக்கு உண்மையிலேயே செயல்பட்டு வருகிறதா என்ற எந்தவிதமான இரண்டாவது, மூன்றாவது ஒப்பிடுதல் இல்லாமலேயே இத்தகைய முடிவு எட்டப்பட்டுள்ளது.
 முதலில் இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவியருக்கு கழிப்பறையை உறுதி செய்வதே இன்னும் சாத்தியமாகவில்லை. எந்த நகரிலும் உள்ள ரயில் நிலையங்கள் எதிலுமே ரயில் பாதைகளில் கழிவுகள் விழாத நிலையே இல்லை, இந்தியாவின் எல்லா நகரங்களிலும் சாக்கடைகள், தொழிற்சாலைக் கழிவுகள் ஆறுகளில் கலக்கப்படுகின்றன, சிறிய மழைக்குக்கூட தாக்குப் பிடிக்க முடியாத நகர்ப் பகுதிகளில் மழை வெள்ளத்தால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
 இவை யாவும் தொடரும் நாள் வரை எந்த நகரமும் தூய்மை நகரம் என்ற பாராட்டுக்குத் தகுதியற்றவை. மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு யாராவது இதை எடுத்துச் சொல்லுங்களேன்!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.