ஆகஸ்ட் 7-ஆம் தேதியை தேசிய கைத்தறி நாளாக மத்திய அரசு அறிவித்ததுடன், சென்னையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்குகொண்டு, சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு சந்த் கபீர் விருதுகளையும் வழங்கி கெüரவித்திருப்பது, கைத்தறி ஆடைகள் அணிவது குறித்த அவசியத்தை மக்களிடம் கொண்டு செல்ல உதவும் என்பது உறுதி.
விழாவில் பேசிய பிரதமர், இந்தியாவில் கைத்தறி விற்பனை 5 விழுக்காடு அதிகரித்தாலேகூட, அதன் மூலம் நெசவாளர்களுக்கு 33 விழுக்காடு வருவாய் அதிகரிக்கும் என்று மக்களுக்கு உணர்த்திய அதே வேளையில், கைத்தறித் துணிகளின் தரம், புதிய வடிவமைப்பு ஆகியவற்றின் மூலம் நுகர்வோரிடையே நம்பகத்தன்மையை உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். கைத்தறி ஆடைகளை இளைஞர்களும் விரும்பும் வகையில் திரைத் துறையினரும் இவற்றைப் பிரபலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில், அன்னியத் துணிகளை "பகிஷ்காரம்' செய்வதென தீர்மானிக்கப்பட்டு, இந்தியக் கதர் துணிகளை மட்டுமே அணிவது என்று 1905 ஆகஸ்ட் 7ஆம் தேதி கொல்கத்தாவில் அறிவிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், ஆகஸ்ட் 7-ஆம் தேதியை தேசிய கைத்தறி நாளாகக் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்தது.
ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வரும் முன்பாகவே, மிக அழகிய கைத்தறி ஆடைகளை நெய்யும் வல்லமை பெற்றவர்களாக இந்தியர்கள் இருந்தனர். ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு தொழில் புரட்சியின் விளைவான நூற்பாலை, நெசவாலைகள் தோன்றியபோது உள்ளூர் கைத்தறிப் பொருள்கள் விலைப் போட்டியில் பின்தங்கிப் போயின.
உள்ளூர் உற்பத்திக்கு மீண்டும் உத்வேகம் தரும் வகையில்தான் கொல்கத்தா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு, கதர் அணியும் காங்கிரஸ்காரர்கள் கூட்டம் மேலதிகமாக உயர்ந்தது. இருப்பினும், விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசும் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தந்து, புதிய நூற்பாலைகளை, நெசவாலைகளை இந்தியத் தொழிலதிபர்கள் தொடங்க ஊக்கப்படுத்தியபோது, கைத்தறி நெசவாளர்கள் உள்ளூர் தொழில் போட்டியால் மீண்டும் பின்தங்கும் நிலை உருவானது.
இன்றுவரையிலும் நெசவாளர் நலன் கருதி கைத்தறி ஆடைகளுக்கு மானியம், நெசவாளர்களுக்கு கடனுதவி, ஓய்வூதியம் போன்ற பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்தபோதிலும்கூட, 2013-14 நிதியாண்டில் மட்டும் ரூ.487 கோடி ஒதுக்கித் தந்தாலும்கூட, கைத்தறி நெசவு மேம்படவில்லை. நெசவாளர் வாழ்க்கையும் மேம்படவில்லை.
நெசவாளர் வாழ்க்கைதான் இப்படியாக இருக்கிறதே தவிர, கைத்தறித் துணிகள் ஏற்றுமதியில் உலகத்தில் முதலிடம் வகிப்பது இந்தியாதான். ஆண்டுதோறும் இந்தியா ஏற்றுமதி செய்யும் கைத்தறித் துணியின் மதிப்பு 37.2 கோடி அமெரிக்க டாலர்கள். அமெரிக்காவும், பிரிட்டனும் அதிக அளவில் நமது கைத்தறித் துணிகளை வாங்குகின்றன.
கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுமத்தின் உதவியுடன், பல்வேறு நாடுகளில் உள்ள வால்மார்ட் போன்ற சங்கிலித் தொடர் நிறுவனங்களில் இந்திய கைத்தறித் துணிகளை சந்தைப்படுத்தவும், இந்திய கைத்தறித் துணி விற்பனைக் கூடங்களை பல நாடுகளில் அமைக்கவும் செய்கிறார்கள். ஆனால், இதன் பலனை அனுபவிப்போர் ஏற்றுமதியாளர்களே தவிர, நெசவாளர்கள் அல்லர் என்பதுதான் சோகம்.
இந்த நிலைக்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட துணி ரகங்களை விசைத்தறியில் நெசவு செய்யக் கூடாது என்று சட்டம் இருந்தாலும், விசைத்தறிகளில் நெய்த ஆடைகளையே கைத்தறி ஆடைகள் என்று சந்தைப்படுத்தும் நிலைமை. கைத்தறி ஆடைகளுக்குத் தனிச் சான்று அல்லது முத்திரை அளிக்கும் நடைமுறை இல்லை. மக்களே தீர்மானிக்க விட்டுவிடுவதால் ஏற்படும் அறியாமை நெசவாளர்களுக்கு மிகவும் பாதகமாக அமைகிறது.
மேலும், நூற்பாலைகள் அனைத்தும் தங்கள் நூல் உற்பத்தியில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டை சிட்டா நூலாக கைத்தறிக்கு வழங்க வேண்டும் என்ற கடப்பாடு இருந்தும்கூட, இதில் பெரிய ஆலைகள் அக்கறை காட்டுவதில்லை. அவர்கள் தர வேண்டிய சிட்டா நூலை மூன்றாந்தர நூற்பாலைகளிடம் அயல்பணி ஒப்பந்தத்தில் வாங்கி, விற்றுவிடுகிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் சிட்டா நூல் தரமானதாகக் கிடைப்பதில்லை. அப்படியே தரமான நூல் விற்கப்பட்டாலும், கைத்தறி நெசவாளர் சங்கங்கள் மூலமாகவே சிட்டா நூல் வாங்கப்படுவதால், அவர்கள் இதில் ஊழலைப் புகுத்திவிடுகிறார்கள். இதனால், கதர், கைத்தறித் துணிகள் தரம் குறைந்தவையாக மாறியதன் காரணமாக மக்களால் புறக்கணிக்கப்பட்ட நிலை உருவாகியிருக்கிறது.
கைத்தறி நெசவு இப்போதும் நெசவாளர்களுக்கு வாழ்வளிக்கிறது என்றால் அது பட்டுச் சேலைகளால் மட்டுமே. பட்டுச் சேலைகளில் புதிய பூ வேலைப்பாடுகள், ஜரிகை கோத்து வாங்குதல் போன்றவை இன்னமும் கைத்தறியை உயிர்ப்புடன் வைத்துள்ளன. விசைத்தறியின் தாக்கத்துக்கு ஆளாகாமல் இருப்பவை பட்டுச் சேலை நெசவு மட்டுமே.
பருத்தித் துணி என்றாலும், அது கைத்தறித் துணியாக இருந்தால் மட்டுமே நெசவாளருக்கு அந்த நன்மை போய்ச் சேரும் என்ற தெளிவை, விழிப்புணர்வை உருவாக்க வேண்டியது முதல் கடமை. கைத்தறிக்கு ஆதரவளிக்கும் வகையில், காவல் துறை, பள்ளி மாணவர் சீருடைகள் அனைத்தும் கைத்தறி ஆடைகளாக இருக்க வேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்தினால் மிகப் பெரும் அளவு கைத்தறித் துணி விற்பனைக்கு வாய்ப்பு ஏற்படும். நெசவாளர்களின் வாழ்விலும், கிராமப்புறங்களிலும் புதுப் பொலிவு ஏற்படும்!