மருந்துகள் பற்றியும், தங்களுக்கு அளிக்கப்படும் மருத்துவச் சேவை பற்றியும், பொதுமக்கள் மத்தியில் பரவலான புரிதல் இல்லை. அதனால், மருத்துவர்கள் எழுதித் தரும் மருந்துப் பட்டியல் பற்றிக் கேள்வியோ, விளக்கமோ கேட்கத் தயங்குகிறார்கள். நுகர்வோர் சட்டங்களில் தொடங்கி, சமூக வலைதளத்தின் மூலம் பிரச்னைகளை வெளிப்படுத்துவது வரை பல வழிமுறைகள் இப்போது இருக்கின்றன. தவறான மருத்துவ முறைகளையும், மருத்துவர்களின் மனிதாபிமானமற்ற சிகிச்சை முறைகளையும் பொதுமக்கள் கேள்வி கேட்க முற்பட்டால் ஒழிய, இந்திய மருத்துவத் துறையில் ஊடுருவி இருக்கும் முறைகேடுகளையும், இளைய தலைமுறை மருத்துவர்கள் மத்தியில் காணப்படும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற பேராசை எண்ணத்தையும் வேரறுக்க முடியாது.