எந்தவொரு தேசமும், அந்த தேசத்தின் உருவாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் அடித்தளமிட்ட தலைவர்களை மறந்துவிட முடியாது. அதேபோல, எந்தவொரு தனிமனிதனை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஒரு தேசத்தின் வரலாறு எழுதப்படவும் முடியாது; கூடாது.
இந்தியாவைப் பொருத்தவரை, நவ இந்தியாவின் தோற்றமும் வளர்ச்சியும் இரண்டு பாகங்களாலானது. சுதந்திரப் போராட்டமும், அதற்கான தியாகமும் முதலாவது என்றால், நவ இந்தியாவின் நிர்மாணம் இரண்டாவது. இரண்டுக்குமே சம பங்கும், மரியாதையும் உண்டு.
ஆண்டுதோறும் ஒரு சில தேசத் தலைவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவது என்பது உலகெங்கிலும் வழக்கமாகப் பின்பற்றப்படுகிறது. "தேசப் பிதா' அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் நாள், குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பில் உள்ளவர்களும் அஞ்சலி செலுத்தும் தினமாகவும் தேசிய விடுமுறை தினமாகவும் இந்தியாவிலும் அனுசரிக்கப்படுகிறது.
அண்ணல் காந்தியடிகள் மட்டுமல்லாமல் இந்திய சுதந்திரத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட தலைவர்கள் ஏராளமானோர். அவர்களில் சிலருக்கு காந்தி மகானிடமும், காங்கிரஸ் கட்சியுடனும் கருத்து வேறுபாடும், கொள்கை வேறுபாடும் இருந்திருக்கலாம். அதற்காக, அவர்கள் ஆற்றிய தியாகங்கள் அங்கீகாரம் பெறாமல் போவது என்பது சரியல்ல.
குறிப்பாக, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், வீர சாவர்க்கர், "செக்கிழுத்த செம்மல்' வ.உ. சிதம்பரம் பிள்ளை, மாவீரன் பகத் சிங் போன்றவர்கள் காந்தியடிகளுடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களாக இருந்தனர் என்பது ஊரறிந்த ரகசியம். அதற்காக அவர்களது தேசப் பற்றையும், தியாகத்தையும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.
அதேபோல, சுதந்திர இந்தியாவின் நிர்மாணத்தில் பண்டித ஜவாஹர்லால் நேருவின் பங்கு அளவிட முடியாதது. தொடர்ந்து 17 ஆண்டுகள் ஒட்டுமொத்த இந்தியாவின் நன்மதிப்பையும், மக்களின் பேராதரவையும் பெற்று, பண்டித ஜவாஹர்லால் நேரு பிரதமராகத் தொடர்ந்ததால்தான், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் சுதந்திரம் பெற்ற 84 நாடுகளில் இந்தியா மட்டும் தடம் புரளாமல் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் உறுதியாகத் தொடர முடிகிறது.
மத்திய அரசு, குறிப்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்புதான் இத்தனையையும் பதிவு செய்வதற்குக் காரணம். அண்ணல் காந்தி, சர்தார் வல்லபபாய் படேல் ஆகிய இருவரின் ஜெயந்தி தினங்களை மட்டுமே இனி அரசு கொண்டாட இருப்பதாக எடுக்கப்பட்டிருக்கும் முடிவு அபத்தமானது; கண்டிக்கத்தக்கது.
நவ இந்திய நிர்மாணம் என்று எடுத்துக் கொண்டால், அதில் அரசியல் சாசன உருவாக்கத்திற்கு, மத்திய சட்ட அமைச்சர் என்கிற முறையில், மிகப் பெரிய பங்களிப்பு நல்கிய பாபா சாகேப் அம்பேத்கரை எப்படி மறந்துவிட முடியும்? சிறிது காலமே பதவியில் இருந்தாலும், இந்தியாவின் முதல் ராணுவ வெற்றிக்குக் காரணமான இரண்டாவது பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் பங்களிப்பை நாம் புறந்தள்ளிவிட முடியுமா? "அவசரநிலைச் சட்டம்' என்பது அவரது சரித்திரத்தின் இருண்ட பக்கமாக இருந்தாலும், நவ இந்திய நிர்மாணத்திலும், இந்தியாவை சர்வதேச அளவில் வல்லரசாகத் தூக்கி நிறுத்தியதிலும் இந்திரா காந்தியின் பங்களிப்பைப் போற்றாமல் போனால் அது எப்படி நியாயமாகும்? அவசரநிலைச் சட்டத்திற்கு எதிராகவும், ஜனநாயகம் தடம் புரண்டு விடாமல் பாதுகாக்கவும் இந்தியாவை ஒருங்கிணைந்த "லோக்நாயக்' ஜெயப்பிரகாஷ் நாராயணன் மறக்கப்படக் கூடியவரா?
பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள் பிறந்த தினங்களை தேசிய அஞ்சலி தினங்களாகக் கொண்டாடத் தொடங்கினால், விரைவிலேயே ஆண்டின் 365 தினங்களிலும் பிரதமர்களுக்கும், அமைச்சர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதே வேலையாகப் போய்விடும் என்பது உண்மை. ஆனால், இந்திய சுதந்திரத்திற்கும், நவ இந்திய நிர்மாணத்திற்கும் அடித்தளமிட்ட விரல்விட்டு எண்ணத்தக்க தலைவர்களின் பிறந்த தினங்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவது ஆட்சியில் இருப்பவர்களின் கடமை. அப்படி அஞ்சலி செலுத்தும்போதாவது, அந்தத் தலைவர்கள் அரும்பாடுபட்டுப் பெற்றுத் தந்த, உருவாக்கித் தந்த இந்த சுதந்திர நாட்டின் அருமையை ஆட்சியாளர்கள் உணர ஒரு வாய்ப்பு ஏற்படும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
தலைவர்கள் வாழ்ந்த இடங்களை நினைவில்லங்களாக மாற்றுவது குறைக்கப்பட வேண்டும். தேசிய நினைவஞ்சலிக்கான தகுதி பெறும் தலைவர்களின் பட்டியல் சுருக்கப்பட வேண்டும். இதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்காக, முக்கியமான தலைவர்கள் நினைவுகூரப்படுவது தவிர்க்கப்படக் கூடாது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இதுதான் புரமோஷனா? புலம்பும் தனுஷ் ரசிகர்கள்!
ஹூக்ளி நதியில் பிரதமர் மோடி படகுப் பயணம்

ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!

5 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 5 மரண தண்டனை, 4 ஆயுள் தண்டனை!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

