தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பெருமையும் சிறுமையும்!

இந்த ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்திக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த 17 வயதுப் பெண் மலாலா யூசஃப்சாய்க்குமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:00 am

ஆசிரியர்

இந்த ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்திக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த 17 வயதுப் பெண் மலாலா யூசஃப்சாய்க்குமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவும் வேளையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது தற்செயல் நிகழ்வா அல்லது திட்டமிட்ட செயலா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் இந்தியத் துணைக் கண்டத்தை ஒருங்கிணைத்திருக்கும் நோபல் தேர்வுக் குழுவுக்கு நன்றி!

"சமாதானம் என்பது தீவிரவாதத்திற்கும் யுத்தத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பது மட்டுமல்ல, சமுதாயத்தில் குழந்தைகள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள், அவர்களுக்கு மறுக்கப்படும் நியாயமான மனித உரிமைகள் போன்றவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைப்பது' என்கிற நோபல் தேர்வுக் குழுவினரின் புதிய சிந்தனை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

தீவிரவாதத்திற்கு எதிராகத் துணிந்து போராடி, தனது கல்வி கற்கும் உரிமையை நிலைநாட்ட தலிபானின் கொலைவெறித் தாக்குதலை எதிர்கொண்டு, மருத்துவ சிகிச்சைக்காகத் தனது தாய்நாடான பாகிஸ்தானிலிருந்து தப்பியோடிய மலாலா யூசஃப்சாய்க்கு, 17 வயதில் சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரிய செய்தி. இங்கிலாந்திலுள்ள பர்மிங்க்ஹாமில் தனது வகுப்பறையில் பாடம் படித்துக் கொண்டிருந்தபோது, மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட செய்தி தெரிவிக்கப்பட்டது என்பது நெகிழ்ச்சி ஏற்படுத்தும் நிகழ்வு.

கல்வி கற்க வேண்டிய பருவத்தில் சிறார்கள் வேலைக்கு அனுப்பப்படுவதற்கும், கொத்தடிமைகளாக நடத்தப்படுவதற்கும் எதிரான போராட்டம் கைலாஷ் சத்யார்த்தியினுடையது. உத்தரப் பிரதேசத்திலுள்ள நிலவிரிப்பு (கார்ப்பெட்) தயாரிப்பவர்கள் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராகத் தொடங்கிய அவரது போராட்டத்தால், பல சிறுவர் சிறுமியர் மீட்கப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் அவரது பங்கு கணிசமானது. அவரது "பச்பன் பச்சாவ்

ஆந்தோலன்' என்கிற குழந்தைகளை மீட்போம் இயக்கம் பற்றி இந்தியாவிலேயே கூடப் பரவலான புரிதல் இல்லாமல் இருக்கும் நிலையில், நார்வே, ஸ்வீடனில் இயங்கும் நோபல் தேர்வுக் குழுவினர் அதன் தொண்டை அங்கீகரிக்க முற்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

இந்தியர் ஒருவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு கிடைத்திருக்கிறது என்கிற மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும், இந்தியாவின் இழிநிலையை இந்த விருது உலகுக்கு வெளிச்சம் போடுகிறது

என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கடந்த 20 ஆண்டுகளில் சிறார் மரணங்களும், பெண் சிறார் கொலை நிகழ்வுகளும் கணிசமாகக் குறைந்திருக்கின்றன. சிறார்கள் பள்ளிக்குப் போவது அதிகரித்திருப்பதும், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதும் உண்மைதான். குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க தேசிய ஆணையம் அமைத்திருக்கிறோம் என்பதும், கல்வி கற்கும் உரிமையைச் சட்டமாக்கி இருக்கிறோம் என்பதும் நிஜம்தான்.

ஆனாலும்கூட, இதர துறைகளில் இந்தியா அடைந்திருக்கும் முன்னேற்றங்களுடன் ஒப்பிடும்போது, குழந்தைகள் பற்றிய நமது கவனம் மிகமிகக் குறைவே.

மத்திய, மாநில அரசுகளின் கல்விக்கான ஒதுக்கீடு இந்தியாவின் மொத்த உற்பத்தி விகிதத்தில் மூன்று விழுக்காடு மட்டுமே.

உலகிலேயே மிகக் குறைவு இந்தியாவில்தான். இந்தியாவிலுள்ள குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் ஊட்டச்சத்து குறைந்தவர்கள். உலகிலுள்ள ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளில் ஐந்தில் ஒரு குழந்தை இந்தியாவைச் சார்ந்ததாக இருக்கிறது.

கணக்கிலடங்காத குழந்தைகள் அம்மை, வயிற்றுப்போக்கு, விஷக்காய்ச்சல் போன்ற நோய்களால் இறந்து கொண்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கான குழந்தைகள் தெருவோரச் சிறார்களாக வாழ்கிறார்களே, அவர்களைப் பற்றி யாராவது கவலைப்படுகிறார்களா? அப்படி வளரும் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்களே, அதைத் தடுக்க நாம் முயற்சிகள்

மேற்கொள்கிறோமா? மலாலா யூசஃப்சாய்க்கும், கைலாஷ் சத்யார்த்திக்கும் வழங்கப்பட்டிருக்கும் சமாதானத்திற்கான நோபல் விருது நமது கண்களைத் திறக்க வேண்டும்.

நோபல் விருதுக்கான தேர்வுக் குழுவினரால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் கைலாஷ் சத்யார்த்திக்கு இந்திய அரசு குறைந்தபட்சம் பத்மஸ்ரீ விருதுகூட வழங்கி அவரது சேவையை அங்கீகரிக்காமல் இருந்திருப்பதிலிருந்தே குழந்தைகள் நலன் பற்றிய நமது அக்கறையைப் புரிந்துகொள்ள முடிகிறது.

விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.