ஆப்கன் சமரசம்
ஆப்கானிஸ்தானில் ஒரு வழியாக அரசியல் தீர்வு காணப்பட்டிருக்கிறது. கடந்த 2009-இல் நடந்த தேர்தலைப் போலவே இப்போது 2014-லிலும் வாக்குப் பெட்டிகளின் தீர்ப்பாக இல்லாமல், சமரசப் பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு எட்டப்பட்டிருக்கிறது.


ஆப்கானிஸ்தானில் ஒரு வழியாக அரசியல் தீர்வு காணப்பட்டிருக்கிறது. கடந்த 2009-இல் நடந்த தேர்தலைப் போலவே இப்போது 2014-லிலும் வாக்குப் பெட்டிகளின் தீர்ப்பாக இல்லாமல், சமரசப் பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு எட்டப்பட்டிருக்கிறது. ஜூன் மாதம் நடந்த தேர்தல் முடிவுகளின்படி வெற்றி பெற்ற அஷ்ரப் கனி அகமத்சாய் அதிபராகப் பொறுப்பேற்க இருக்கிறார் என்றாலும், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டிய அப்துல்லா அப்துல்லாவின் கரங்கள்தான் மேலும் பலமடைந்திருக்கின்றன.
கடந்த 2009 தேர்தலிலும் சரி, இப்போது 2014-லிலும் சரி அப்துல்லா அப்துல்லா தலைமைப் பொறுப்பை விட்டுக் கொடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைவதற்கு வழிகோலி இருக்கிறார் என்பதுவரை சரி. ஆனால், இதற்காக இந்த முறை அவர் கோரிப் பெற்றிருக்கும் சலுகைகள், எந்த அளவுக்கு ஆட்சி சுமுகமாக நடக்கும் என்கிற ஐயப்பாட்டை எழுப்புகிறது. முழுமையான தேர்தல்
முடிவுகள் அறிவிக்கப்படாமல், இரண்டு மாத இழுபறிக்குப் பிறகு, அதிபர் தேர்தலுக்கான போட்டியில் மோதிக்கொண்ட அஷ்ரப் கனியும், அப்துல்லா அப்துல்லாவும் சமரசத்தை எட்டியிருக்கிறார்கள் என்றால், அதற்கு உள்நாட்டு நிலவரமும், சர்வதேச நிர்பந்தங்களும்தான் காரணம்.
புதிய ஒப்பந்தத்தின்படி, அஷ்ரப் கனி தலைமையிலான அமைச்சரவையில், அப்துல்லா அப்துல்லாவின் பிரதிநிதி ஒருவர் பிரதமர் பதவிக்கு நிகரான தலைமை நிர்வாகியாக இருப்பார். அன்றாட அலுவல்களைத் தலைமை நிர்வாகியும் அமைச்சரவையும் கவனித்துக் கொள்ளும். முக்கியமான வெளிவிவகாரம், பாதுகாப்பு போன்ற பிரச்னைகளில் மட்டும் அதிபரின் முடிவே இறுதியானது. உயர் பதவிகளில் இரண்டு தரப்பினருக்கும் சமமான பிரதிநிதித்துவமும், ஏனைய பதவிகளை சரிசமமாகப் பகிர்ந்து கொள்வதும் இரு தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
காபூலில் இரண்டு வெவ்வேறு தற்கொலைத் தாக்குதல்களில் ஏழு பேர் உயிரிழந்தனர். பதவி ஏற்பு நாளன்று, காபூல் விமான நிலையத்தில் தற்கொலை வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. ஆங்காங்கே தலிபான்களின் தாக்குதல்கள் தொடர்கின்றன. முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் தொடங்கி வைத்த அமைதி முயற்சி தடைபட்டுக் கிடக்கிறது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானத்தைத் தங்களது ஆட்சியின் கீழ் கொண்டு வருவதில் முனைப்புக்காட்டி வருகிறார்கள். மேலைநாடுகளால் திணிக்கப்பட்ட அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, ஆட்சியில் பங்கு பெறவோ அவர்கள் தயாராக இல்லை.
ஆப்கன் பாதுகாப்புப் பணியில் இருக்கும் வீரர்கள் பெரும் திரளாகப் பதவி விலகி தலிபான்களின் ராணுவத்தில் இணைகிறார்கள். ஆப்கன் பொருளாதாரமோ அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது. தேர்தல் இழுபறி, நிலைமையை மேலும் மோசமாக்கி அன்னிய முதலீடுகளை விரட்டி அடித்து விட்டது. நாளுக்கு நாள் பெருகிவரும் வேலையின்மை, கணிசமாகக் குறைந்துவிட்ட வரி வசூல் போன்றவை பிரச்னையை மேலும் சிக்கலாக்கி இருக்கின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து உடனடியாக நிதியுதவி பெறாமல் போனால், அரசு ஊழியர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் சம்பளப் பட்டுவாடா கூட பிரச்னைதான்.
உலக வங்கியில் உயர் அதிகாரியாகவும், முந்தைய கர்சாய் அமைச்சரவையில் நிதியமைச்சராகவும் பணியாற்றிய அஷ்ரப் கனி எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஏராளம். தலிபான்களின் தீவிரவாதம்; சர்வதேச உதவியைச் சார்ந்து நிற்கும் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவது; இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷியா தொடங்கிச் சுற்றியுள்ள நாடுகளுடனான நெருக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம். இப்படி பல பிரச்னைகள்.
அதனால்தான் அஷ்ரப் கனியும், அப்துல்லா அப்துல்லாவும் சமரசத்துக்கு உடன்பட்டிருக்கிறார்கள். பதவி ஏற்றவுடன் முதல் வேலையாக அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார் அதிபர் அஷ்ரப் கனி. இதன் மூலம் 9,800 அமெரிக்க வீரர்கள் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து தங்கி இருப்பார்கள்.
பஷ்டூன் பிரிவைச் சேர்ந்த அஷ்ரப் கனியும், டாஜிக் பிரிவைச் சேர்ந்த அப்துல்லா அப்துல்லாவும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே, ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டும் முயற்சி வெற்றியடையும்.
புதுதில்லியைப் பொருத்தவரை, ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுவது என்பது மிகவும் முக்கியம். தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக தலிபான்கள் மாறியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுவது நம்மை விடப் பாகிஸ்தானுக்கு மிகவும் இன்றியமையாதது. ஆப்கானிஸ்தானில் நிலையற்ற தன்மை நிலவுவது யாருக்குமே நல்லதல்ல!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...