தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

தூய்மை இந்தியா!

"தூய்மை இந்தியா' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த பின்னர் இப்போது எல்லா இடங்களிலும்

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:57 am

ஆசிரியர்

"தூய்மை இந்தியா' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த பின்னர் இப்போது எல்லா இடங்களிலும் அமைச்சர்களும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பல நிலைகளில் பல இடங்களில் அதன் தொடர்ச்சியாகத் தூய்மைப் பணியில் ஈடுபடுகின்றனர். இவை வெறும் அடையாளம்தான். இதன் வெற்றி மக்களின் கையில்தான் இருக்கிறது.

வெளிநாடுகளில் சாலைகளும் அலுவலகங்களும் தூய்மையாக இருக்கின்றன. இந்தியா வரும் வெளிநாட்டவர் இங்கே காணும் இடங்கள்தோறும் குப்பைகள், புறநகர் ரயில்வே தண்டவாளங்களில் மலம்கழிக்கும் மக்கள், பேருந்து நிலையங்களிலும் அரசு அலுவலகங்களிலும் எங்கு பார்த்தாலும் எச்சில், வெற்றிலைத் துப்பல் போன்ற அசுத்தங்கள் இருப்பதைப் பார்த்து முகம் சுளிக்கிறார்கள். இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்பதுதான் "தூய்மை இந்தியா' திட்டத்தின் அடிப்படை. இது மிக நல்லதொரு திட்டம் என்பதும், இந்தியா போன்ற ஒரு நாட்டுக்கு இது அவசியம் என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், ஏன் இந்தியா தூய்மையாக இல்லை என்பதன் அடிப்படைக் காரணத்தைப் புரிந்து கொள்ளாமல், இந்தத் திட்டத்தை வெறும் விழாக்களாக நடத்தினால் முழுமை அடையாது.

தூய்மையாக இருக்கும் வெளிநாடுகளிலும்கூட குப்பை ஒரு பிரச்னையாக இருக்கிறது. தங்கள் ஊரை சுத்தமாக வைத்திருக்க அவர்களும் பெரும்பாடுபடுகிறார்கள். ஆனால், அவர்களது பிரச்னை, சேரும் குப்பைகள் மட்டுமே. மக்கள் அல்ல. அங்கு வசிப்போர் குப்பைகளை முறையாக சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்துவிடுகிறார்கள். இந்தியாவில் இந்த அணுகுமுறை இல்லை. வீடு, அலுவலகம், தெருக்களில் குப்பைகள் தானாக வந்து குவியவில்லை. அதற்கு மனிதர்கள்தான் காரணம்.

இதற்கு அடிப்படைக் காரணம் - இந்தியர்களின் வசிப்பிடமே- அதை வீடு என்று சொல்லிக்கொண்டாலும்கூட - குப்பையாக இருக்கிறது என்பதுதான். பல வீடுகளில், கழிப்பறையில் மலம் தள்ளப்படாமல் மிதந்து கொண்டிருக்கும். வீடு பெருக்கப்படாமல், தரை அழுக்காக இருக்கும். பிளாஸ்டிக் பொருள்கள், பயன்படுத்தாத அழுக்குத் துணிகள் சிதறிக்கிடக்கும்.

இதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம். சிறிய இடத்தில் அதிக குடும்ப அங்கத்தினர்கள் வசிக்கிறோம் எனலாம். நேரமில்லை என்றும் சொல்லலாம். ஆனால், வீட்டுக் குப்பைகளுடன் வாழ்ந்து பழகிய இந்தியனுக்கு புறச்சூழலில் உள்ள அழுக்கும் குப்பையும் ஒரு பொருட்டாக இல்லை. சுத்தமில்லாத வீட்டைப் பார்த்து முகம் சுளிக்கும் இந்தியன் மட்டுமே, புறச்சூழலின் அசுத்தம் கண்டு வருந்துகிறான்.

ஆகவே, தூய்மையைத் தெருவில் தொடங்க வேண்டும். வீட்டுக்குள் தொடங்க வேண்டும். சமையலறையில் தொடங்க வேண்டும். கழிப்பறையில் தொடங்க வேண்டும். சுத்தம் சோறு போடும் என்று தொடக்கக் கல்வியில் சொல்லிக் கொடுத்த காலம் மலையேறிவிட்டது.

தினமும் காலை மாலை வீட்டைப் பெருக்கி, கோலமிட்டு விளக்கேற்றிய பண்பாடு இன்றில்லை. வாரத்தில் இரண்டு முறையாகிலும் வீட்டைக் கழுவி, சுத்தப்படுத்தும் நடைமுறை இன்றில்லை. ஆண்டுதோறும் பொங்கலுக்கு சுண்ணாம்பு பூச்சுக்காக வீடு முழுவதையும் துடைத்த வழக்கம் இன்றைய நவீன கட்டுமானங்களால் மறக்கப்பட்டுவிட்டது. மளிகைப் பொருள், ஓட்டல் பார்சல், ஆயத்த ஆடைகள் போன்றவை வாங்கி வரப்பட்ட பிளாஸ்டிக் உறைகள், பார்த்து முடித்த திருட்டு டி.வி.டி.க்கள் என மறுபடியும் பயன்படுத்தப் போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிந்த குப்பைகள் ஒவ்வொரு வீட்டிலும் நிறைந்து கிடக்கின்றன.

தேசத் தந்தை மகாத்மா காந்தி தனது ஆசிரமத்தில் கழிப்பறைத் தூய்மையை இன்றியமையாத ஒன்றாகக் கருதினார். அவரே கழிப்பறைகளைச் சுத்தம் செய்தார். நோய் அங்கிருந்துதான் பரவுகிறது என்பதை அவர் உணர்ந்திருந்தார். அவரது காலத்தில் பிளாஸ்டிக் கழிவுகளின் தொல்லை இல்லை, கணினிகள் இல்லை, ஃபுளோரசன்ட் பல்புகள் கிடையாது, டி.வி.டி.க்கள் கிடையாது. இப்போது இவற்றால் தூய்மைப்படுத்துவது கடினமாகி விட்டிருக்கிறது.

"சொர்க்கம் என்பது நமக்கு, சுத்தமுள்ள வீடுதான்'. "தூய்மை இந்தியா' திட்டத்தை ஒவ்வொருவரும் வீட்டுக்குள் இருந்து தொடங்கி, தெருவுக்குக் கொண்டு வருவோம்.

மூன்று விதமான தூய்மைகளை தமிழ் முன்வைக்கிறது. உண்மை, மெய்மை, வாய்மை. இவை முறையே உள்ளம், உடற்செயல்பாடு, வாக்கு ஆகியவற்றின் தூய்மையைக் குறிப்பிடுகின்றன. புறந்தூய்மை நீரான் அமையும் என்கிறது வள்ளுவம்.

நீர் (அதாவது நீங்கள்) புறத்தூய்மைக்கு அடிப்படை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.