தகிடுதத்தம் தாக்குப் பிடிக்காது!
மகாராஷ்டிரத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற பாரதிய ஜனதா கட்சியின் கனவு நனவாகி இருக்கிறதே தவிர, நிலையான ஆட்சியை உறுதிப்படுத்துவது என்கிற நோக்கம் நிறைவேறி இருக்கிறதா என்பது சந்தேகமே.


மகாராஷ்டிரத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற பாரதிய ஜனதா கட்சியின் கனவு நனவாகி இருக்கிறதே தவிர, நிலையான ஆட்சியை உறுதிப்படுத்துவது என்கிற நோக்கம் நிறைவேறி இருக்கிறதா என்பது சந்தேகமே. 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில், 122 உறுப்பினர்களைக் கொண்ட பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெற இன்னும் 22 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
இந்தச் சூழலில், 63 உறுப்பினர்களைக் கொண்ட சிவசேனை, தேவேந்திர பட்னவீஸின் சிறுபான்மை அரசில் இடம்பெற்று மீண்டும் கூட்டணி உறுதிப்படுத்தப்படும் என்கிற எதிர்பார்ப்பு பொய்த்திருக்கிறது. பா.ஜ.க., சிவசேனை இரு தரப்பினருமே உறவைப் புதுப்பித்துக் கொள்ளத் தயாராக இருந்தும், சிவசேனையின் எதிர்பார்ப்பும், கோரிக்கைகளும் சமரசம் ஏற்பட வழிகோலுவதாக இல்லை. பா.ஜ.க.வும் சரி, தனது தேர்தல் வெற்றியைக் காரணம் காட்டி சிவசேனையை அளவுக்கதிகமாகவே மட்டம் தட்டுகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னால் சிவசேனையுடனான தனது உறவை பலப்படுத்திக் கொண்டிருந்தால், முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் பலமான முதல்வராகத் தனது ஆட்சியைத் தொடர்ந்திருக்க முடியும். அதை விட்டுவிட்டு, தேர்தலுக்கு முன்பும், தேர்தலின் போதும் மிகவும் கடுமையாக எதிர்த்த தேசியவாத காங்கிரஸ் கட்சியினருடன் ரகசிய ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு, நம்பிக்கை வாக்கெடுப்பை பா.ஜ.க. எதிர்கொண்ட விதம் பெருமை சேர்ப்பதாக இல்லை.
288 பேர் கொண்ட அவையில் தேசியவாத காங்கிரஸூக்கு உறுப்பினர்களும், காங்கிரஸூக்கு 42 உறுப்பினர்களும் இருக்கிறார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிப்பது என்று சிவசேனையும் (63) காங்கிரஸூம் (42) ஏற்கெனவே அறிவித்து விட்டிருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பது என்றும், அதன்மூலம் தேவேந்திர பட்னவீஸ் தலைமையிலான பா.ஜ.க. சிறுபான்மை அரசு நம்பிக்கைத் தீர்மானத்தில் வெற்றி பெற உதவுவது என்றும் தேசியவாத காங்கிரஸ் தெரிவித்திருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில், வாக்கெடுப்பில் கலந்துகொண்டு அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பது என்று அறிவித்துவிட்டது.
இப்படிப்பட்ட சூழலில், முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் அவையைத் துணிந்து எதிர்கொண்டு நம்பிக்கைத் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விட்டிருக்கலாம். அதற்குப் பதிலாக, குரல் வாக்கெடுப்பு மூலம் நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேறியதாக அவைத் தலைவர் ஹரிபாவ் பக்தே அறிவித்ததை சிவசேனையும், காங்கிரஸூம் ஏற்றுக்கொள்ளாததில் வியப்பொன்றும் இல்லை. சட்டப்படி குரல் வாக்கெடுப்பு என்பது, யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருப்பது வரைதான் ஏற்புடையது. எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ள மறுத்தால், முறையான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் சட்டப்பேரவை மரபு.
தேசியவாத காங்கிரஸ் ஆதரித்து வாக்களிக்கத் தீர்மானித்திருக்கும் நிலையில், 19 வாக்குகள் வித்தியாசத்தில் நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேறி இருக்கும். அதை பாஜக தவிர்த்ததன் மூலம், எடுத்த எடுப்பிலேயே கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொண்டு விட்டது பட்னவீஸின் சிறுபான்மை அரசு.
கடந்த ஆட்சியில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் துணை முதல்வராக இருந்த அஜித் பவார், அந்தக் கட்சி அமைச்சர்களாக இருந்த அனில் தட்கரே, சகன் புஜ்பல் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பாஜக, அந்தக் கட்சியின் ஆதரவை நேரிடையாகப் பெறுவதில் தயக்கம் காட்டுவதில் வியப்பில்லை. அப்படியென்றால், தனது நீண்ட நாள் கூட்டணியாக இருந்த சிவசேனையுடன் சமரசமாகப் போயிருக்க வேண்டுமே தவிர, குறுக்கு வழியிலும், ரகசிய ஒப்பந்தங்களின் மூலமும் பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக முயன்றிருக்கக் கூடாது.
நேர்மை, நாணயம், வெளிப்படைத் தன்மை, நிர்வாகத் திறமை ஆகியவற்றுடன் கூடிய ஆட்சியை எதிர்பார்த்துதான் மக்கள் பாஜகவிற்கு வாக்களித்தனர். தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், தகிடுதத்தங்கள் மூலம் முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க நினைத்தால், அந்த ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்புத்தான் ஏற்படுமே தவிர நம்பிக்கை ஏற்படாது. இப்படியே ஐந்தாண்டுகளை முதல்வர் பட்னவீஸ் ஓட்டிவிடவும் முடியாது. இந்த நிலைமை தொடர்ந்தால் மக்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ளவும் முடியாது.
சிவசேனையுடன் கைகோத்து முதல்வர் பட்னவீஸ் நிலையான ஆட்சியை அளிக்க முன்வருவதுதான் பாஜகவுக்கும் நல்லது;
மகாராஷ்டிரத்துக்கும் நல்லது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...