முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

சுதாரித்தாக வேண்டும்!

தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற விதத்தில் ராணுவத்துக்கான ஒதுக்கீடு அதிகரிக்கிறது என்று சீனா விளக்கமளித்தாலும், கடந்த மூன்று ஆண்டுகளாக

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:10 am

ஆசிரியர்

இந்தியாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, விரைவிலேயே சீனாவின் இன்னொரு நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைத் துறைமுகத்தில் நிறுத்தப்படப் போவதாகத் தெரிகிறது. ஏற்கெனவே அணு சக்தியில் இயங்கும் சீன நீர்மூழ்கிக் கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது. இப்போது, இரண்டாவது நீர்மூழ்கிக் கப்பலுக்கு இலங்கை அனுமதித்திருப்பது, இந்துமகா சமுத்திரத்தில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சிக்கு வலு சேர்க்கக்கூடும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பலொன்று இந்துமகா சமுத்திரத்தைக் கடந்து பாரசீக வளைகுடாவை நோக்கி நகர்ந்தது, சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. சீனாவின் ராணுவ பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய இந்தியாவின் அண்டை நாடுகளுடனான சீனாவின் நெருக்கம் அதிகரித்து வருவதும் நிச்சயமாக இந்தியாவை மட்டுமல்ல, ஆசிய நாடுகள் அனைத்தையுமே கவலைப்பட வைக்கும் அம்சங்கள்.

தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற விதத்தில் ராணுவத்துக்கான ஒதுக்கீடு அதிகரிக்கிறது என்று சீனா விளக்கமளித்தாலும், கடந்த மூன்று ஆண்டுகளாக அதன் ராணுவ ஒதுக்கீடு நம்மை வாயைப் பிளக்க வைக்கிறது. நடப்பாண்டில் சீனா, ராணுவத்திற்கு ஒதுக்கி இருக்கும் 13,000 கோடி டாலர் (130 பில்லியன் டாலர்) என்பது கடந்த ஆண்டு ஒதுக்கீட்டைவிட 12.2 சதவீதம் அதிகம் என்பது மட்டுமல்ல, உலகிலேயே அமெரிக்காவுக்கு (60,000 கோடி டாலர்) அடுத்தபடியாக ராணுவத்திற்குச் செலவழிக்கும் நாடாகவும் சீனாவை அடையாளம் காட்டுகிறது.

சீனாவுக்கு நேர் எதிர்மாறாக, இந்தியாவின் ராணுவ ஒதுக்கீடு கடந்த மன்மோகன் சிங் ஆட்சியில் கணிசமாகக் குறைக்கப்பட்டது. 3,750 கோடி டாலரிலிருந்து (37.5 பில்லியன் டாலர்), 3,620 கோடி டாலராகக் (36.2 பில்லியன் டாலர்) குறைத்தார்கள் என்பது மட்டுமல்லாமல், புதிய ராணுவத் தளவாடங்கள் வாங்குவதும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பொருளாதார மந்த நிலையைக் காரணம் காட்டி, முப்படைகளுக்குமான செலவில் ரூ.10,000 கோடி குறைத்ததுதான் முந்தைய ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணியின் சாதனை. நரேந்திர மோடி அரசு பதவி ஏற்ற பிறகு, ராணுவத் தளவாடங்கள் வாங்குவது துரித கதியில் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது என்றாலும், கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட தொய்வை உடனடியாகச் சரி செய்வது என்பது இயலாத விஷயம்.

இலங்கையைத் தனது வலையில் திட்டமிட்டு வீழ்த்தி இருக்கிறது சீனா. 2005-ஆம் ஆண்டு மகிந்த ராஜபட்ச இலங்கை அதிபராகப் பதவி ஏற்றதுமுதல், கட்டமைப்பு வளர்ச்சியிலும் சரி, முதலீடு எனும் வகையிலும் சரி, இலங்கைக்கான சீன உதவி பலமடங்கு அதிகரித்திருக்கிறது. தனது தாராள நிதி உதவியின் மூலம் இலங்கையின் முதன்மைப் புரவலராகவே சீனா மாறிவிட்டிருக்கிறது.

கடந்த 1971 முதல் 2012 வரையில், இலங்கைக்கான சீன உதவி 500 கோடி டாலர் (5 பில்லியன் டாலர்) என்றால், அதில் 94 சதவீதம், அதாவது 476 கோடி டாலர் (4.76 பில்லியன் டாலர்), கடந்த 2005-லிருந்து 2012 வரையில் தரப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டாண்டுகளில், சீனா இலங்கைக்கு 218 கோடி டாலர் (2.18 பில்லியன் டாலர்) உதவி தருவதாக ஏற்றுக் கொண்டிருக்கிறது. இலங்கை அரசும் சீனாவின் உதவிகளையும், ஆதரவையும் இருகரம் நீட்டி வரவேற்பதுடன், அதன் மூலம் இந்தியாவை அச்சுறுத்தலாம் என்றும் கருதுவதாகத் தெரிகிறது.

அதிபர் ராஜபட்சவின் சகோதரரான இலங்கை ராணுவ அமைச்சர் கோத்தபய ராஜபட்சவிடம், சீன நீர்மூழ்கிக் கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்படுவதற்கு இந்தியா கடுமையாக ஆட்சேபம் தெரிவித்திருந்தும் இலங்கை அதை சட்டை செய்யவில்லை என்பதிலிருந்து, நாம் எந்த அளவுக்கு ராஜபட்ச அரசால் மதிக்கப்படுகிறோம் என்று தெரிகிறது. வியத்நாம் பிரதமரின் இந்திய விஜயமும், தென் சீனக் கடலில் எண்ணெய் எடுப்பதில் நாம் செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தமும்தான், சீனாவை நம்மை பயமுறுத்தச் செய்திருக்கிறது என்பது நிஜமாக இருக்கலாம். அதற்காக?

இலங்கை உள்நாட்டுப் போரில் இந்தியா இலங்கை அரசுக்கு உறுதுணையாக நின்றதற்குப் பதிலாக, இந்தியாவில் இருப்பதுபோல, நாடாளுமன்ற ஜனநாயகம் இலங்கையில் நிறுவப்படுவதற்கும், வடகிழக்கு மாகாணத்திற்கு இந்திய மாநிலங்களைப்போல அதிகாரப் பகிர்வு வழங்கப்படுவதற்கும் வழிகோலியிருந்தால், நிச்சயமாக இலங்கையில் இந்த அளவுக்கு சீனாவின் ஆதிக்கம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

இலங்கையின் உள்நாட்டுப் போரில் அதிபர் ராஜபட்சவுக்கு உதவ முற்பட்டதற்கு, இந்தியாவிற்கு அவர் அளிக்கும் நன்றிக் கடன்தான், கொழும்பு துறைமுகத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள்.

அது போகட்டும், நாம் எதற்கும் தயாராக இருக்கிறோமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.