சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

இது ஒரு பாடம்!

நெய்வேலி நிலக்கரி சுரங்க வாயிலில் ஒரு ஒப்பந்தத் தொழிலாளி பாதுகாப்பு படை வீரர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வேதனைக்குரியது.

Updated On :20 மார்ச் 2014, 1:01 am

நெய்வேலி நிலக்கரி சுரங்க வாயிலில் ஒரு ஒப்பந்தத் தொழிலாளி பாதுகாப்பு படை வீரர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வேதனைக்குரியது. இந்த சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். சுரங்கத்தைக் காவல் புரியும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயலாற்றவில்லை என்பது வெளிப்படை.

பாதுகாப்பு படை வீரரின் செயல், அவருக்கு அளிக்கப்பட்ட உரிமையை மீறியது என்பதில் சந்தேகம் இல்லை. சம்பவம் நடந்த இடத்தில் துப்பாக்கியைப் பயன்படுத்திய முகமது நோமன் தவிர்த்து வேறு சில பாதுகாப்பு வீரர்களும் பணியில் இருந்துள்ளனர். ஒப்பந்தத் தொழிலாளியான ராஜ்குமார் தனிநபராக அத்துமீறி உள்ளே நுழைய முற்பட்டிருந்தால், பாதுகாப்பு படை வீரர்கள் அவரைப் பிடித்து கைது செய்திருக்கலாம். ஆயுதங்கள் ஏதுமில்லாத ராஜ்குமாரை சுடுவதற்கான தேவை ஏதும் இல்லை.

ஆனால், தொழிலாளி ராஜ்குமார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நெய்வேலியில் நடைபெற்ற கலவரமும், அதில் 20க்கும் மேற்பட்ட போலீசாரும் 40க்கும் மேற்பட்ட பொதுமக்களும் காயமடையும் அளவுக்கும் கல்வீச்சுகளும் அடித்து நொறுக்கும் சம்பவங்களும் நடைபெற்றிருப்பதை வெறும் உணர்ச்சி மேலீட்டால் மட்டுமே ஏற்பட்டதாகக் கருத முடியவில்லை.

ராஜ்குமார் அந்த சுரங்கத்தில் பணியாற்றும் தொழிலாளி அல்ல. நண்பரைப் பார்க்கவே அங்கே சென்றிருக்கிறார். அவரிடம் உரிய அடையாள அட்டை எதுவும் இல்லை என்பதால்தான் அவரை உள்ளே அனுமதிக்க மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மறுத்துள்ளனர். இந்த செய்கையில் எந்தவிதத் தவறும் இல்லை. அது பாதுகாக்கப்பட்ட பகுதி. ஆகவேதான் அங்கே காவலுக்கு துப்பாக்கியுடன் பாதுகாப்பு படை நிறுத்தப்படுகிறது. உரிய அடையாள அட்டை இல்லாமல் தகராறு செய்ததும், அவர்களை மீறி உள்ளே நுழைய முயல்வதும் தவறுதானே!

இருப்பினும், அனுமதி மறுக்கப்பட்டவர் ஆத்திரத்தில் பேசியதால் தானும் ஆத்திரமடைந்து சுட்டதாக படைவீரர் கூறுவதில் நியாயமே இல்லை. இருவருக்கும் இடையில் எத்தகைய உரையாடல் நடந்தது, எத்தகைய சொல்லடுக்குகள், எதிர்வாதங்கள் இத்தகைய துயரச் சூழலுக்கு காரணமாக அமைந்தன என்பது யாருக்கும் தெரியாது.

ஒருவேளை, சுரங்கம் 2இன் வாயிலில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தால் அவற்றில் இந்த வாக்குவாதமும், சுடப்பட்ட சம்பவமும் பதிவாகி இருக்கலாம்.

இந்நிலையில், இந்த நிகழ்வுகள் எதையுமே முழுமையாக அறியாமல் நடந்துள்ள கலவரம், ஒரு நகரின் மீதான அத்துமீறல். சுரங்க வாயிலில் ராஜ்குமார் செய்த அதே தவறை, ஒரு சிலர் நெய்வேலி நகரத்தின் மீது நிகழ்த்தியுள்ளனர்.

ஒரு கோவலன் கொலை செய்யப்பட்டதற்காக மதுரை எரிக்கப்பட்ட வரலாறு தமிழ்கூறு நல்லுலகு அறிந்த ஒன்று. ஆனால் அத்தகைய கலவரச் சூழல், கோவலன் குற்றமற்றவன் என்பதை பாண்டியன் அவையில் கண்ணகி நிரூபித்த பிறகுதான் ஏற்பட்டது. நெய்வேலியில் ஏற்பட்ட கலவரமும் பதற்றமும், தற்போது 30,000 ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்தமும் இவ்வளவு அவசரமாக நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டியவை அல்ல. முழுஉண்மைகளையும் அறிந்தபிறகு நடத்தப்பட்டிருக்க வேண்டும். இதன் அடிப்படை குறைபாடுகளை களையும் நடவடிக்கையாக அமைந்திருக்க வேண்டும்.

துப்பாக்கியைக் கொடுத்து பாதுகாப்பு பணியில் ஒருவர் அமர்த்தப்படும்போது அந்த வீரர் எத்தகைய பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதையும், அவர் தங்கள் கடமையைச் செய்வதாகக் கருதி துப்பாக்கியைப் பயன்படுத்தும் தருணங்களில், எதிரி எத்தகையவராக இருந்தால் மட்டுமே துப்பாக்கியை பயன்படுத்தலாம் என்பதையும் உணர்வூட்ட வேண்டிய தேவை இருக்கிறது.

மிகவும் சலிப்பான பணிச்சூழலில், மேலதிகாரிகளின் அராஜகம்; விடுப்பு மறுக்கப்படுதல்; மாற்றுஆள் இல்லாமல் ஒரே இடத்தில் தொடர்ந்து ஓய்வின்றிப் பணியாற்றுதல் போன்றவற்றால் இத்தகைய வீரர்களுக்கு ஏற்படும் உளவியல் அழுத்தம், இவர்களை எல்லை மீற வைக்கிறது. கடமையைத்தான் செய்கிறார்கள் என்றாலும்கூட அதை வேண்டா வெறுப்புடனும், மன அழுத்தத்துடனும் செய்கிறார்கள். அதன் விளைவுகள் இத்தகைய மரணங்களாக மாறுகின்றன.காவல்துறையின் லாக்அப் மரணங்களில் பெரும்பாலானவை பணிச்சூழலின் மனஅழுத்தத்தால் ஏற்படும் அத்துமீறல்கள்தான். அரசு ஊழியர்கள் பொதுமக்களிடம் மரியாதை இல்லாமலும், தரக்குறைவாகவும் நடந்து

கொள்வதும்கூட, இதுபோன்ற மன அழுத்தத்தாலும், முறையான வழிகாட்டுதல் இல்லாததாலும் ஏற்படுபவைதான். இந்தச் சூழலை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

2ஆம் சுரங்க வாயிலில் நடந்தது என்ன? ராஜ்குமாருக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? எத்தகைய சூழல் அல்லது தடித்த பேச்சு இத்தகைய மரணத்துக்கு காரணமானது என்பதை நெய்வேலி நிர்வாகம் வெளிப்படையாக பொதுமக்களிடம் முன்வைக்க வேண்டும். இது ஒரு பாடம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.