டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அமைச்சர்தான் பொறுப்பு!

கடந்த சனிக்கிழமை விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் நடந்த விபத்தில், இந்தியா தயாரிக்கும் முதலாவது அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ஒரு தொழிலாளி உயிரிழந்திருக்கிறார், இருவர் காயமடைந்திருக்கிறார்கள்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:37 am

ஆசிரியர்

கடந்த சனிக்கிழமை விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் நடந்த விபத்தில், இந்தியா தயாரிக்கும் முதலாவது அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ஒரு தொழிலாளி உயிரிழந்திருக்கிறார், இருவர் காயமடைந்திருக்கிறார்கள். அதற்கு முந்தைய நாள்தான், மும்பை மஸாகாவ்ன் கப்பல் கட்டும் தளத்தில் ஒரு கடற்படை அதிகாரி கரியமில வாயுக் கசிவால் மரணமடைந்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஐ.என்.எஸ். சிந்துரத்னா என்கிற நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு அதிகாரிகள் பலியானார்கள். கடந்த வருடம், ஐ.என்.எஸ். சிந்துரக்ஷக் என்கிற நீர்மூழ்கிக் கப்பல் விபத்தில் சிக்கியபோது 18 பேர் குழுவினரான கடற்படை வீரர்கள் மரணமடைந்தனர்.

விண்வெளிக் கலத்திலிருந்து சாதாரண ஆணி வரை, எந்தவொரு தயாரிப்பாக இருந்தாலும் அதில் விபத்து நேர்வது என்பது தவிர்க்க முடியாததுதான். ஆனால், இந்தியக் கடற்படையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதற்கும், ஒரு முறை நேர்ந்த அதே தவறு மீண்டும் மீண்டும் தொடர்வதற்கும் காரணம் பொறுப்பின்மையும், அலட்சியமும்தானே தவிர, தற்செயலாக நடந்த விபத்து என்று ஒதுக்க முடியாது.

கடந்த 2010 பிப்ரவரி 26ஆம் நாள் ஐ.என்.எஸ். சிந்துரக்ஷக் நீர்மூழ்கிக் கப்பலின் பேட்டரி தளத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒரு கடற்படை அதிகாரி உயிரிழந்தபோது, விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதேபோல, கடந்த ஆகஸ்ட் 2013இல் ஐ.என்.எஸ். சிந்துரக்ஷக் மூழ்கியபோதும், ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்

பட்டது. இப்போது, 2014 பிப்ரவரி 25ஆம் தேதி, ஐ.என்.எஸ். சிந்துரத்னாவில், அதேபோல பேட்டரி தளத்தில் விபத்து நேர்ந்து இரண்டு கடற்படை அதிகாரிகள் பலியாகி இருக்கும் நேரத்தில், முதலில் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன்களின் முடிவுகள் என்ன? அவை முன்வைத்த பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டனவா? ஒரே மாதிரியான தவறு மீண்டும் மீண்டும் நடைபெறுகிறதே அது ஏன் என்பன போன்ற கேள்விகளை எழுப்பத் தோன்றுகிறது.

போரில் வீரர்கள் இறந்தால் அது வீர மரணம். ஆனால், தரமில்லாத பழுதுபட்ட ஆயுதங்களாலோ, முறையாகப் பராமரிக்கப்படாத இயந்திரங்களாலோ வீரர்கள் இறந்தால், அது அரசே ராணுவ வீரர்

களுக்குச் செய்யும் துரோகம். முப்பது ஆண்டுகளான பழைய தொட்டிகள் நீர்மூழ்கிக் கப்பல்களாகவும், அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டிய போர் விமானங்கள் பயிற்சி விமானங்களாகவும் இருந்தால், விபத்துகள் ஏற்படத்தான் செய்யும். இதன் பின்னணியில் இருப்பது கவனக்குறைவு மட்டுமல்ல, ஆட்சியாளர்களின் பொறுப்பற்றத்

தனமும், ராணுவத்தை நவீனப்படுத்துவதில் அவர்கள் காட்டும் மெத்தனமும்தான்.

2004-05இல் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பு வரை, 15.24% ஆக இருந்த மத்திய அரசின் ராணுவ ஒதுக்கீடு, 2013-14இல் 12.23% ஆக குறைந்திருக்கிறது. 2012-13இல் இந்தியக் கடற்படைக்கு ஒதுக்கப்படுவதாக இருந்த நிதி ஒதுக்கீடு ரூ.36,950 கோடி. ஒதுக்கப்பட்டதோ ரூ.18,266 கோடி. செலவழிக்கப்பட்டதோ வெறும் ரூ.15,599 கோடிதான்.

ஒதுக்கப்படும் நிதியைக்கூட கடற்படை பயன்படுத்தாமல் இருப்பதற்கும், புதிய தளவாடங்களையும் ஆயுதங்களையும் வாங்காமல் இருப்பதற்கும் நிர்வாக மெத்தனம் மட்டுமே காரணமல்ல. தன்மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டோ, பழியோ விழுந்து விடலாகாது என்

பதற்காக, கடற்படைக்கு மட்டுமல்ல, முப்படைகளுக்குமே அத்தியாவசிய தளவாடங்கள் வாங்குவதற்குக்கூட மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணி தலைமையிலான ராணுவ அமைச்சகம் அனுமதிக்காததுதான் மிக முக்கியமான காரணம்.

1999இல், அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 25 அதி நவீன நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கியாக வேண்டும் என்று திட்டமிட்டபடி 2012இல் முதலாவது நீர்மூழ்கிக் கப்பல் வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் வந்தபாடில்லை. காலதாமதத்தால், பல நவீனமயமாக்கப்படும் திட்டங்கள் 200%, 300% அதிகரித்த செலவை இழுத்து விட்டிருக்கின்றன. விளைவு? தேசத்திற்காக தங்கள் உயிரைக் கொடுக்க முன்வரும் வீரர்கள், விபத்தில் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.

நல்ல நிர்வாகம் என்பது செயல்படாமல் இருப்பதல்ல. தவறுகள் நேராமல், ஊழல் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக எதையுமே செய்யாமல் இருப்பதற்கு ஓர் அமைச்சர் எதற்கு? தளவாடங்களை வாங்கவும் வேண்டும்; அதன் தரத்தில் எந்தவித சமரசமும் செய்யவும் கூடாது; ஊழலும் முறைகேடும் இல்லாமலும் பார்த்துக் கொள்ளவும் வேண்டும் என்பதற்குப் பெயர்தானே நிர்வாகம்!

இனி அமையப் போகும் அரசாவது அமைச்சர் ஏ.கே. அந்தோணி செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்குமாகுக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.