டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இழுத்தடிப்பு தேர்தல்!

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதால் தேர்தல் பணி மிகவும் கடினமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஒரு நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி முடிக்க 35 நாள்கள் அவகாசம் தேவையா? என்பதுதான் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் எழுகின்ற கேள்வி.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:34 am

ஆசிரியர்

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதால் தேர்தல் பணி மிகவும் கடினமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஒரு நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி முடிக்க 35 நாள்கள் அவகாசம் தேவையா? என்பதுதான் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் எழுகின்ற கேள்வி.

ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கி மே 12ஆம் தேதி வரை 9 கட்டங்களாக, 35 நாள்களுக்கு நடத்தப்படும் தேர்தல் இந்தியா முழுவதிலும் ஒருவிதமான, தேவையில்லாத இறுக்கத்தை ஏற்படுத்தும். இந்த இறுக்கம் வெறும் அரசியல் சார்ந்தது மட்டுமல்ல. தொழிற்துறையிலும், அரசுப் பணியிலும், மக்கள் மனதிலும் இறுக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

2009இல் 15ஆவது மக்களவைக்கு நடந்த பொதுத் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை 71.4 கோடி. 2014இல் நடைபெற இருக்கும் 16ஆவது மக்களவைக்கான தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை 81.45 கோடியாக அதிகரித்திருக்கிறது. இது ஐரோப்பிய யூனியனும், அமெரிக்காவும் இணைந்தால் உள்ள மக்கள்தொகையை விடவும் அதிகம். நான்கு கட்டமாக 2004லும், 5 கட்டமாக 2009லும் நடத்தப்பட்ட பொதுத் தேர்தல் 2014இல், தொழில்நுட்பமும், தகவல் தொலைத் தொடர்பு வசதிகளும் அதிகரித்திருக்கும் நிலையில் 2014இல் ஒன்பது கட்டமாக நடத்தப்படுவது ஏன் என்றுதான் புரியவில்லை.

தேர்தல் இயந்திரங்கள் பற்றாக்குறையைக் காரணமாகச் சொல்ல முடியாது. எல்லா மாநிலங்களின் தேர்தல் எண்ணிக்கையும் மே 16ஆம் தேதி ஒரே நாளில்தான் நடத்தப்படவுள்ளன. ஆக,அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் தயார் நிலையில் இருக்கின்றன. கணினி முறையிலான வாக்குப் பதிவுக்கு கூடுதலாகத் தேவைப்படும் 2,51,650 கன்ட்ரோல் யுனிட், 3,82,870 பாலட் யூனிட்டுகள் இந்த மாதம் 31ஆம் தேதிக்குள் தயாரிக்கப்பட்டு, ஒப்படைக்கப்பட்டுவிடும் என்கின்றது தேர்தல் ஆணையம். ஆதலால் இயந்திரப் பற்றாக்குறை ஒரு பிரச்னை அல்ல.

பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடியாது என்பது மட்டுமே தேர்தல் ஆணையம் மற்றும் அரசும் சொல்லக்கூடிய வாதங்களில் ஏற்புடையவை. துணை ராணுவத்தினரையும் மத்திய பாதுகாப்பு படையையும் எல்லா மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடியாது என்பது உண்மைதான். ஆனால் இத்தகைய பலத்த பாதுகாப்பு தேவைப்படுகின்ற, வன்முறை நடக்கக்கூடியவை என்று கருத்தப்படுகின்ற வாக்குச்சாவடிகள் மொத்தமுள்ள 543 தொகுதியில் அதிகபட்சமாக 100 தொகுதிகள் இருக்கலாம். இவற்றுக்கு மட்டும்தானே கூடுதல் பாதுகாப்பு தேவை. ஆகவே இவற்றுக்கு மட்டும் தனியாக ஒரு நாளில் தேர்தல் நடத்தவும், பாதுகாப்பு படைகளை அங்கே குவிக்கவும் முடியும். மற்ற தொகுதிகளில் மாநில போலீசும் ஒரளவு துணை ராணுவமும் இருந்தாலே போதுமானதே?

அனைத்து மாநிலங்களிலும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பிப்ரவரி 10ஆம் தேதி பேசியதன் வாயிலாகவும், தேசம் முழுவதும் மாணவர்களுக்கு நடைபெறும் தேர்வுகள், சில மாநிலங்

களில் தொடங்கப்படும் விவசாயப் பணிகள், அறுவடை, சில மாநிலங்களில் மழைபெய்யும் வாய்ப்புகள் குறித்து இந்திய வானியல் நிறுவனம் அளித்த தகவல்கள் ஆகிய அனைத்தின் அடிப்படையிலும் இவ்வாறு 9 கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறுகின்றது. ஆனால், இப்படி 35 நாள்களுக்கு நடத்தப்படும் தேர்தலால்தான் மேற்கண்ட அனைத்து பணிகளும் மேலதிகமாக பாதிக்கப்படும்.

இப்போதே தேர்தல் பிரசாரம் முழு வேகத்தில் தொடங்கிவிடும் என்பதால், விவசாயப் பணியாளர்கள் பலரும் அரசியல்வாதிகள் தரும் பணம், மது, பிரியாணிக்காக அவர்கள் பின்னால் ஒடிக்கொண்டிருப்பார்களே தவிர, விவசாய நிலத்துக்கு சென்று வேலை பார்க்கமாட்டார்கள். அரசு அலுவலர்கள் தேர்தல் வேலை என்று சொல்லி இன்னும் இரண்டு மாதங்களுக்கு சுற்றிக்கொண்டே இருப்பார்கள். இதனால் அரசுப் பணிகள் முழுமையாக பாதிக்கப்படும். இந்த இரண்டு மாதத் தேர்தல் விழா அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்குமே தவிர, நாடு தழுவிய அளவில் இயல்பு வாழ்க்கை நிச்சயம் பாதிக்கப்படும்.

ஏப்ரல் 10ஆம் தேதி 92 தொகுதிகள், ஏப்ரல் 17ஆம் தேதி 122 தொகுதிகள், ஏப்ரல் 24ஆம் தேதி 117 தொகுதிகள் ஏப்ரல் 30ஆம் தேதி 89தொகுதிகள், மே 7ஆம் தேதி 69 தொகுதிகள் என பிரித்து தேர்தல் நடத்தும்போது, முக்கிய அரசியல் நிகழ்வுகள், எதிர்பாரா கலவரங்கள் போன்றவை நடக்கவும், அதனால் மக்கள் மனம் மாறி வாக்களிக்கவும்கூட அது வழிவகுக்கும்.

தேர்தல் ஆணையம் தேதிகளை அறிவித்தாகி விட்டது. இனி அபிப்பிராயம் சொல்வதால் என்ன ஆகிவிடப் போகிறது? அடுத்த முறையாவது தேர்தலை நீட்டி இழுத்தடிக்காமல் மூன்று நான்கு கட்டங்களில் முடித்தால் நன்றாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.