டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மறுபரிசீலனை செய்யுங்களேன்!

தாழ்த்தப்பட்ட மாணவர்கள் உயர்கல்வி பெற வேண்டும் என் பதற்காக மத்திய, மாநில அரசுகள் கல்வி உதவித் தொகையை காலத்துக்கேற்ப அதிகரித்து வழங்கி வருவதும் இதற்கான நிதி ஒதுக்கீடுகளை உயர்த்தி வருவதும் பாராட்டுக்குரியது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:34 am

ஆசிரியர்

தாழ்த்தப்பட்ட மாணவர்கள் உயர்கல்வி பெற வேண்டும் என் பதற்காக மத்திய, மாநில அரசுகள் கல்வி உதவித் தொகையை காலத்துக்கேற்ப அதிகரித்து வழங்கி வருவதும் இதற்கான நிதி ஒதுக்கீடுகளை உயர்த்தி வருவதும் பாராட்டுக்குரியது.

இந்நிலையில், நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கும்கூட, அக்கல்லூரிகள் வசூலிக்கும் முழு கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என்ற அரசாணை அண்மையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை 2013-14ஆம் கல்வியாண்டு முதலே நடைமுறைப்படுத்தப்படும்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியினப் பிரிவில் அனைத்து ஒதுக்கீடும் நிரம்பி, வேறு வழியின்றி நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் நிலைமை ஏற்பட்டிருந்தால், அத்தகைய நேர்வுகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களின் கல்விக் கட்டணத்தை முழுமையாக ஏற்பதில் தவறில்லை. ஆனால் நிலைமை அதுவாக இல்லை என்பதே உண்மை.

தமிழகத்தில் கல்வியியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்குத்தான் அதிக போட்டி நிலவுகிறது. இருப்பினும் காளான்கள் போல உருவாகி இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளின் அபரிமிதமான எண்ணிக்கை காரணமாக அத்

துறையில் மாணவர் சேர்க்கை குறைவாகவே இருக்கிறது.

தமிழ்நாட்டில் 35 அரசு பொறியியல் கல்லூரிகள், 505 தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 2 லட்சம் இடங்கள் உள்ளன. இதில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கான இடங்கள் 39,000. அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஒற்றைச்சாளர கலந்தாய்வு 2013இல் அரசுக் கல்லூரிகளில் உள்ள பொதுப்பிரிவு, இடஒதுக்கீட்டு பிரிவு அனைத்திலும் மாணவர்கள் சேர்ந்து விட்டனர்.

ஆனால் கட்டமைப்பு வசதிகள் இல்லாத தனியார் கல்லூரிகளில் சுமார் 70,000 இடங்கள் காலியாகவே உள்ளன. இதில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டில் 19,000 இடங்கள் நிரம்பவே இல்லை. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் இத்தனை காலியிடங்கள் இருக்கக் காரணம், மாணவர்கள் கலந்தாய்வில் பங்குகொள்ளவே வரவில்லை என்பதுதான்.

இவர்கள் அதிக கட்ஆஃப் மதிப்பெண் பெற்றிருந்தும் கலந்தாய்வில் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவு அல்லது விரும்பிய கல்லூரி கிடைக்காத போது, தனியார் பொறியியல் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்து கொள்கிறார்கள். இத்தகைய பிரபலமான கல்லூரிகள் நன்கொடை வாங்காமல் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ப்பதில்லை என்பது ஊர் அறிந்த ரகசியம். அப்படி இருந்தும் அதில் சேருகிறார்கள் என்றால், இந்தச் செலவை ஏற்கும் அளவுக்கு வசதியானவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் பொருள்.

மாணவர்கள் சேராத காரணத்தால், நிர்வாகச் செலவை ஈடுகட்ட திண்டாடும் தனியார் கல்லூரிகள், அரசு கல்விக் கட்டணத்தை வழங்கும் என்றால், வசதி குறைந்த, தாழ்த்தப்பட்ட மாணவர்களை ஆசை வார்த்தை கூறி, தங்கள் கல்லூரியில் சேர்த்துக்கொண்டு, அவர்களது கல்விக் கட்டணத்தை முழுமையாக பெறுவதில் மட்டுமே ஆர்வம் காட்டும். அந்த மாணவர்கள் பொறியியல் படிப்பில் ஆர்வம் உள்ளவர்களா, இந்த படிப்பை முடிப்பார்களா என்ற எந்த அக்கறையும் இந்த கல்லூரிகளுக்கு இருக்கப் போவதில்லை. இதற்காக மக்களின் வரிப்பணம் ஏன் வீணாக்கப்பட வேண்டும்?

சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் கல்விக்கட்டணம் ஆண்டுக்கு ரூ.70,000. மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் கல்விக்கட்டணம் ஆண்டுக்கு ரூ.2.8 லட்சம். இதை அரசு செலுத்துவது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். இதேபோன்று, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோரும் கோரிக்கை வைத்தால் என்ன ஆகும்?

அரசு நடத்தும் கலந்தாய்வு மூலமாக இடம் கிடைக்கப்பெற்ற மாணவர்களுக்கு அரசு முழு கல்விக் கட்டணத்தையும் ஏற்க முன் வருகிறது என்றால், அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் பெறும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு ஏற்க வேண்டிய அவசியம்தான் என்ன?

கட்ஆஃப் மதிப்பெண் அதிகமாக இருந்தும் தாங்கள் விரும்பும் கல்லூரியில் சேர்வதற்காக நிர்வாக ஒதுக்கீட்டை தேர்வு செய்யும் மாணவர்களுக்கும், சுயநிதி கல்லூரிகளின் பேராசையை பூர்த்தி செய்வதற்காக நிர்வாக ஒதுக்கீட்டில் வலிந்து சேர்க்கப்படும் மாணவர்களுக்கும் முழு கல்விக் கட்டணத்தை அரசே வழங்கினால், அதனால் பயன் அடையப்போவது ஏற்கெனவே வசதியுள்ள பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவர்களும், யாரும் சேர விரும்பாத, கட்டமைப்பு வசதிகளில்லாத சுயநிதி கல்லூரிகளும் மட்டுமே!

தமிழக முதல்வரிடம் இந்த விவரங்கள் சரியாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறதா என்பது சந்தேகமாக இருக்கிறது. முதல்வர் இந்த அரசாணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.