/

மறுபக்கம்..

சமீபத்தில் வெளியாகி இருக்கும் சில புள்ளிவிவரங்கள், சர்வதேச அளவில் இந்தியா சில அடிப்படைப் பிரச்னைகளில் எந்த அளவுக்குப் பின்தங்கி இருக்கிறது என்பதை வெளிச்சம் போடுகின்றன.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:44 am

ஆசிரியர்

சமீபத்தில் வெளியாகி இருக்கும் சில புள்ளிவிவரங்கள், சர்வதேச அளவில் இந்தியா சில அடிப்படைப் பிரச்னைகளில் எந்த அளவுக்குப் பின்தங்கி இருக்கிறது என்பதை வெளிச்சம் போடுகின்றன. கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடந்த பத்தாண்டுகளாக நிதி ஒதுக்கப்பட்டும்கூட இந்த நிலைமை என்பதுதான் வருத்தம் மேலோங்கச் செய்கிறது.

2004-05 நிதியாண்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் மனிதவள மேம்பாட்டுக்காக மத்திய மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு வெறும் ரூ.1.75 லட்சம் கோடி என்றால், கடந்த 2012-13 நிதிநிலை அறிக்கையின்படி ஒதுக்கீடு ரூ.7.10 லட்சம் கோடி. அப்படி இருந்தும் ஐ.நா. சபையின் மனித நல வளர்ச்சித் தரவரிசைப் பட்டியலில் 2004-இல் 177 நாடுகளில் 127-ஆவது நாடாக இருந்த இந்தியா, 2012 தரவரிசைப்படி 186 நாடுகளின் பட்டியலில் 136-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

தடுக்கி விழுந்தால் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி, தெருவுக்குத் தெரு தனியார் பொறியியல் கல்லூரி என்று கல்விச் சாலைகள் அதிகரித்து விட்டிருப்பதாக ஒருபுறம் நாம் பெருமை தட்டிக் கொண்டாலும், அடிப்படைக் கல்வியிலும், கல்வியின் தரத்திலும் தஜகிஸ்தான், கானா, கிர்கிஸ்தான் போன்ற நாடுகளைவிடப் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறோம் என்பதைப் பற்றிக் கவலைப்படுவார் யாருமில்லை.

கல்விதான் அப்படியென்றால் மருத்துவ வசதியிலும் சுகாதாரத்திலும்கூட நாம் சர்வதேச அளவில் மிகவும் கேவலமான நிலையில் தொடர்கிறோம் என்பது வேதனையிலும் வேதனை. 1990-இல் லட்சம் பிரசவத்திற்கு 569 மரணமாக இருந்ததுபோய், 2013-இல் 190 ஆக, 65% பேறுகால மரணம் குறைந்திருக்கிறது என்று பெருமைப்பட்டுக் கொள்வது நம்மை நாமே புள்ளிவிவரக் கணக்கைக் காட்டி ஏமாற்றிக் கொள்வதாகத்தான் இருக்கும்.

2013-இல் உலக அளவிலான பேறுகால மரணத்தில் 17% இந்தியாவின் பங்காக இருந்திருக்கிறது. 2012-இல் நாம் நிர்ணயித்த இலக்கு, பேறுகால மரணம் லட்சத்திற்கு நூறுக்கும் கீழாகக் குறைக்கப்பட வேண்டும் என்பது. ஆனால் கடந்த ஆண்டு நிலைமை 190. ஆண்டொன்றுக்கு 2.6 கோடிப் பிரசவங்கள் நடைபெறும் நாட்டில் பேறுகால மரண எண்ணிக்கை மிக மிக அதிகமாகவே காணப்படுகிறது.

பேறுகால மரணம் என்பது கர்ப்பகாலத்தின்போது அல்லது குழந்தை பிறந்த 42 நாள்களில் ஏற்படும் அசம்பாவிதத்தை வைத்துக் கணக்கிடப்படுகிறது. பேறுகால மரணத்தைக் கணிசமாகக் குறைப்பதற்கு, பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுவதை உறுதிப்படுத்துவது ஒரு வழி. ஆனால், இன்னும்கூட கிராமப்புற இந்தியாவில் பிரசவங்கள் வீட்டில்தான் நடைபெறுகின்றன. மருத்துவமனைச் செலவுகள், மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சை செய்து விடுவார்கள் என்கிற அச்சம் போன்றவை இதற்குக் காரணம். மருத்துவமனைப் பிரசவங்களை ஊக்குவிக்கும் வேளையில், முறையாகப் பயிற்சி அளிக்கப்பட்ட பிரசவகால செவிலியர்களின் எண்ணிக்கையையும் அதிகரிப்பதுதான் இதற்குத் தீர்வாக இருக்கும்.

பேறுகால மரணங்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாமல், சிசு மரணத்திலும் இந்தியாவின் நிலைமை பெருமைப்பட்டுக் கொள்ளும்படியாக இல்லை. சிசு மரணம் என்பது பிரசவத்திலிருந்து 27 நாள்களுக்கு உள்ளாகக் குழந்தை மரணமடைவதைக் குறிப்பிடுகிறது. உலகளாவிய அளவில் ஏறத்தாழ முப்பது லட்சம் சிசு மரணம் 2012-இல் பதிவாகி இருக்கிறது. இதில் இந்தியாவின் பங்கு 7,79,000. நமக்கு அடுத்தபடியாகத்தான் மிகவும் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவே வருகிறது.

2012-இல் உலகளாவிய அளவில் இறந்தே பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 26 லட்சம் என்றால், அதில் இந்தியாவின் பங்கு ஆறு லட்சம். இறந்தே பிறக்கும் குழந்தைகளில் பெரும்பாலானவை பிரசவத்தை ஒட்டித்தான் இறக்கின்றன என்பதால், முறையான மருத்துவக் கண்காணிப்பு இருந்திருந்தால் அவை தடுக்கப்பட்டிருக்கலாம்.

இறந்து பிறக்கும் குழந்தைகள் மட்டுமல்ல, பிறந்ததும் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையையும் தகுந்த மருத்துவக் கண்காணிப்பின் மூலம் கணிசமாகத் தடுக்கலாம். பிரசவ நாளில் மரணமடையும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில்தான் நிகழ்கின்றன. அதுமட்டுமல்ல, இந்தியாவில் ஐந்து வயதுக்குக் கீழேயுள்ள குழந்தை மரணங்களில் 56% மரணங்கள் சிசுமரணங்கள்.

உலகிலேயே அதிகமான பேறுகால மரணம், குறைய மறுக்கும் சிசுமரண எண்ணிக்கை, உயர மறுக்கும் அடிப்படைக் கல்வியின் தரம் என்று ஒருபுறம் சாதனை படைத்துக் கொண்டு, இன்னொருபுறம் இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சி பற்றிக் கனவு கண்டு கொண்டிருக்கிறோமே, அதுதான் வேடிக்கையாக இருக்கிறது. கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குகிறோமோ என்கிற ஐயப்பாடு எழுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.