மோடிக்கு மரியாதை சேர்க்காது!
பாரதிய ஜனதா கட்சியில் தலைமுறை மாற்றம் ஏற்பட்டிருப்பதன் அடையாளம்தான் கட்சியின் அகில இந்தியத் தலைவராக 49 வயது அமித் ஷா நியமிக்கப்பட்டிருப்பது.


பாரதிய ஜனதா கட்சியில் தலைமுறை மாற்றம் ஏற்பட்டிருப்பதன் அடையாளம்தான் கட்சியின் அகில இந்தியத் தலைவராக 49 வயது அமித் ஷா நியமிக்கப்பட்டிருப்பது. வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி தலைமுறைக்குப் பிறகு, ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், வெங்கய்ய நாயுடு போன்றோரின் தலைமுறையையும் கடந்து, இப்போது நரேந்திர மோடி - அமித் ஷா தலைமுறையினரிடம் பா.ஜ.க. சென்று விட்டிருக்கிறது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், பலமான கட்சித் தலைமையும், பலவீனமான பிரதமரும் என்று இருந்தது போய், இனிமேல் பா.ஜ.க. ஆட்சியில் சர்வ வல்லமை படைத்த பிரதமர் அலுவலகமும் அதற்கு அனுசரணையான கட்சித் தலைமையும் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல. பண்டித ஜவாஹர்லால் நேரு
ஆட்சிக் காலத்திலும், வாஜ்பாய் தலைமையிலான முந்தைய பா.ஜ.க. ஆட்சிக் காலத்திலும்கூட, பிரதமர் அலுவலகத்துக்குக் கீழ்ப்படிதலாக உள்ள கட்சித் தலைமைதான் காணப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சி, குஜராத் மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடியை ஓர் ஆண்டுக்கு முன்னால் கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுவின் தலைவராக நியமித்தபோது, அவர் எடுத்த முதல் முடிவு அமித் ஷாவிடம் உத்தரப் பிரதேசத்தின் தேர்தல் பொறுப்பை ஒப்படைத்ததுதான். அமித் ஷாவால் மட்டுமே உத்தரப் பிரதேசத்தை பா.ஜ.க.வுக்கு சாதகமாகத் திருப்ப முடியும் என்பதை நரேந்திர மோடி நன்றாகவே உணர்ந்திருந்தார்.
உத்தரப் பிரதேச வரலாற்றிலேயே இல்லாத வகையில் 80 மக்களவைத் தொகுதிகளில் 73 இடங்களில் பா.ஜ.க. அணியை வெற்றி பெறச் செய்ததிலும், சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் போன்ற எல்லாக் கட்சிகளையும் இருக்கும் இடம் தெரியாமல் செய்ததிலும் அமித் ஷாவின் பங்கு அபரிமிதமானது. இந்த வெற்றிக்காக அமித் ஷா மத உணர்வுகளைத் தூண்டினார் என்பதையும், பல்வேறு விதமான உத்திகளை கையாண்டார் என்பதையும் மறுப்பதற்கில்லை. அரசியலில், வெற்றிதான் முக்கியமே தவிர, அது எப்படி சாத்தியமாயிற்று என்பதை எவரும் பொருள்படுத்துவதில்லை என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்ட நிலையில், அமித் ஷாக்கள் இன்றியமையாதவர்களாகி விட்டனர்.
அமித் ஷாவின் அரசியல் திறமைகள் பற்றி யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அதே நேரத்தில், கட்சித் தலைவராக, அதிலும் குறிப்பாக, மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கட்சியின் தலைவராக அமித் ஷாவைப் பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரைத்து நியமித்திருப்பது தார்மிக ரீதியில் சரிதானா என்கிற கேள்விக்கு, மனசாட்சியுடைய யாரும் ஆம் என்று பதிலளித்து விடவும் முடியாது.
குற்றம் சாட்டப்பட்டிருப்பதாலேயே ஒருவர் குற்றவாளி என்றாகி விடுவதில்லைதான். அதற்காக, குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நிலையில், ஒருவர் கட்சியின் தலைமைப் பதவியில் நியமிக்கப்படுவது என்பது எப்படி சரியானதாக இருக்கும்? சொராபுதீன் போலி துப்பாக்கிச் சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முக்கியமான குற்றவாளியும், சூத்திரதாரியும், அப்போது குஜராத் மாநில உள்துறை இணை அமைச்சராக இருந்தவருமான அமித் ஷா 2010இல் அந்த வழக்கின் பின்னணியில் பதவி விலகியவர். கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டவர். அந்த வழக்குகள் இன்னும் முடியவில்லை.
மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் தலைவராகவும், பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும் இருக்கும் அமித் ஷா தொடர்பான வழக்குகளில் அதிகாரிகள் இனிமேல் துணிந்து எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது. அதுமட்டுமல்ல, எந்த அளவுக்கு அரசு நிர்வாகத்தில் கட்சித் தலைவர் அமித் ஷாவின் தலையீடு இருக்கும் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். அதனால் ஏற்படும் சிறிய தவறுகள்கூடப் பிரதமர் நரேந்திர மோடியின் மீதான நல்லெண்ணத்தையும், மதிப்பையும் தகர்த்துவிடக் கூடும்.
தனது வலது கரமாக குஜராத்தில் செயல்பட்ட அமித் ஷாவை, பா.ஜ.க.வின் தேசியத் தலைவராக்கித் தன்னுடன் தில்லிக்கு அழைத்து வந்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இதன் மூலம் நிர்வாகத்தை மட்டுமல்ல, கட்சியையும் தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் பிரதமர் கொண்டு வந்திருக்கிறார்.
அமித் ஷாவைத் தலைவராக்குவதன் மூலம் நடக்க இருக்கும் தில்லி, ஹரியாணா, மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், பிகார், அஸ்ஸாம் போன்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் கட்சியின்
வெற்றியை நரேந்திர மோடி உறுதிப்படுத்த நினைக்கலாம். ஆனால், இந்த நியமனத்தின் மூலம் பிரதமர் மீதான மரியாதை அதிகரிக்குமா என்றால், நிச்சயமாக அதிகரிக்காது. நரேந்திர மோடி அவசரப்பட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...