தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

"பிரிக்ஸ்' மாநாடும் பிரதமரும்!

தனது பதவி ஏற்பு விழாவுக்கு தெற்காசிய நாடுகளின் தலைவர்களை அழைத்ததும், தனது முதல் அரசுமுறை வெளிநாட்டுப்

Updated On :14 ஜூலை 2014, 11:08 pm

தனது பதவி ஏற்பு விழாவுக்கு தெற்காசிய நாடுகளின் தலைவர்களை அழைத்ததும், தனது முதல் அரசுமுறை வெளிநாட்டுப் பயணத்திற்கு அண்டை நாடான பூடானைத் தேர்ந்தெடுத்ததும், மாநில முதல்வராக இருந்து பிரதமராகி இருக்கும் நரேந்திர மோடி, தனது சர்வதேச அரசியல் பிரவேசத்திற்கான தயார்படுத்தல்கள். இப்போது, பிரேசில் நாட்டின் ஃபோர்டாலிசாவில் நடைபெறும்

ஆறாவது "பிரிக்ஸ்' நாடுகளின் உச்சி மாநாட்டிற்குச் சென்றிருப்பதுதான் நரேந்திர மோடியின் சர்வதேச அரசியல் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தப் போகிறது

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளும் இணைந்த "பிரிக்ஸ்' என்கிற சர்வதேச அமைப்பின் முக்கியத்துவம் சாதாரணமானதல்ல. உலக மக்கள்தொகையில் 40% மக்கள் வாழும் நாடுகளின் கூட்டமைப்பு இது என்பதையும், இந்த நாடுகளின் மொத்த உற்பத்தி மதிப்பு (ஜி.டி.பி.) 24 டிரில்லியன் டாலர்கள், அதாவது, 24 லட்சம் கோடி டாலர்கள் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

அமெரிக்காவின் மேலாதிக்கத்தைத் தடுத்து நிறுத்த சோஷலிச நாடுகளுக்கு பயன்பட்ட "பிரிக்ஸ்' என்கிற ஆயுதத்தை, நரேந்திர மோடி அரசால் ஆக்கபூர்வ பொருளாதார வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படுவதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தின் வெற்றியாக இருக்கும். பிரதமர் நரேந்திர மோடி பத்திரிகையாளர்களுக்கு பதிலாக இந்தியாவிலிருந்து தொழில்துறை அமைப்புகளின் பிரதிநிதிகளைத் தன்னுடன் அழைத்துச் சென்றிருப்பதிலிருந்து, பிரதமரின் "பிரிக்ஸ்' விஜயம் அரசியலைவிடப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் விஜயமாக இருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது. தன்னுடன் வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமனையும், வர்த்தகத் துறைச் செயலரையும் உடன் அழைத்துச் சென்றிருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

ஃபோர்டாலிசாவில் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பல வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன. முதல் முறையாகப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாதிமிர் புதினையும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கையும் தனித்தனியே சந்திக்க இருக்கிறார். இந்தச் சந்திப்புகள் எந்த அளவுக்கு தனிப்பட்ட நட்பாக மலரும் என்பதைப் பொருத்துத்தான், அந்த நாடுகளுடனான இந்திய உறவும் அமையும் என்பதுதான் அதன் முக்கியத்துவம்.

பிரேசில் அதிபர் தில்மா ரூசெஃப், தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா இருவரையும் சந்தித்து, நட்புறவு ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் அவருக்கு அமைய இருக்கிறது. பிரேசில் அதிபர் தில்மா ரூசெஃப், 11 தென் அமெரிக்க நாடுகளின் அதிபர்களையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தையொட்டி, "பிரிக்ஸ்' மாநாட்டில் கலந்துகொள்ள அவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதே அதற்காகத்தான்.

"பிரிக்ஸ்' மாநாடு என்ன சாதித்துவிட முடியும் என்று கேட்டால், முதலில் உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகியவற்றைப் போல நீண்ட நாள்களாக இருந்துவரும் கனவான "பிரிக்ஸ்' வளர்ச்சி வங்கி என்கிற அமைப்பை உருவாக்க முடியும். ஐ.நா. சபையின் பாதுகாப்புக் குழு உறுப்பினராக இந்தியாவும் சேர்க்கப்பட வேண்டும் என்கிற இந்தியாவின் நீண்டநாள் கோரிக்கைக்கு ரஷியாவையும், சீனாவையும் ஆதரவளிக்கச் செய்ய முடியும். தென் அமெரிக்க நாடுகளுடனான வர்த்தகத்தைக் கணிசமாக அதிகரிக்கவும், ரஷியா மற்றும் சீனாவுடனான பிரச்னைகளை விவாதித்துத் தீர்த்துக் கொள்ளவும் "பிரிக்ஸ்' விஜயத்தைப் பிரதமர் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

சர்வதேசப் பிரச்னைகளில், ரஷியாவும் சீனாவும் எடுக்கும் நிலைப்பாடுகளுக்கு ஒத்தூதும் போக்குக்கு நாம் இடமளித்துவிடக் கூடாது. குறிப்பாக, உக்ரைனில் ரஷியாவின் நடவடிக்கைகளை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது போன்ற வற்புறுத்தல்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி செவிசாய்த்துவிடக் கூடாது. அதேநேரத்தில், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள், தங்களது பொருளாதாரக் கொள்கைகளை வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் மீது திணிப்பதை எதிர்ப்பதற்கு, இந்தியா "பிரிக்ஸ்' அமைப்பையும், அதன் உறுப்பினர் நாடுகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடியின் முதல் சர்வதேசப் பயணம், இந்தியாவின் வருங்கால வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்கப் போகிறது என்பதை வெளிப்படுத்துவதாக இருந்தால்தான், இந்தப் பயணம் வெற்றி பெற்றதாகக் கருத முடியும். இந்தப் பயணத்தின் வெற்றியில்தான் பிரதமர் நரேந்திர மோடியின் சர்வதேச அங்கீகாரம் அடங்கி இருக்கிறது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.