/

இதற்கா இத்தனை விவாதம்?

மக்களவைத் தேர்தல் படுதோல்வி, காங்கிரஸ் கட்சியை நிலை குலைய வைத்திருக்கிறது என்பது மட்டுமல்ல, மீண்டும் தன்னை வலுவான அரசியல் இயக்கமாக மாற்றிக் கொள்ளும் தன்னம்பிக்கையையும் இழக்க வைத்திருக்கிறது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:51 am

ஆசிரியர்

மக்களவைத் தேர்தல் படுதோல்வி, காங்கிரஸ் கட்சியை நிலை குலைய வைத்திருக்கிறது என்பது மட்டுமல்ல, மீண்டும் தன்னை வலுவான அரசியல் இயக்கமாக மாற்றிக் கொள்ளும் தன்னம்பிக்கையையும் இழக்க வைத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் வெறும் 44 இடங்கள் மட்டுமே கிடைத்திருக்கும் நிலையில், காங்கிரஸின் செயல்பாடுகள் அந்தக் கட்சியின்மீது மக்களுக்கு நல்லெண்ணம் ஏற்படுத்துவதாக அமையவில்லை.

கடந்த முறை காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, பாரதிய ஜனதா கட்சியும் பிற எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து நாடாளுமன்றம் செயல்பட முடியாமல் அவை நடவடிக்கைகளை முடக்

கியது உண்மை. அப்படி அவர்கள் முடக்கியதற்கு சில வலுவான காரணங்கள் இருந்தன. 2ஜி அலைக்கற்றை முறைகேடு, ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நடந்த முறைகேடுகள், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு என்று ஒன்றன் பின் ஒன்றாக ஊழல்களும் முறைகேடுகளும் நீதிமன்றத்தால் தட்டிக் கேட்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும் அவையை முடக்கி முறையான விசாரணை நடத்த அரசை வற்புறுத்தின.

இப்போது அப்படிப்பட்ட அசாதாரணமான பிரச்னையோ, முறைகேடோ, ஊழலோ தலையெடுக்காத நிலையில், தாங்கள்தான் எதிர்க்கட்சி என்று காட்டுவதற்காகவும், காங்கிரஸ் என்கிற கட்சியை

மக்கள் ஒரேயடியாக மறந்துவிடக் கூடாது என்பதற்காகவும், நரேந்திர மோடி அரசின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடரையே விலைவாசியைக் காரணம் காட்டி நடக்க விடாமல் முடக்கிய காங்கிரஸ் தலைமையைப் பார்த்துப் பரிதாபப் படத்தான் முடிகிறது.

ஏற்கெனவே மக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தியும், அந்தக் கட்சி தலைமையின் மீது கோபமும் இருக்கும் நிலையில், அவர்களது ஆட்சியால் ஏற்பட்டிருக்கும் விலைவாசி உயர்வு பிரச்னைக்காக நாடாளுமன்றத்தை முடக்க காங்கிரஸ் முற்பட்டதும், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது கூச்சலும் அமளியும் ஏற்படுத்தியதும், பொதுமக்களை மேலும் முகம் சுளிக்கத்தான் வைக்குமே தவிர, காங்கிரஸ் மீதான மரியாதையை அதிகரிக்கவோ, அந்தக் கட்சிக்கு ஆதரவாக மாறவோ செய்யாது என்பதை காங்கிரஸ் தலைமை புரிந்து கொள்ளவில்லை.

காங்கிரஸ் தனக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து தரப்பட வேண்டும் என்று போராடுவது இன்னொரு விசித்திரம். 1969ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுபட்டபோது, ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தலைவரான ராம் சுபாக் சிங்தான் முதல் முதலில் எதிர்க்கட்சித் தலைவர் என்கிற அந்தஸ்தைப் பெற்றார். மக்களவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 10 விழுக்காட்டுக்கும் அதிகமான இடங்களைப் பெறும் கட்சிக்குத்தான் அந்த அந்தஸ்து தரப்பட வேண்டும் என்கிற நடைமுறை இருக்கிறது.

காங்கிரஸýக்கு 55 உறுப்பினர்கள் இல்லாத நிலையிலும், தங்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து தரப்பட வேண்டும் என்று சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பிடிவாதம் பிடிப்பதற்குக் காரணம், எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துவிட்ட கட்சி, காலப்போக்கில் மக்களின் ஆதரவையும் இழந்துவிடுமோ என்கிற பயம்தான். அகில இந்திய ரீதியில் கட்சி அமைப்புகளைப் பலப்படுத்துவதை விட்டுவிட்டு, காங்கிரஸ் தலைமை எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு ஆலாய்ப் பறப்பது, எந்த அளவுக்கு அக் கட்சி சிந்திக்கும் திறனை இழந்து விட்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு.

1977 முதல்தான், எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது அங்கீகரிக்கப்பட்டு, அதற்கான சம்பளம், இன்னபிற அங்கீகாரங்கள்

நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது ஜனநாயகத்தில் இன்றியமையாத ஒன்று என்பதால், தங்களுக்குப் போதிய எண்ணிக்கை இல்லாவிட்டாலும், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அந்த அந்தஸ்து தரப்பட வேண்டும் என்பது காங்கிரஸின் பிடிவாதம்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், மத்திய தகவல் ஆணையம், லோக்பால், தேசிய மனித உரிமை ஆணையம்

ஆகியவற்றிற்கு ஆணையர்கள் நியமிக்கப்படும்போது, ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் எதிர்க்கட்சித் தலைவரும் இருத்தல் வேண்டும் என்கிறது சட்டம். காங்கிரஸ்தான் எதிர்க்கட்சியாக இருந்தாக வேண்டும் என்பது இல்லை. ஆனால், எதிர்க்கட்சித் தலைவராக ஒருவர் அடையாளப்படுத்தப்படுவது நல்லது.

மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், எல்லா எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் கூட்டி, வாக்கெடுப்பின் மூலம் எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுத்தால் என்ன? இதற்குப் போய் பா.ஜ.க.வும் காங்கிரஸýம் எதற்காக வரிந்து கட்டிக் கொண்டு சண்டை போட வேண்டும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.