டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

வேண்டாமே விரோதம்!

மீனவர்கள் பிரச்னை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பலமுறை கடிதம் எழுதியதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவில் மிகவும் சிக்கலானதாக உருவெடுத்துள்ள மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக...

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:04 am

ஆசிரியர்

மீனவர்கள் பிரச்னை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பலமுறை கடிதம் எழுதியதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவில் மிகவும் சிக்கலானதாக உருவெடுத்துள்ள மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக, இரு நாட்டு மீன் வளத் துறை அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தைக்கான முன்முயற்சியை மத்திய அரசு எடுத்தது. தில்லியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்தியத் தரப்பில் மத்திய வேளாண், மீன் வளத் துறை அமைச்சர் சரத் பவாரும், இலங்கைத் தரப்பில் அந்த நாட்டின் மீன் வளத் துறை அமைச்சர் ராஜித சேனாரட்ணாவும் கலந்து கொண்டனர். இரு நாடுகளிலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் படிப்படியாக விடுவிப்பது என அந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, முதல் கட்டமாக இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 51 தமிழக மீனவர்களும், தமிழகச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 52 இலங்கை மீனவர்களும் விடுவிக்கப்பட்டு அவரவர்களுடைய தாயகம் திரும்பியுள்ளனர். இதனிடையில், இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த நாகை, மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 121 மீனவர்களையும் அந்த நாட்டு நீதிமன்றம் விடுவித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், தமிழக சிறைகளில் உள்ள 61 இலங்கை மீனவர்களும் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வருகிற 20 ஆம் தேதி இரு நாடுகளின் மீனவர் பிரதிநிதிகள் இடையே சென்னையில் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு ஏற்படுவதற்கு நல்லதொரு தொடக்கமாக மீனவர்களின் விடுதலை அமைந்துள்ளது.

கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்த பிறகு, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கச்சத்தீவை ஒட்டியுள்ள பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பது பிரச்னையல்ல. அவர்கள் அதையும் தாண்டி, இலங்கையின் கடல் பரப்பில் மீன் பிடிப்பதுதான் பெரும் பிரச்னையாக உள்ளது என அந்த நாட்டு மீனவர்கள் கூறுகின்றனர். இலங்கையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சண்டை முடிவுக்கு வந்த பிறகு, தற்போதுதான் தாங்கள் மீண்டும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், தங்களது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் தமிழக மீனவர்களின் செயல்பாடுகள் உள்ளதாகவும் இலங்கை மீனவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

தமிழக மீனவர்கள் இரட்டை மடி, சுருக்கு மடி உள்ளிட்ட வலைகளையும், இழுவைப் படகுகள், டைனமைட் ஆகியவற்றையும் பயன்படுத்துவதால் மீன் வளமும், மீன் குஞ்சுகள் வளர்வதற்கான இயற்கை வளமும் அழிந்து வருவதாகவும் இலங்கை மீனவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்திய கடல் பகுதியில் மீன் பிடிபாடு குறைந்ததால், தமிழக மீனவர்கள் தற்போது தங்களது எல்லையைத் தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் மீன் பிடிப்பதால் பிரச்னை ஏற்படுவதாகவும், இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் இலங்கை மீனவப் பிரதிநிதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மீனவர்களின் இந்தக் கருத்துகளை நாம் ஒட்டுமொத்தமாகப் புறந்தள்ளிவிட முடியாது. ஏனெனில், தமிழக மீனவர்கள் தடையை மீறி இரட்டை மடி, சுருக்கு மடி வலைகள் பயன்படுத்துவதை நமது மீன் வளத் துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது உண்மைதான். அதேநேரத்தில், தமிழக மீனவர்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு, இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சுமுகமான தீர்வை எட்ட முழு மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இந்தியா, இலங்கை கடல் பரப்பில் அமைந்துள்ள பாக் நீரிணைப் பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் இணைந்து மீன் பிடிப்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். அல்லது மாதத்தில் குறிப்பிட்ட சில நாள்களுக்கு தமிழக மீனவர்களும், வேறு சில நாள்களுக்கு இலங்கை மீனவர்களும் மீன் பிடித்துக் கொள்ளும் வகையில் ஒரு தெளிவான அட்டவணையை தயாரித்து, அதை நடைமுறைப்படுத்தலாம். மீன் வளத்தைப் பாதிக்கக் கூடிய எந்தவொரு மீன்பிடி சாதனத்தையும் பயன்படுத்துவதில்லை என இரு நாட்டு மீனவர்களும் முடிவு எடுக்க வேண்டும்.

மீன்வளம் என்பது இயற்கை அளித்த கொடை. கடல் என்பது மனித இனத்துக்குப் பொதுவான சொத்து. இதைப் பயன்படுத்துவதில் சண்டை சச்சரவுக்கு இடமிருத்தல் கூடாது. தெளிவான புரிந்துணர்வுக்கு இரு நாட்டு அரசுகளும் வழிகோல வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.