டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அணுகுமுறை மாற்றம் அவசியம்!

மத்திய அமைச்சரவையின் பொருளாதாரக் குழு, மருத்துவக் கல்வியில் பல புதிய மேம்பாடுகளைச் செய்வதற்கு அனுமதி அளித்துள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:04 am

ஆசிரியர்

மத்திய அமைச்சரவையின் பொருளாதாரக் குழு, மருத்துவக் கல்வியில் பல புதிய மேம்பாடுகளைச் செய்வதற்கு அனுமதி அளித்துள்ளது. முதலாவதாக, இந்தியாவில் 58 புதிய மருத்துவக் கல்லூரிகளை ஏற்படுத்தி 5,800 எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிக்க வழிகோலியிருக்கிறது. ஜனவரி 2 அன்று எடுக்கப்பட்ட இந்த முடிவைத் தொடர்ந்து இன்னொரு முடிவையும் எடுத்திருக்கிறது. மத்திய, மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் தற்போதுள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள் அல்லாமல் மேலும் ஆயிரம் இடங்கள் அதிகரிப்பது என்கிற முடிவுக்கும் ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். இந்தியாவைப் பொருத்தவரை இரண்டாயிரம் பேருக்குக்கூட ஒரு மருத்துவர் செயல்படுகிறாரா என்பது சந்தேகமே. இந்த நிலையில், தற்போது இருக்கும் 50,000 மருத்துவக் கல்லூரி இடங்களை 65,800 ஆக அதிகரிப்பதன் மூலம் நிலைமையில் சற்று மாற்றம் ஏற்படுத்த முடியும் என்பதில் சந்தேகமில்லை.

மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பதாலும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை அதிகரிப்பதாலும் மட்டுமே நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுவிடும் என்று நினைப்பது தவறு. அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் சரி, தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் சரி போதுமான அளவு கட்டமைப்பு வசதிகள் இல்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்தவரை, இந்த மாநிலம் அந்த மாநிலம் என்கிற வித்தியாசமே இல்லாமல், அதிகாரிகளின் (ஆட்சியாளர்களின்?) தலையீடு இல்லாமல், கட்டமைப்பு வசதிகளை முறையாக நிர்ணயிக்கவோ திட்டமிடவோ முடியாத நிலையில்தான் மருத்துவக் கல்வி இயக்ககமோ அல்லது மருத்துவப் பல்கலைக்கழகங்களோ இருக்கின்றன என்கிற அவல நிலை.

மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி என்பது சர்வதேச அளவில் மிகப்பெரிய முன்னேற்றங்களைக் கண்டு வருகிறது. புதிய உபகரணங்கள், வழிமுறைகள், ஆய்வுக்கூட அமைப்புகள் என்று மேலைநாடுகளில் காணப்படும் தொழில்நுட்ப ரீதியிலான மேம்பாடுகளில் 25 விழுக்காடு முன்னேற்றம்கூட இந்திய மருத்துவக் கல்லூரிகளில் இல்லை என்பதை அரசு உணர வேண்டும.

அப்படியே கட்டமைப்பு வசதிகள் இருந்துவிடுவதால் மட்டும் மருத்துவக் கல்வி மேம்பாடு அடைந்துவிடாது. மருத்துவக் கல்விக்கான பேராசிரியர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. மருத்துவப் படிப்பு முடிப்பவர்களில் 10 விழுக்காட்டினர் கூட மருத்துவக் கல்வியாளராகத் தயாராக இல்லாத நிலைமை. அப்படியே திறமையான கல்வியாளர்களாக இருப்பவர்கள் மேல்நிலை ஆராய்ச்சி வசதிகளுடனான வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாகச் சென்று விடுகிறார்கள். மீதமுள்ளவர்களும் சரி, அதிக சம்பளம் தரக் காத்திருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் தஞ்சம் அடைந்து விடுகின்றனர்.

தரமான மருத்துவக் கல்லூரிகள் அரசால் நிர்வகிக்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது என்று சொல்லும் அளவுக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகள் பல ஆண்டு பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிலைமை மட்டும் நன்றாக இருக்கிறதா என்றால், மருத்துவப் பட்டங்கள் விற்பனை நிலையங்களாகச் செயல்படும் நிறுவனங்கள்தான் அதிகம். இங்கே, ஆசிரியர் - மாணவர் விகிதாச்சார இடைவெளி ஒருபுறம்; போதுமான ஆராய்ச்சிக்கூட உபகரணக் கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருப்பது இன்னொருபுறம்; அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருப்பது போல, நோயாளிகள் பரிசோதனைக்கான வாய்ப்பு இல்லாமல் இருப்பது மற்றொரு புறம்.

மருத்துவப் பட்டம் பெற்றவர்கள், குறைந்தது ஐந்து ஆண்டுகள் நோயாளிகளைப் பரிசோதித்தால்தானே அவர்கள் மருத்துவர்களாகத் தேர்ச்சியடைய முடியும். இப்போதெல்லாம் மாணவர்கள் எம்.பி.பி.எஸ். முடித்த கையோடு மேற்படிப்புக்கு தேர்ச்சித் தேர்வு எழுதுவதில் மூழ்கி விடுகிறார்களே தவிர, முதலில் தங்களை மருத்துவர்களாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற நினைப்பே இல்லாமல் இருக்கிறார்கள். மேலும் மேலும் மேற்படிப்பும், பட்டங்களும் பெற்ற பிறகு "சிறப்பு மருத்துவர்' என்கிற பெயருடன் இந்தப் புத்தகப் புழுக்கள் நோயாளிகளின் தலையெழுத்தைத் தீர்மானித்துக் கொண்டிருக்கும் அவலநிலைக்கு இந்திய மருத்துவக் கல்வி தள்ளப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் தேவை அதிகமான பொது நல மருத்துவர்கள். அதிலும் குறிப்பாக, சேவை மனப்பான்மையுடன் கிராமப்புறங்களிலும், மாவட்ட அளவிலும் பணியாற்றத் தயாராக இருக்கும் மருத்துவர்கள். அதிகரித்த மருத்துவக் கல்லூரி இடங்கள் அதை உறுதிப்படுத்தாதவரை இதனால் நமக்கு எந்த பயனும் இருக்கப் போவதில்லை.

மருத்துவக் கல்லூரிகளை அதிகரிப்பதும், மருத்துவப் படிப்புக்கான இடங்களை அதிகரிப்பதும் அவசியத் தேவை. ஆனால், மருத்துவக் கல்லூரி பற்றிய முழுமையான ஆய்வும் அணுகுமுறையும் அதைவிடத் தேவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.