சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

முடிவல்ல ஆரம்பம்!

பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற பெரும் போராட்டங்களுக்குப் பிறகு, இந்தியாவின் 29ஆவது மாநிலமாக உதயமாகிறது தெலங்கானா.

Updated On :23 பிப்ரவரி 2014, 7:35 pm

பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற பெரும் போராட்டங்களுக்குப் பிறகு, இந்தியாவின் 29ஆவது மாநிலமாக உதயமாகிறது தெலங்கானா. ஆந்திரத்தைப் பிரித்து தெலங்கானா என்கிற தனி மாநிலத்தை உருவாக்க வகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு விட்டது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் அது சட்டமாக்கப்பட்டு, தெலங்கானா மாநிலத்தை ஏற்படுத்துவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்படும்.

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உள்ளது. தேர்தலுக்கு முன்பாக ஒருங்கிணைந்த ஆந்திரத்திலிருந்து தனித் தெலங்கானா மாநிலத்தை உருவாக்கி, தொகுதிகளை மறுவரையறை செய்து நடைமுறைச் செயல்பாட்டுக்கு கொண்டு வருவது சாத்தியமில்லை. எனவே, ஆந்திர சட்டப்பேரவைக்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தொகுதிகளின் அடிப்படையிலேயே தேர்தல் நடத்துவதற்குத்தான் தேர்தல் ஆணையம் ஆயத்தமாக உள்ளதாகத் தெரிகிறது.

ஏனைய மாநிலங்கள் உருவாக்கப்பட்டதற்கும் தெலங்கானா உருவாக்கப்படுவதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. இதுவரை உருவான எல்லா மாநிலங்களும் இரு தரப்பினரின் ஒப்புதலுடனே உருவானதால் பிரச்னைகள் எழவில்லை. தெலங்கானா பிரச்னை அப்படியல்ல. தெலங்கானா ஆந்திராவில் இணைக்கப்பட்டதும் சரி, இப்போது பிரிக்கப்படுவதும் சரி பொதுக் கருத்தின் அடிப்படையிலான இயற்கை நடவடிக்கை அல்ல.

சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் ஹைதராபாத் நிஜாமின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது தெலங்கானா. ஹைதராபாத் இந்தியாவுடன் இணைந்த பிறகு நடந்த 1952 தேர்தலில் ஹைதராபாத் மாநிலத்தின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பி. ராமகிருஷ்ண ராவ். 1953இல் மாநில சீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரையே, தனித் தெலங்கானா மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்பதும், 1961 தேர்தலுக்குப் பிறகு தெலங்கானா சட்டப்பேரவையில் இணைப்புக்கு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருந்தால் மட்டுமே தெலங்கானா ஆந்திரத்துடன் இணைய வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. அதையும் மீறி, தெலங்கானாவின் நலன் பாதுகாக்கப்படும் என்கிற உறுதியுடன்தான் 1956 நவம்பர் 1ஆம் நாள் தெலங்கானா ஆந்திரத்துடன் இணைக்கப்பட்டது.

ஆரம்பம் முதலே இந்த இணைப்பை அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு ஆதரிக்கவில்லை. "விவாகரத்துக்கான ஒப்பந்தத்துடன் நடைபெறும் திருமணம் போன்றது இந்த ஏற்பாடு' என்று தனது அதிருப்தியை அவர் வெளிப்படையாகவே தெரிவித்தார். அவரது தீர்க்க தரிசனம் பொய்க்கவில்லை. 1969, 1972, 2009 என்று அவ்வப்போது தெலங்கானா கோரிக்கையும், ஆந்திரத்திலிருந்து பிரிய வேண்டும் என்கிற கிளர்ச்சியும் எழுந்த வண்ணம் இருந்தன. என்.டி. ராமராவ் அலை மட்டும் ஆந்திரத்தில் வீசாமல் இருந்திருந்தால் எண்பதுகளிலேயே தெலங்கானா மிகப்பெரிய போராட்டமாக வெடித்திருக்கும்.

தெலங்கானா, ஆந்திரம் இரண்டு பகுதிகளிலும் செல்வாக்குள்ள மாநிலத் தலைவர்களோ, மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற தேசியத் தலைவர்களோ இல்லாத நிலையில், கடந்த பத்து ஆண்டுகளாக மீண்டும் தெலங்கானா கோரிக்கை உயர்ந்து, இப்போது தனி மாநிலம் உருவாக இருக்கிறது. உண்மை என்னவென்றால், ஆந்திர மாநிலம் பிரிக்கப்படவில்லை. 1956 நவம்பர் 1ஆம் தேதி ஏற்படுத்தப்பட்ட இணைப்பு ரத்தாகி இருக்கிறது, அவ்வளவே!

தேன் கூட்டில் கை வைத்தது போல, இனி பல கோரிக்கைகள் எழக் கூடும். மாநில சட்டப்பேரவையின் ஒப்புதல் இல்லாமல், இரு தரப்பு கோரிக்கையாளர்களின் சம்மதம் இல்லாமல் மத்திய அரசு தனது முடிவைத் திணிக்கும் தவறான முன்னுதாரணம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் தொடர் விளைவுகள், மத்திய அரசின் மீது மாநிலங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி தேசத்தின் ஒற்றுமைக்கேகூட ஆபத்தாக முடியக்கூடும்.

ஜனநாயகம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தால் மட்டும் செயல்படுவதல்ல. சட்டப்படி நடப்பது மட்டுமே ஜனநாயகம் அல்ல. தார்மிக ரீதியாகவும், மக்களின் மனநிலைக்கு ஏற்றதாகவும் இல்லாமல் போனால், அந்த முடிவுகள் நாடாளுமன்ற, சட்டப்பேரவைகளால் அங்கீகரிக்கப்படுவதாலும், நீதிமன்றங்களால் ஆமோதிக்கப்படுவதாலும் நடைமுறைக்கு வந்துவிடாது.

தெலங்கானாவைத் தொடர்ந்து விதர்பா, ஹரித்பிரதேஷ், டார்ஜிலிங் என்று ஒன்றன்பின் ஒன்றாக பிரிவினைக் கோரிக்கைகள் எழப் போகின்றன. காங்கிரஸ் கட்சியின் குறுகிய அரசியல் கண்ணோட்டத்திற்காக, தேசம் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டி இருக்கும். பிரச்னை முடிந்துவிடவில்லை, இனிமேல்தான் தொடங்கப் போகிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.