தகவல் தொலைத்தொடர்பால் ஏற்பட்டிருக்கும் புரட்சியால் சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது உண்மை. கலாசார சீரழிவுக்கு தகவல் தொலைத்தொடர்பு வழிகோலியிருக்கிறது என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு, இதனால் சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்பதும் உண்மை. "குவளையில் பாதி அளவுக்குத் தண்ணீர் என்பதா, குவளை பாதி காலியாக இருக்கிறது என்பதா' என்பதைப் போன்றதுதான் தகவல் தொலைத்தொடர்பில் ஏற்பட்டிருக்கும் நன்மையும் தீமையும்.
அதிவேகமான தகவல் பரிமாற்றமும், எந்தவிதமான தணிக்கையோ, தடையோ இல்லாத கருத்துப் பரிமாற்றமும் கருத்துச் சுதந்திரத்திற்கு தகவல் தொலைத்தொடர்பால் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பலங்கள். சமூக வலைதளங்களின் மூலம் விரசம் விநியோகிக்கப்படுகிறது என்றும், தகாத உறவுகளுக்கு வழிகோலப்படுகிறது என்றும் கூறப்படுவதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. அதேநேரத்தில், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கவும், தவறுகளைத் தட்டிக் கேட்க ஆதரவு திரட்டவும்கூட இந்த சமூக வலைதளங்கள் உதவுகின்றன எனும்போது, அவற்றால் விளையும் நன்மைகளைத்தான் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படும் விமர்சனங்களும், கேலிச்சித்திரங்களும், கருத்துகளும் அதிகார வர்க்கத்திற்கும், அரசியல் தலைமைக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதில் வியப்படைய ஒன்றுமில்லை. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பற்றிய கேலிச்சித்திரம் வரைந்த கல்லூரிப் பேராசிரியர் கைது செய்யப்பட்டதும், சிவசேனை பற்றிக் கருத்துப் பரிமாறிக் கொண்ட இரண்டு பெண்கள் மகாராஷ்டிரத்தில் கைது செய்யப்பட்டதும் இதற்கு உதாரணங்கள். இதுபோல, இந்தியாவின் பல நிகழ்வுகளில், முகநூல் பதிவுக்காக அதிகாரத்தில் இருப்பவர்கள் காவல்துறையை ஏவி விட்டு பயமுறுத்திய சம்பவங்கள் ஏராளம்.
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66(அ) பிரிவின்படி, உடல் ரீதியாகவோ, கலாசார ரீதியாகவோ பிறரை மிரட்டி இடையூறு செய்பவர்களைக் கைது செய்யவும், அவர்களுக்கு மூன்று ஆண்டுகள்வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கவும் வழிகோலப்பட்டுள்ளது. இந்தப் பிரிவைப் பயன்படுத்தித்தான், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், சமூக வலைதளங்களின் மூலம் நண்பர்கள் தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதைத் தடுக்க முற்படுகின்றனர்.
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66(அ) தவறாகப் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து பல்வேறு சமூக ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு கடந்த 9-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்குப் பதிலளிக்கும் வகையில், மத்திய அரசின் சார்பில் தகவல் தொடர்புச் சட்டம் 2000-த்தில் சட்டப் பிரிவு 66(அ) மறு ஆய்வு செய்யப்படும் என்றும், இதைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பரிமாறிக் கொள்ளப்படும் கருத்துகளுக்காக காவல் துறை கைது நடவடிக்கை எடுப்பதையும், சட்டப் பிரிவைத் தவறாகப் பயன்படுத்துவதையும் தடுப்பதற்குப் போதிய பாதுகாப்புகளை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்திருக்கிறது.
சமூக வலைதளங்களுக்கு முழுமையான சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும் என்கிற வாக்குறுதியையும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. அரசுக்கு எதிரான கடுமையான விமர்சனங்களைக்கூட தடுக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் தெரிவித்திருக்கிறது.
இந்திய தண்டனைச் சட்டத்தில் இருப்பதுபோல, குற்றத்திற்கான அடிப்படை முகாந்திரங்கள் பற்றியும், இன்னின்ன காரணங்கள் இருந்தால் இன்னின்ன சட்டப் பிரிவு என்பதுபோல தெளிவாகவும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-இல் இல்லாமல் இருப்பதுதான் குழப்பத்திற்குக் காரணம்.
தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு திரட்டுவது, பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையில் மக்களின் உணர்வுகளைத் தூண்டுவது போன்ற முயற்சிகளுக்காக சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது தடுக்கப்பட வேண்டும், சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவும் வேண்டும் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், ஆட்சியாளர்களை விமர்சிப்பதற்கு எதிராக இந்தச் சட்டம் பாயுமானால் அது நிச்சயமாக அதிகார துஷ்பிரயோகமாகத்தான் இருக்கும்.
அரசியல் மேடைகளில் கொச்சையாகவும், பச்சையாகவும், எந்தவித ஆதாரமுமில்லாமலும் பேசப்படும் உரைகளைத் தணிக்கை செய்யாதபோது, சமூக வலைதள விமர்சனங்களுக்காக சிலரைக் கைது செய்வதும் அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிப்பதும் எப்படிச் சரியாக இருக்க முடியும்? சட்டம் திருத்தப்பட வேண்டும். கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

