நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

பிரி​வும் உற​வும்!​

நி​ரந்​தர நண்​பர்​க​ளும் இல்லை,​​ நிரந்​த​ரப் பகை​வர்​க​ளும் இல்லை என்​பது மீண்​டும் உறு​திப்​ப​டுத்​தப்​பட்​டி​ருக்​கி​றது.​

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:48 am

ஆசிரியர்

நி​ரந்​தர நண்​பர்​க​ளும் இல்லை,​​ நிரந்​த​ரப் பகை​வர்​க​ளும் இல்லை என்​பது மீண்​டும் உறு​திப்​ப​டுத்​தப்​பட்​டி​ருக்​கி​றது.​ அமெ​ரிக்​கா​வுக்​கும்,​​ கியூ​பா​வுக்​கும் இடையே நில​விய அரை நூற்​றாண்டு கால விரோ​தம் முடி​வுக்கு வந்​தி​ருக்​கி​றது.​ இரண்டு நாடு​க​ளுக்​கும் இடை​யே​யான ராஜீய உறவு மறு​ப​டி​யும் ஏற்​ப​டுத்​தப்​பட்​டி​ருக்​கி​றது.​ இதற்கு முன்​னர் பதவி வகித்த ஒன்​பது அமெ​ரிக்க அதி​பர்​க​ளால் சாதிக்க முடி​யா​ததை பராக் ஒபாமா நடத்​திக் காட்​டி​யி​ருக்​கி​றார்.​

க​டந்த இரண்டு ஆண்​டு​க​ளா​கவே அமெ​ரிக்​கா​வுக்​கும்,​​ கியூ​பா​வுக்​கும் இடையே ரக​சி​யப் பேச்​சு​வார்த்​தை​கள் நடந்து கொண்​டி​ருந்​தன.​ வத்​தி​க​னி​லுள்ள கத்​தோ​லிக்​கத் திருச்​ச​பை​யின் ஆசி​யு​ட​னும்,​​ கனடா அர​சின் உத​வி​யு​ட​னும் நடந்து வந்த இந்த ரக​சி​யப் பேச்​சு​வார்த்தை பல தடை​க​ளை​யும் கடந்து வெற்​றி​யில் முடிந்​தி​ருக்​கி​றது என்​றால்,​​ அதற்கு போப்​பாண்​ட​வர் பிரான்​சிஸ் காட்​டிய அக்​க​றை​தான் கார​ணம்.​ வத்​தி​க​னில் நடந்த இறு​திக்​கட்​டப் பேச்​சு​வார்த்​தைக்​குப் பிறகு,​​ அமெ​ரிக்க அதி​பர் ஒபா​மா​வும்,​​ கியூபா அதி​பர் ரௌல் காஸ்ட்​ரோ​வும் தொலை​பே​சி​யில் உரை​யா​டி​ய​து​டன்,​​ அரை நூற்​றாண்டு விரோ​தம் முடி​வுக்கு வந்​தது.​

இ​ரு நாடு​க​ளுக்​கும் இடை​யே​யான பய​ணம்,​​ வங்​கிப் பரி​மாற்​றம்,​​ வணி​கம் ஆகி​ய​வற்​றுக்​கான விதி​மு​றை​க​ளும்,​​ நடை​மு​றை​க​ளும் தளர்த்​தப்​பட்டு,​​ பிற நாடு​க​ளைப் போலவே கியூ​பா​வும்,​​ அமெ​ரிக்​கா​வு​டன் உறவு வைத்​துக் கொள்​வது என்​பதை இரு தரப்​பி​ன​ரும் ஏற்​றுக் கொண்​டி​ருக்​கி​றார்​கள்.​ அத்​து​டன் இரண்டு நாட்டு சிறை​க​ளி​லும் உள்ள அர​சி​யல் கைதி​கள் விடு​விக்​கப்​பட்டு,​​ அவ​ர​வர் நாட்​டுக்​கு அனுப்​பப்​ப​டு​வர் என்​ப​தும் ஏற்​றுக் கொள்​ளப்​பட்​டி​ருக்​கி​றது.​

1959-இல் நடந்த புரட்​சிக்​குப் பிறகு பிடல் காஸ்ட்ரோ ஆட்​சி​யைக் கைப்​பற்றி கியூபா​வில் கம்​யூ​னிச அரசை நிறு​வி​ய​தைத் தொடர்ந்து எல்லா சொத்​து​க​ளும் நாட்​டு​டைமை ஆக்​கப்​பட்​டன.​ அத​னால்,​​ மிக அதி​க​மாக பாதிக்​கப்​பட்​டது அமெ​ரிக்​கா​தான்.​ அங்கே இருந்த சர்க்​கரை ஆலைத் தொழிற்​சா​லை​க​ளும்,​​ வணி​க​மும் அது​வரை அமெ​ரிக்​கர்​கள் வசம்​தான் இருந்​தன.​

காஸ்ட்ரோ எதிர்ப்​பா​ளர்​க​ளுக்கு ஆத​ர​வாக,​​ கியூ​பா​வின் கம்​யூ​னிச அரசை அகற்றி ஜன​நா​ய​கத்தை ஏற்​ப​டுத்த அமெ​ரிக்கா எடுத்​துக்​கொண்ட அனைத்து முயற்​சி​க​ளும் தோல்​வி​யில் முடிந்​தன.​ அமெ​ரிக்கா கியூபா மீது பொரு​ளா​தா​ரத் தடை விதித்​தது.​ இதை ஏனைய நாடு​கள் ஆத​ரிக்​க​வில்லை என்​றா​லும்​கூட,​​ கியூ​பாவை அந்​தத் தடை பாதிக்​கவே செய்​தது.​

பி​டல் காஸ்ட்ரோ தலை​மை​யில் கம்​யூ​னிச நாடாக கியூபா வெற்​றி​க​ர​மா​கத் தொடர முடிந்​த​தற்​குக் கார​ணம்,​​ அன்​றைய சோவி​யத் யூனி​ய​னின் முழு​ ஆத​ரவு இருந்​த​து​தான்.​ 1991-இல் சோவி​யத் யூனி​ய​னின் வீழ்ச்​சிக்​குப் பிறகு,​​ ரஷியா கியூ​பா​வுக்கு அளித்து வந்த சலு​கை​க​ளை​யும்,​​ மானி​யங்​க​ளை​யும்,​​ ராணுவ ஆத​ர​வை​யும் படிப்​ப​டி​யாக விலக்​கிக் கொண்​டு​விட்​டது.​ 2008-இல்,​​ தனது உடல்​நி​லை​யைக் கருதி பிடல் காஸ்ட்ரோ பதவி விலகி,​​ தனது சகோ​த​ரர் ரௌல் காஸ்ட்​ரோ​வி​டம் பொறுப்பை ஒப்​ப​டைத்​தார்.​

கி​யூபா மீதான பொரு​ளா​தா​ரத் தடையை அகற்ற வேண்​டு​மா​னால் அதற்கு அமெ​ரிக்க நாடா​ளு​மன்​றத்​தின் ஒப்​பு​தல் தேவை.​ இப்​போ​தைய நிலை​யில் இரண்டு அவை​க​ளில் எதி​லும் அதி​பர் ஒபா​மா​வின் ஜன​நா​ய​கக் கட்​சிக்​குப் பெரும்​பான்மை இல்லை என்​பது மட்​டு​மல்ல,​​ குடி​ய​ர​சுக் கட்சி கியூ​பா​வு​ட​னான சுமுக உறவை ஆத​ரிக்​கத் தயா​ரா​க​வும் இல்லை.​

உ​ட​ன​டி​யாக அமெ​ரிக்கா செய்​யக் கூடி​ய​தும்,​​ செய்​யப் போவ​தும் கியூ​பா​வில் தக​வல் தொலைத்​தொ​டர்பை பலப்​ப​டுத்​து​வது.​ ஒரு நாட்​டின் கலா​சா​ரத்​தை​யும்,​​ அர​சி​யல் அமைப்​பை​யும் தகர்க்​க​வல்ல சக்தி வாய்ந்த ஆயு​தம் சமூ​க​வ​லை​த​ளங்​க​ளும்,​​ ஊட​கங்​க​ளும்​தான் என்​பது அமெ​ரிக்​கா​வுக்​குத் தெரி​யாதா என்ன?​

மக்​க​ளால் நான்கு ஆண்​டுகளுக்கு ஒரு முறை தேர்ந்​தெ​டுக்​கப்​ப​டும் அமெ​ரிக்க அதி​பர் இரண்டு முறைக்​கு​ மேல் பதவி வகிக்க முடி​யாது.​ பராக் ஒபா​மா​வுக்கு இது இரண்​டா​வது முறை.​ இதுவரை அவர் பெரு​மைப்​பட்​டுக் கொள்​ளும்​ப​டி​யாக எது​வும் செய்​து​வி​ட​வில்லை.​ நாடா​ளு​மன்ற மேல​வைக்கு நடந்த தேர்​தல்​க​ளில் அவ​ரது ஜன​நா​ய​கக் கட்சி தொடர்ந்து தோல்​வி​யைச் சந்​தித்து வரு​கி​றது.​ இந்த நிலை​யில்,​​ அவர் பத​வியி​லி​ருந்து ஓய்வு பெறு​வ​தற்​குள் தனது சாதனை என்று காட்​டிக்​கொள்ள ஏதா​வது செய்​தாக வேண்​டும்.​

பல்​வேறு குற்​றச்​சாட்​டு​க​ளுக்கு ஆளா​கிப் பதவி விலக வேண்​டி​வந்த அமெ​ரிக்​கா​வின் முன்​னாள் அதி​பர் ரிச்​சர்ட் நிக்​சன்,​​ சீனா​வு​டன் உறவை ஏற்​ப​டுத்​தி​ய​தற்​காக இன்​ற​ள​வும் நினைவுகூரப்​ப​டு​கி​றார்.​ அதி​பர் ஒபா​மா​வின் தவ​று​க​ளும்,​​ தோல்​வி​க​ளும் கியூ​பா​வு​டன் துணிந்து உற​வைப் புதுப்​பித்​தி​ருப்​ப​தன் மூலம் மறக்​கப்​ப​ட​லாம்.​ அவர் இதற்​காக நினை​வு​கூ​ரப்​ப​ட​லாம்.​ அவர் மட்​டு​மல்ல,​​ பிடல் காஸ்ட்​ரோ​வும்​கூ​டத்​தான் -​ சரித்​தி​ரப் புத்​த​கங்​க​ளில்!​

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.