திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இதற்கு எதற்கு அறிக்கை?

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டை விசாரிக்க 2011-இல் அமைக்கப்பட்ட பி.சி. சாக்கோ தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு, தனது 2,670 பக்க அறிக்கையை மக்களவைத் தலைவர் மீரா குமாரிடம் அளித்திருக்கிறது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:33 pm

ஆசிரியர்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டை விசாரிக்க 2011-இல் அமைக்கப்பட்ட பி.சி. சாக்கோ தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு, தனது 2,670 பக்க அறிக்கையை மக்களவைத் தலைவர் மீரா குமாரிடம் அளித்திருக்கிறது. அந்த அறிக்கை முழுமையாக மக்களவைச் செயலகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

1998 முதல் 2009 வரையிலான 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் கட்டண நிர்ணயம் தொடர்பான எல்லா பரிமாணங்களையும் ஆராய்ந்து, முறைகேடு நடந்திருக்கிறதா, அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறதா, தவறு நடந்திருந்தால் அதற்கு யார் பொறுப்பு போன்ற அம்சங்களைப் பற்றிய முழுமையான அறிக்கையை அளிப்பதுதான் பி.சி. சாக்கோ தலைமையில் அமைக்கப்பட்ட 30 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்குப் பணிக்கப்பட்ட வழிகாட்டுதல்.

தலைமைத் தணிக்கை அதிகாரி குறிப்பிட்டிருக்கும் அரசுக்கான இழப்பும், அதற்கு அவர் கையாண்ட வழிமுறைகளும் தவறு என்கிறது அறிக்கை. அப்படியானால், இழப்பை எப்படிக் கணக்கிட்டிருக்க வேண்டும், அதன்படி எவ்வளவு இழப்பு ஏற்படும் என்பதைக் கூட்டுக் குழு தெளிவுபடுத்தியிருக்கலாமே, யார் தடுத்தது? ஐந்து முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டும் ஏன் செய்யவில்லை?

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டின் அடிப்படைக் கேள்வி 2001-இல் ஓர் உரிமத்துக்கான கட்டணம் ரூ. 1,658 கோடி என்றால், 2008-இல் அதன் மதிப்பு எவ்வளவாக இருந்திருக்க வேண்டும் என்பதுதான். 2001-இல் இருந்த ரூபாயின் மதிப்பல்ல 2008-இல் இருந்தது என்பது கிடக்கட்டும். 2008-இல் 2001-இல் இருந்ததைவிட பயனாளிகளின் எண்ணிக்கை 75 மடங்கு அதிகரித்திருந்ததே, அதையும் கணக்கில் கொள்ள வேண்டாமா என்பதுதான் முறைகேட்டுக் குற்றச்சாட்டின் அடிப்படை. அதைப்பற்றி சாக்கோவின் அறிக்கை மூச்சுவிடவில்லை.

உரிமம் பெற்றவர்கள் செயல்பட விதிக்கப்பட்ட குறைந்தபட்ச செயல்படும் காலம், நிறுவனத்தையோ, உரிமத்தையோ மாற்றி விற்பனை செய்யத் தடை போன்ற நிபந்தனைகள் ஏன் விலக்கிக்கொள்ளப்பட்டன என்பது பற்றி அறிக்கை அக்கறையே காட்டவில்லை. இந்த நிபந்தனை மாற்றங்களைப் பயன்படுத்தி ஸ்வான், யூனிடெக் போன்ற நிறுவனங்கள் பல கோடி ரூபாய்களை லாபமாக அடைந்தது பற்றியோ, அதன் பின்னணியில் அரசியல் பெருந்தலைகள் இருந்தது பற்றியோ அறிக்கை கவலையே படவில்லை.

லைசென்ஸ் ஒதுக்கீடுக் கடிதத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு அந்த நிறுவனங்கள் அரசு வங்கிகளில் பல கோடி ரூபாய்கள் கடன் பெற அன்றைய அமைச்சர் ஆ. ராசாவும், நிதியமைச்சர்

ப. சிதம்பரமும் உதவினார்கள் என்கிற குற்றச்சாட்டு பற்றியாவது அறிக்கையில் இருக்கிறதா என்றால் இல்லை. நிதியமைச்சர் முறைகேட்டில் கூட்டாளியாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், அரசின் வருமானத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கும் ஒருவர் இழப்பு ஏற்படுவதைத் தெரிந்தே தடுக்காமல் இருந்தது குற்றமல்லவா? பொறுப்பின்மையல்லவா? அதை ஏன் அறிக்கை பதிவு செய்யவில்லை?

அன்றைய தகவல் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா பிரதமருக்குத் தவறாக வழிகாட்டிவிட்டார் என்று குற்றம் சாட்டுகிறது அறிக்கை. 2007 டிசம்பர் 26-ஆம் தேதி ஆ. ராசா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் உரிம ஒதுக்கீடு பற்றிய எல்லா விவரங்களையும் பட்டியலிட்டிருக்கிறார். அமைச்சர் ஆ. ராசா எழுதிய கடிதம் கிடைத்தது என்பதை பிரதமர் கடிதம் மூலம் ஒப்புக்கொண்டிருக்கிறார். தவறு நடக்கிறது என்பது தெரிந்திருந்தும் அவர் அதைத் தடுக்காமல் இருந்தது ஏன்? இதைப்பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஆ. ராசாவுமே கேள்வி எழுப்பினார்களே, அதைப்பற்றி சாக்கோவின் அறிக்கை எதுவுமே சொல்லவில்லையே, ஏன்?

குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் ஆ. ராசா. அவர், தானே நேரில் ஆஜராகி சாட்சியம் வழங்க விரும்புகிறார். அவரை அழைத்து அவரது வாக்குமூலத்தையும் பதிவு செய்தால்தானே விசாரணை முழுமையடையும். அவரைப் பேசவிட்டால் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தையும், பிரதமர் மன்மோகன் சிங்கையும் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் விசாரணைக்கு அழைக்க வேண்டிவரும் என்பதால், தன்னிலை விளக்கம் அளிக்க சாதாரண குற்றவாளிக்குத் தரப்படும் வாய்ப்புக்கூட ஆ. ராசாவுக்கு வழங்கப்படவில்லை. பிறகு, அது என்ன விசாரணை, அது என்ன அறிக்கை?

57 அமர்வுகளும், 175 மணி நேரமும் மட்டுமே சாக்கோ தலைமையிலான நாடாளுமன்றக் குழுவின் சாதனையாகத் தெரிகிறதே தவிர, இந்த அறிக்கையின் மூலம் புதிதாக ஏதாவது வெளிவந்திருக்கிறதா என்று பார்த்தால், எதுவுமே இல்லை. இதற்கு மக்கள் வரிப்பணத்தையும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொன்னான நேரத்தையும் வீணாக்கி இருக்க வேண்டாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.