இதுவல்ல அரசியல்
அரசியல் முதிர்ச்சி உடையவர்கள், படித்தவர்கள் என்று இந்தியாவே பார்த்து வியக்கும் கேரள மாநிலம், எல்லோரும் பாராட்டும் விதத்தில் இல்லை என்பதைத்தான் கேரள முதல்வர் உம்மன் சாண்டி தாக்கப்பட்ட சம்பவம் எடுத்துரைக்கிறது.


அரசியல் முதிர்ச்சி உடையவர்கள், படித்தவர்கள் என்று இந்தியாவே பார்த்து வியக்கும் கேரள மாநிலம், எல்லோரும் பாராட்டும் விதத்தில் இல்லை என்பதைத்தான் கேரள முதல்வர் உம்மன் சாண்டி தாக்கப்பட்ட சம்பவம் எடுத்துரைக்கிறது. கேரள மாநிலம் கண்ணூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்ற முதல்வர் உம்மன் சாண்டியின் கார், கருப்புக் கொடிப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த இடது ஜனநாயக முன்னணி ஆர்ப்பாட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்கள் சரமாரியாக எறிந்த கற்கள் காரின் கண்ணாடியை உடைத்து நொறுக்கியது மட்டுமல்லாமல், முதல்வரின் தலையிலும், மார்பிலும் பலமாக வந்து தாக்கின.
சோலார் மின்சக்தி முறைகேடு தொடர்பாக, முதல்வர் செல்லும் இடத்திலெல்லாம் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று மார்க்சிஸ்ட் கட்சி முடிவெடுத்தது. மக்களாட்சியில் எதிர்ப்பைத் தெரிவிக்க கருப்புக் கொடி காட்டுவதும், ஆர்ப்பாட்டம் நடத்துவதும், பேரணி நடத்துவதும் ஏற்புடையதே என்றாலும், அதில் வன்முறை கலப்பதை அனுமதிக்க இயலாது. ஜனநாயக நாட்டில் விரும்பிய நேரத்தில், விரும்பிய இடத்திற்குப் பயணம் செய்யும் உரிமை ஒரு குடிமகனுக்கே உண்டு எனும்போது, மக்களால் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல்வரின் நடமாட்டத்தை எந்தவொரு பொறுப்புணர்வுள்ள எதிர்க்கட்சியும் தடுக்கவோ, தடை செய்யவோ முயற்சிப்பது கண்டனத்துக்குரியது.
இத்தனைக்கும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் கண்ணூர் மாவட்ட சட்டப்பேரவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இடதுசாரிக் கூட்டணி மாவட்டத் தலைவர்கள் போன்றவர்களின் முன்னிலையில் நடைபெற்றது என்பதுதான் வேடிக்கை. அப்படியானால், தொண்டர்கள் நிகழ்த்திய வன்முறையை கட்சித் தலைவர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் ரசித்து வேடிக்கை பார்த்தார்களா?
கேரளத்தில், குறிப்பாகக் கேரளத்தின் வட மாவட்டங்களில் வன்முறைக் கலாசாரத்திற்கு நீண்டதொரு வரலாறு இருக்கிறது. 1980 முதல் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினருக்கும் இடையே நடக்கும் போராட்டங்களில் பல அரசியல் கொலைகள் நடந்தேறிய வண்ணம் இருக்கின்றன. மார்க்சிஸ்ட் கட்சியின் உள்கட்சித் தகராறுகளில் கட்சிக்காரர்களேகூட கொல்லப்படுவதாகக் கூறப்படுகிறது. தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட புள்ளிவிவரப்படி, 1997 முதல் 2008 வரையிலான இடைவெளியில் மட்டும் 56 அரசியல் கொலைகள் கண்ணூர் மாவட்டத்தில் மட்டுமே நடந்தேறி இருக்கின்றன.
மார்க்சிஸ்டுகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கும் இடையிலான தாக்குதல் கலாசாரத்தில் காங்கிரஸýம், இந்திய யூனியன் முஸ்லிம் லீகினரும்கூட பங்கேற்கத் தொடங்கியபோது, வட கேரளம் அரசியல் கொலைகளின் உலைக்களனானது. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இளைஞரணியைச் சேர்ந்த 22 வயதான அப்துல் சுகூர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கண்ணூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சிச் செயலாளர் பி. ஜெயராஜன் முக்கியக் குற்றவாளி. மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து விலகிய டி.பி. சந்திரசேகரன் கடந்த ஆண்டு மே மாதம் கட்சியின் வழிகாட்டுதல்படி கொல்லப்பட்டதாக, மார்க்சிஸ்ட் தலைவர் எம்.எம். மணி கூறியதன் பின்னணியும் உண்மையும் இதுவரை வெளிவரவில்லை.
கண்ணூர் மாவட்டமும், வட கேரளமும் வன்முறைக் கலாசாரத்தின் உலைக்களனாகத் தொடர்வது கவலைக்குரிய ஒன்று என்றால், அரசியல் கொலைகளுக்குக் கூலிப்படைகளை அழைத்து வருகிறார்கள் என்கிற தகவல் அதைவிட அதிர்ச்சி அளிக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், இப்போது முதல்வர் உம்மன் சாண்டி இடது முன்னணி ஆர்ப்பாட்டக்காரர்களால் கல்லெறிந்து தாக்கப்பட்டிருக்கிறார்.
முன்னாள் முதல்வரும், கேரள எதிர்க்கட்சித் தலைவரும் பழுத்த அரசியல்வாதியுமான வி.எஸ். அச்சுதானந்தன், முதல்வர் உம்மன் சாண்டியை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்திருப்பதும், நடந்த சம்பவத்தைக் கண்டித்திருப்பதும் அவரது அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்துகிறது.
முதல்வர் உம்மன் சாண்டி மீதான தாக்குதல்போல, யாராவது ஒரு இடதுசாரித் தலைவர் மீது கல்லெறியப்பட்டிருந்தால், கேரளாவே ஸ்தம்பித்துப் போகும்படி கடையடைப்பும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றிருக்கும். "சம்பவத்தைப் பெரிதுபடுத்தக் கூடாது, கடையடைப்போ ஆர்ப்பாட்டமோ கூடாது' என்று காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கு முதல்வர் உம்மன் சாண்டி கட்டளையிட்டிருப்பது அவரது பெருந்தன்மையையும், பொறுப்புணர்வையும் காட்டுகிறது.
முதல்வர் உம்மன் சாண்டிக்கும், முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தனுக்கும் இருக்கும் அரசியல் நாகரிகமும், பொறுப்புணர்வும் அடிமட்டத் தொண்டர்களுக்கும் இருந்தால் மட்டுமே, நாம் ஜனநாயகப் பண்புகளைக் கடைப்பிடிப்பதாக அர்த்தம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...