தனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ்காந்தி இருவரும் கொல்லப்பட்டதைப் போலத் தானும் கொல்லப்படலாம் என்றும், அதற்காக பயப்படப் போவதில்லை என்றும், காங்கிரஸின் அறிவிக்கப்படாத பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி ராஜஸ்தான் மாநிலம் அல்வர் மாவட்டம், சுருவில் நடந்த பேரணியில் கூறியிருப்பது அவர்மீது அனுதாபம் ஏற்படுத்துவதற்கு பதிலாக, அவரது முதிர்ச்சியின்மையைத்தான் வெளிப்படுத்துகிறது. அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. நேற்று மத்தியப் பிரதேசம் இந்தூர் நகரில் நடந்த பேரணியில் அதைவிட சிறுபிள்ளைத்தனமான ஒரு கருத்தைத் தெரிவித்துத் தனது அரசியல் முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்தி இருக்கிறார். முசாஃபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களைத் தீவிரவாதத்திற்கு இழுக்க பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. முயற்சித்து வருவதாக மத்திய நுண்ணறிவுப் பிரிவினர் தன்னிடம் தெரிவித்ததாகக் கூறியிருக்கிறார்.