திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

அசாதாரண சாதனை

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) "மங்கள்யான்' விண்கலம் செவ்வாய் கிரகத்தை நோக்கி வெற்றிகரமாக ஏவப்பட்டு பூமியைச் சுற்றத் தொடங்கி இருக்கிறது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:38 pm

ஆசிரியர்

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) "மங்கள்யான்' விண்கலம் செவ்வாய் கிரகத்தை நோக்கி வெற்றிகரமாக ஏவப்பட்டு பூமியைச் சுற்றத் தொடங்கி இருக்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிற்பகல் 2.38 மணிக்கு "மங்கள்யான்' விண்கலத்துடன் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-25 என்கிற ராக்கெட் 43 நிமிடப் பயணத்திற்குப் பிறகு, பூமியிலிருந்து 246 கி.மீ. தொலைவில், விண்வெளியில் 23,566 கி.மீ. கொண்ட நீள்வட்டப் பாதையில் "மங்கள்யான்' விண்கலத்தை நிலைநிறுத்தியது. அடுத்த 25 நாள்கள் பூமியைச் சுற்றிய பிறகு "மங்கள்யான்' விண்கலம் 780 மில்லியன் கி.மீ. தொலைவிலுள்ள செவ்வாய் கிரகத்தை நோக்கித் தனது 300 நாள் பயணத்தைத் தொடர இருக்கிறது. அநேகமாக அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் "மங்கள்யான்' வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் இறங்கி சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்கலத்தை ஏவுவதும், மாற்று கிரகத்தில் இறங்குவதும் உலகுக்குப் புதிய சாதனையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்தியாவுக்கு இது அரிய சாதனை. இதன் பின்னால் நமது விஞ்ஞானிகளின் அயரா உழைப்பும், புத்திசாலித்தனமும் மட்டுமல்ல, குறைந்த செலவில் ஓர் அரிய சாதனையை நிகழ்த்திய தொழில்நுட்பப் புரட்சியும் இருக்கிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நாம் என்ன அமெரிக்காவா, ரஷியாவா, ஐரோப்பாவா, விஞ்ஞானிகளுக்குக் கேட்டதையெல்லாம் அள்ளிக் கொடுத்து அவர்களது ஆராய்ச்சியை ஊக்குவிக்க? வெறும் 450 கோடி ரூபாயில் இப்படி ஓர் அரிய சாதனையை அந்த நாடுகளும், அங்கேயுள்ள விஞ்ஞானிகளும் நினைத்துப் பார்த்திருக்க முடியுமா?

அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியனைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை ஏவியிருக்கும் நான்காவது நாடு என்கிற பெருமையை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்திருக்கிறார்கள் கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான "இஸ்ரோ' விஞ்ஞானிகள். 1974இல் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் ஊக்குவித்தலில் முதலாவது "பொக்ரான்' அணு சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் நமக்குத் தொழில்நுட்ப உதவி அளிக்க மறுத்து வருகின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. முழுக்க முழுக்க நமது தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்தி செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் ஏவியிருக்கிறோம் என்றால் இது என்ன சாதாரண சாதனையா?

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிப் பயணத்தைத் திரும்பிப் பார்த்தால் வியப்பும் திகைப்பும் பூரிப்புமாக இருக்கிறது. விஞ்ஞானிகள் சி.வி. ராமனும், மேகநாத் சாஹாவும் விண்வெளி அறிவியலுக்கான அடிப்படைக் கொள்கைகளை வகுத்ததிலிருந்து தொடங்குகிறது இந்தியாவின் விண்வெளித் தேடல். விக்ரம் சாராபாயும், ஹோமிபாபாவும் இந்தியாவின் விண்வெளி ஆய்வுகளுக்குப் பிள்ளையார் சுழியிட்டனர். அவர்களது தொலைநோக்குப் பார்வைக்கு நன்றிகூற வேண்டிய தருணம் இது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவரான உடுப்பி ராமச்சந்திர ராவ் என்கிற யு.ஆர்.ராவின் தலைமையில் 1972இல் விண்வெளித் தொழில்நுட்பத்திற்கான அடித்தளம் போடப்பட்டது. 1975இல் ஏவப்பட்ட "ஆர்யபட்டா'வில் தொடங்கி "பாஸ்கரா', "ஆப்பிள்', "ரோகிணி', இன்சாட்-1, இன்சாட்-2 என்று 19 விண்கலன்கள் ஏவப்பட்டன. தட்பவெப்ப நிலையை கண்டறியவும், அதன்மூலம் பருவமழை பற்றிய முன்னறிவிப்புகளைப் பெறவும் விண்வெளி ஆய்வுகளை பயன்படுத்திய பெருமை நமது இந்திய விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உண்டு.

÷2008 அக்டோபர் 2ஆம் நாள் சந்திரனுக்கு "சந்திரயான்-1' விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திக் காட்டிய இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் 2013 நவம்பர் 5ஆம் நாள் செவ்வாய் கிரகத்திற்கு "மங்கள்யான்' விண்கலத்தை வெற்றிகரமாக ஏவி சாதனை புரிந்திருக்கிறார்கள். வான் மண்டலத்திலிருக்கும் நான்காவது கிரகமான செவ்வாயில் மனிதன் வாழத் தகுதியான தட்பவெப்பநிலை இருக்கிறதா என்பதில் தொடங்கிப் பல புதிய தகவல்களை இந்தியா மனித சமுதாயத்திற்கு வழங்க இது வழிகோலக்கூடும்.

பெரும் பணம் இல்லாவிட்டாலும், எங்களாலும் விண்வெளிச் சாதனைகளை நிகழ்த்திக் காட்ட முடியும் என்பதை இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் நிரூபித்து காட்டியிருக்கிறார்கள். இது ஏனைய வளர் பொருளாதார நாடுகளின் விழிகளைத் திறக்கக்கூடும். அவர்களுக்கு இந்தியா வழிகாட்டக் கூடும். நமது விஞ்ஞானிகளுக்கே இது மிகப்பெரிய ஊக்கமாக அமைந்து மேலும் பல சாதனைகளை நிகழ்த்த வழிகோலக்கூடும். இந்தியாவின் மரியாதையை விண்ணளவு உயர்த்திவிட்ட "இஸ்ரோ' விஞ்ஞானிகளின் சாதனைக்கு இந்தியாவே நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது.

இந்தியா, விண்வெளி விஞ்ஞானத்தில் உலக சாதனை படைக்க வேண்டும் என்று கனவு கண்ட நமது முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு இருந்திருந்தால், இந்த சாதனை கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்திருப்பார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.