நம் நாட்டில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கெனவே அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் தகுதிபெற்ற நிலையில் நியூசிலாந்து அணியும் அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. இருப்பினும், நடப்பு ஐசிசி உலகக்கோப்பையில் இதுவரை எண்ணற்ற சாதனைகளும் சுவாரசியங்களும் அரங்கேறியுள்ளன.
இந்திய அணி, தான் விளையாடிய 8 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணியின் தொடர் வெற்றியில் விராட் கோலியின் பங்கு அளப்பரியது. அவர், தொடரில் 8 ஆட்டங்களில் ஆடி 543 ரன்கள் குவித்துள்ளார். இரண்டு சதங்கள், நான்கு அரை சதங்கள் அதில் அடங்கும். குறிப்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 101 ரன்கள் எடுத்த அவர், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் வாழ்நாள் சாதனையையும் சமன் செய்தார்.

இந்தியாவுக்கு நடப்பு உலகக்கோப்பை தொடரில் இன்னும் ஒரே ஒரு லீக் ஆட்டம் மட்டும் இருக்கிறது. நெதர்லாந்துக்கு எதிரான அந்த ஆட்டத்திலேயே கோலி சச்சினின் ஒருநாள் கிரிக்கெட் சாதனையும் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருந்தாலும் இந்த உலகக்கோப்பை தொடர் விராட் கோலிக்கு ரொம்ப ஸ்பெஷல்தான். உலகக்கோப்பையில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை வீரர் மேத்யூஸ் டைம்டு அவுட் முறையில் ஆட்டமிழந்தது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின்போது களத்துக்கு உள்ளே வந்த பிறகு தனது தலைக்கவசத்தை இறுக்கும் பட்டை சேதமடைந்திருந்ததை அறிந்த மேத்யூஸ், பேட்டிங் செய்யாமல் மாற்று தலைக்கவசம் கொண்டு வருமாறு பெவிலியனில் இருந்த தனது அணி வீரர்களிடம் கேட்டுக்கொண்டார். இதற்கு சற்று நேரம் ஆனதால், வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன், ‘டைம் அவுட்’ கேட்டு நடுவரிடம் முறையிட்டார்.

ஐசிசி விதிகளின்படி, விக்கெட் விழுந்த உடன் களத்திற்கு புதிதாக வரும் பேட்டர் 2 நிமிடங்களில் தயாராக இருக்க வேண்டும். தாமதித்தால், பௌலிங் அணி கேப்டன் கோரும் பட்சத்தில் ‘டைம்டு அவுட்’ கொடுத்து சம்பந்தப்பட்ட பேட்டா் வெளியேற்றப்படலாம். அந்த விதிப்படி அவுட் கேட்டு ஷகிப் முறையிட்டாா். நடுவரும் ஷகிப் கோரிக்கையை ஏற்று ‘டைம்டு அவுட்’ கொடுத்து மேத்யூஸை வெளியேற்றினார்.
இதன்மூலம் டைம்டு அவுட் முறையில் ஆட்டமிழந்த உலகின் முதல் கிரிக்கெட் வீரர் ஆனார் மேத்யூஸ். ஆத்திரமடைந்த அவா், பெவிலியன் பகுதியில் திரும்பியபோது தனது தலைக்கவசத்தை தூக்கி வீசி அதிருப்தியை வெளிப்படுத்தினார். இருப்பினும் அதே ஆட்டத்தில் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசனின் விக்கெட்டை வீழ்த்தி மேத்யூஸ் பதிலடி கொடுக்கவும் தவறவில்லை.
ஷகிப் வெளியேறியபோது மேத்யூஸ் அவரை பாா்த்தபடி, தனது கையில் கடிகாரம் இருப்பது போலவும், அதைப் பாா்த்து ‘டைம் அவுட்’ ஆனது போலவும் செய்தாா். 2019 ஐபிஎல் சீசனில் மன்கட் முறையினால் அஸ்வின் எத்தகைய விமர்சனங்களை எதிர்கொண்டாரோ தற்போது அதே விமர்சனங்களையே டைம்டு அவுட் முறையினால் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஷசனும் எதிர்கொண்டு வருகிறார்.

இந்த உலகக்கோப்பையில் ஆப்கனுக்கு எதிராக மேக்ஸ்வெல்லின் ஆட்டத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். மேக்ஸ்வெல் களமிறங்கியபோது ஆஸ்திரேலிய அணி 49 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இதனால் அந்த ஆட்டத்தில் ஆப்கன் அணிக்கே வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் இருந்தது. ஆனால் மேக்ஸ்வெல் அதனை தகர்த்தார்.
51 பந்துகளில் அரைசதம் கடந்த மேக்ஸ்வெல் பின்னர் 77 பந்துகளில் 150 ரன்கள் எடுத்து தோல்வியின் பிடியில் இருந்த ஆஸ்திரேலிய அணியை தனி ஒருவனாக போராடி வெற்றி பெறச் செய்தார். வலியால் களத்தில் துடித்த மேக்ஸ்வெல், ரிட்டயர்ட்ஹர்ட் வாங்கிவிட்டு பெவிலியன் திரும்பிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதிவரை நம்பிக்கை இழக்காத அவர் 128 பந்துகளில் இரட்டை சதம் விளாசி கிரிக்கெட் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்தார். மேக்ஸ்வெல் போராட்டமும் வீண் போகவில்லை. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அரையிறுதிக்குள் நுழைந்தது.
கடைசியாக நடைபெற்ற 3 ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களையும் போட்டியை நடத்திய நாடுகளே கோப்பையை வென்று அசத்தி உள்ளன. அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு இந்தியாவும், 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவும், 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தும் வாகை சூடின. இதனிடையே நடப்பு உலகக்கோப்பை இந்தியாவில் நடப்பதால் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியே இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
தீபாவளி ஸ்பெஷல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இந்த வார ஓடிடி படங்கள்!

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு

போர்நிறுத்தம்! டிரம்ப்பின் அறிவிப்பை மீறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்!
கொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


