ஐந்து நாள்கள் தீபாவளி கொண்டாடும் தஞ்சாவூர் மராத்தியர்கள்!
தீபாவளியை வெகு விமரிசையாகக் கொண்டாடும் தஞ்சாவூர் மராத்தியர்கள் ஒருநாள் விழாவாக மட்டுமல்லாமல், 5 நாள் விழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.


சோழ நாட்டை ஆண்ட மராத்தியர்களின் அரசே தஞ்சாவூர் மராட்டிய அரசு. தஞ்சாவூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். தஞ்சாவூரை தஞ்சை நாயக்கர்களிடமிருந்து போன்சலே குலத்தில் பிறந்த சத்ரபதி சிவாஜியின் இளைய தம்பி வெங்கோஜி என்ற ஏகோஜி 1674 - இல் கைப்பற்றி தஞ்சாவூர் மாராத்திய அரசை நிறுவினார். இவரின் வழித்தோன்றல்கள் தஞ்சை மராத்திய அரசை 1855 முடிய அரசாண்டனர். அப்போது, ஏராளமான மராத்தியர்கள் தஞ்சாவூரில் குடியேறினர். இப்போதும், தஞ்சாவூரில் மராத்திய குடும்பங்கள் பரவலாக வசிக்கின்றன.
தீபாவளியை வெகு விமரிசையாகக் கொண்டாடும் தஞ்சாவூர் மராத்தியர்கள் ஒருநாள் விழாவாக மட்டுமல்லாமல், 5 நாள் விழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
நம் நாட்டின் பிற பகுதிகளில் தீபாவளி கொண்டாடும் விதத்தைவிட மகாராஷ்டிர மாநிலத்தில் வித்தியாசமாகக் கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் பொங்கல் திருநாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவதுபோல, மகாராஷ்டிரத்தில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. எனவே, மகாராஷ்டிர மாநிலத்தில் தீபாவளிக்கு 15 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விழா மராத்தியர்களின் மிகப்பெரிய கொண்டாட்டமாகக் கருதப்படுகிறது. இந்த மரபு தஞ்சாவூர் மராத்தியர்களிடமும் தொடர்கிறது. ஆனால், மகாராஷ்டிர மாநிலத்தில் கொண்டாடப்படுவதைவிட, தஞ்சாவூர் மராத்தியர்களின் தீபாவளி கொண்டாட்டம் சற்று வித்தியாசப்படுகிறது.

இதுகுறித்து தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தின் மராத்தி பண்டிதர் பி. ராமச்சந்திரன் விவரிக்கிறார்...
முதல் நாள்:
தீபாவளிக்கு முந்தைய நாளை தனதிரயோதசி நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதுதான், மராத்தியர்களுடைய தீபாவளி கொண்டாட்டத்தின் முதல் நாள் விழா. இந்த நாளில் மாலையில் சுவாமி பூஜை செய்யப்படும். இதில், கங்கா ஸ்நானம் செய்வதற்கான (எண்ணெய் தேய்த்து குளித்தல்) வெந்நீர் பாத்திரத்துக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, தேங்காய், பழம், புத்தாடைகள், இனிப்புகள் வைத்து வழிபாடு நடத்தப்படும். மறுநாள் அசுரனை வதம் செய்யப்பட்ட நாள் என்பதால் முதல் நாளே இப்பூஜைகள் செய்யப்படும்.
இரண்டாவது நாள்
இரண்டாவது நாளான நரக சதுர்தசி (தீபாவளி நாள்) எனக் கொண்டாடப்படுகிறது. இதில், அதிகாலை சுபமுகூர்த்த வேளையில் வயதில் சிறியவர்களின் தலையில் பெரியோர் எண்ணெய் வைப்பர். அப்போது பூ, வெற்றிலை, பாக்கு வைத்துக் கொடுப்பர். பின்னர், குளித்துவிட்டு பெரியோரிடம் ஆசீர்வாதம் பெறுவர். பின்னர், புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் சாப்பிடுவர். மேலும், ஒருவருக்கொருவர் வாழ்த்துத் தெரிவித்து, பரிசுப் பொருட்களையும் பரிமாறிக்கொள்வர். அதன் பிறகு கோயிலுக்குச் செல்வர்.

முன்பெல்லாம் சில ஆண்டுகளில் அமாவாசை நாளில் நரக சதுர்தசி வரும்போது கொண்டாட்டத்தைத் தவிர்த்துவிடுவோம். அமாவாசை அல்லாமல் வந்தால் இக்கொண்டாட்டங்கள் நடைபெறும். ஆனால், இப்போது கால மாற்றத்தால் மற்றவர்களைப்போல தீபாவளி நாளிலேயே மராத்தியர்களும் கொண்டாடுகின்றனர்.
மூன்றாவது நாள்:
மறு நாளான (மூன்றாவது நாள்) பிரதமை அன்று பலி பாடியா என்ற பெயரில் கொண்டாடப்படும். பலி சக்கரவர்த்திக்கு மகா விஷ்ணு விமோசனம் கொடுத்த நாள் இது. இதை தீபாவளி பண்டிகையின் முக்கிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. அதை முகூர்த்த நாளாகக் கருதப்படுவதால், அன்றைய நாளில் தோஷம் கிடையாது. புனிதமான நாளாகக் கருதப்படுகிறது.
நான்காவது நாள்:
நான்காவது நாளான துதியா திதி நாளில் பாவு பீஜ என அழைக்கப்படும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இத்திருநாளில் அக்கா - தங்கைகள் தங்களுடைய அண்ணன் - தம்பிகளைத் தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்று விருந்தோம்பல் செய்வர். மேலும், சகோதரர்களின் நெற்றியில் திலகமிட்டு, அவர்களுக்குப் புத்தாடைகள் வழங்குவர். அவர்களுக்குத் தட்டில் இரு தீபங்களை ஏற்றி ஆரத்தி எடுத்தும் வழிபடுவர் சகோதரிகள். சகோதரர்களுக்கு உள்ள தோஷங்கள் கழிந்து, ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காக இந்த பூஜை செய்யப்படுகிறது.
ஐந்தாவது நாள்:
ஐந்தாவது நாளில் அக்கதீஜ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அக்கா, தங்கைகளை அண்ணன் - தம்பிகள் தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்று விருந்தோம்பல் செய்வர். மேலும், சகோதரிகளுக்கு புத்தாடைகள் வழங்கி, பூஜைகள் செய்து மகிழ்வர். உறவுகள் வலுப்பட வேண்டும் என்பதற்காக இந்த இரு நாட்களும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
ஆனால், கால மாற்றத்தால் ஏராளமான குடும்பங்கள் வெளியூர்களுக்குக் குடிபெயர்ந்து சென்றுவிட்டன. இதனால், இந்த மரபுகள் அருகி வருவது மட்டுமல்லாமல், வழக்கங்களும் மாறி வருகின்றன. என்றாலும், பெரும்பாலான குடும்பங்கள் கிட்டத்தட்ட இந்த மரபுடன் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர் என்றார் ராமச்சந்திரன்.
தீபாவளி ஸ்பெஷல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...